×

ஜம்மு – இடித்து தரைமட்டமாக்கப்பட்ட போதைப்பொருள் விற்பனையாளர்களின் வீடுகள்..

ஜம்மு: போதைப்பொருள் கடத்தல் மற்றும் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள நபர்களுடன் தொடர்புடைய சொத்துக்கள் மீதான நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஜம்மு நகரின் புறநகர் பகுதிகளில் போதைப்பொருள் விற்பனையாளர்கள் என சந்தேகிக்கப்படும் இருவரின் குடியிருப்புச் சொத்துக்களை மாவட்ட நிர்வாகம் இடித்து தரைமட்டமாக்கி உள்ளது.

மீரன் சாஹிபின் இந்திரா நகர் காலனிக்குள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புல்டோசர்கள் நுழைந்து, அப்பகுதியில் இருந்த இரண்டு போதைப்பொருள் விற்பனையாளர்களின் வீடுகளை இடித்து தள்ளியதாக அங்கிருந்து வந்த தகவல்கள் கூறியுள்ளன. இடித்து தரைமட்டமாக்கப்பட்ட வீடுகளை சேர்ந்த இருவர் மீது NDPS கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த அதிரடி நடவடிக்கை, ‘போதைப்பொருள் இல்லாத ஜம்மு காஷ்மீர் நடவடிக்கை’யின் கீழ் எடுக்கப்பட்டது என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

இந்த நடவடிக்கையின் போது, ​​துணை கோட்டாட்சியர் ஆர். எஸ். புரா, அனுராதா தாக்கூர் மற்றும் துணை கோட்டாட்சிய அதிகாரி குர்மீத் சிங் ஆகியோர் சம்பவ இடத்தில் இருந்தனர். இதேபோன்றதொரு நடவடிக்கையில் சமீபத்தில் ஜம்மு நகரின் ராஜீவ் நகர் பகுதியில் போதைப்பொருள் விற்பனையாளர்கள் என சந்தேகிக்கப்படுபவர்களின் மூன்று குடியிருப்பு சொத்துக்கள் இடிக்கப்பட்டன.

அதே போல கடந்த ஏப்ரல் 18 அன்று, போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய சொத்துக்கள் மீதான மற்றொரு நிர்வாகம் மற்றும் காவல்துறையின் அதிரடி நடவடிக்கையில், நகரின் பெலிச்சரானா பகுதியில் NDPS சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்களின் இரண்டு குடியிருப்பு சொத்துக்கள் தரைமட்டமாக்கப்பட்டன.

இந்த அதிரடி நடவைகள் குறித்து கருத்து தெரிவித்த மூத்த அரசு அதிகாரி ஒருவர், பிரபல போதைப்பொருள் விற்பனையாளர்களுக்கு எதிரான தொடர் நடவடிக்கையின் ஒரு பகுதியே இந்த இடிப்பு நடவடிக்கை என்று குறிப்பிட்டார். போதைப்பொருள் வர்த்தகத்தின் மூலம் சம்பாதித்த பணத்தில் கட்டப்பட்ட சட்டவிரோத கட்டிடங்களே இடிக்கப்படுகின்றன. போதைப்பொருள் வலையமைப்புகள் மற்றும் அவற்றின் சொத்துக்களுக்கு எதிரான இது போன்ற நடவடிக்கை தொடரும் என்று அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.

 

Tags : Jammu ,Meeran ,
× RELATED ஆம் ஆத்மி மூத்த தலைவர் ராகவ் சத்தா...