கொல்கத்தா: மேற்கு வங்கத் தேர்தலில் போட்டியிடும் நட்சத்திர வேட்பாளர்கள், பிரபலங்கள் தங்களது தோற்றத்தின் மூலம் வாக்காளர்களை ஈர்த்து வருகின்றனர். மேற்கு வங்கத்தில் 152 தொகுதிகளுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வரும் 29ம் தேதி நடக்கிறது. இதற்காக அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன. இந்திய அரசியலில் பொதுவாக தலைவர்கள் எளிமையைக் கடைபிடிக்கும் நிலையில், தற்போது மேற்கு வங்கத்தில் தலைமுறை மாற்றம் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாகப் பெண் வேட்பாளர்கள் தங்களது ஆடை மற்றும் தோற்றத்தில் அதிக அக்கறை செலுத்தி வருகின்றனர். சர்வதேச அளவில் நிலவும் தற்போதைய நாகரிக மாற்றங்களை உள்வாங்கி, தங்களை மெருகேற்றிக் கொண்டு தேர்தல் களத்தில் வலம் வருகின்றனர். இது வாக்காளர்கள் மத்தியில் ஒரு புதிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. திரிணமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் நட்சத்திர வேட்பாளர்கள் பிரசாரக் களத்தைக் கவர்ச்சிகரமாக மாற்றியுள்ளனர். முன்னாள் அமைச்சர் சாதன் பாண்டேவின் மகளான ஸ்ரேயா பாண்டே, நேர்த்தியான புடவை மற்றும் நவீன ஒப்பனையுடன் பிரசாரம் செய்கிறார். அதேபோல், ராஜ்யசபா எம்பியான நடிகை கோயல் மல்லிக், மிகக் குறைந்த மேக்கப் மற்றும் நவீன ஹேர்ஸ்டைல் மூலம் முத்திரை பதிக்கிறார்.
மக்களவை எம்பியான சயோனி கோஷ், பருத்திப் புடவைகள், பெரிய பொட்டு மற்றும் கழுத்தில் உள்ள ‘டாட்டூ’ மூலம் துடிப்பான தலைவராகத் தன்னை வெளிப்படுத்துகிறார். திரிணாமுல் காங்கிரஸின் மற்றொரு வேட்பாளரான சயந்திகா பானர்ஜி, தனது பளபளப்பான தோற்றத்தால் வாக்காளர்களை திரும்பிப் பார்க்க வைக்கிறார். அதேபோல், பாஜகவில் இருந்து திரிணாமுல் காங்கிரஸிற்கு மாறிய நடிகை பார்னோ மித்ரா, நீண்ட சுருள் முடி மற்றும் எளிமையான ஒப்பனையுடன் பிரசாரம் செய்கிறார். இவர்களின் பிரசார வாகனங்கள் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
இடதுசாரி இயக்கத்தைச் சேர்ந்த திப்சிதா தார், தனது தோற்றத்தில் ஒரு தனித்துவத்தைப் பெற்றுள்ளார். அவர் ஆடை அலங்காரத்தை விட தனது உரைகளின் வலிமைக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கிறார். இருந்தபோதிலும், அவரது எளிமையான பருத்திப் புடவைகள் மற்றும் தலையில் கண்ணாடி அணிந்து கொள்ளும் விதம் ஒரு புதிய ‘ட்ரெண்டை’ உருவாக்கியுள்ளது. பாஜகவின் இளைஞரணித் தலைவியான பமீலா கோஸ்வாமி, பழங்கால நடிகைகளைப் போன்ற வசீகரத்துடன் தாமரை சின்னத்திற்காக வாக்கு சேகரித்து வருகிறார். புடவை அல்லது குர்தா அணிந்து வரும் அவர், தனது பளபளப்பான சருமம் மற்றும் நீண்ட பின்னல் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்க்கிறார். ஒட்டுமொத்தமாக இந்தத் தேர்தலில் அரசியல் கருத்துகளுக்கு இணையாக, பெண் வேட்பாளர்களின் தோற்றமும் ஒரு முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ளது. அரசியல்வாதிகள் தங்களை அழகாக வெளிப்படுத்திக் கொள்வதில் தற்போது அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர் என்பதையே மேற்குவங்க பிரசார களம் காட்டியது.
