மேதினிபூர்: மேற்கு வங்க மாநிலம் மேதினிபூரில் தேர்தல் பிரசாரத்தின் போது ஏற்பட்ட வன்முறை மோதலில் பாஜக வேட்பாளர் படுகாயமடைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்கத்தில் கடந்த 2021ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில், தாதன் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் விக்ரம் சந்திர பிரதான் வெறும் 623 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில், தற்போது 152 தொகுதிகளுக்கான முதல்கட்ட தேர்தல் நாளை நடக்க உள்ளது.
இந்த தேர்தலில் மொத்தம் 1,478 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதற்காக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் மாநிலம் முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர். இந்நிலையில், மேற்கு மேதினிபூரின் தாதன் பகுதியில் நேற்று பாஜக சார்பில் இறுதிகட்ட பிரசார பைக் பேரணி நடத்தப்பட்டது. ஹரிபூரில் தொடங்கி அந்தலா வழியாக மோகன்பூர் நோக்கிச் சென்ற இப்பேரணியின் போது, திடீரென ஒரு கும்பல் தடிகளாலும் கூர்மையான ஆயுதங்களாலும் தாக்குதல் நடத்தியது.
இதில் பாஜக வேட்பாளரான அஜித் குமார் ஜனா (தொழிலதிபர்) படுகாயமடைந்து அவரது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. மேலும் பாஜக தொண்டர்கள் பலர் காயமடைந்ததோடு, வாகனங்களும் அடித்து நொறுக்கப்பட்டன.
இது குறித்து பாஜகவினர் கூறுகையில்,
‘திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவாளர்களே இந்தத் தாக்குதலை நடத்தினர்’ என்று குற்றம் சாட்டினர். ஆனால் திரிணாமுல் காங்கிரஸ் தரப்பு இந்தக் குற்றச்சாட்டை மறுத்ததோடு, ‘அரசியல் உள்நோக்கத்துடன் பாஜகவினர் கலவரத்தைத் தூண்டுகின்றனர்’ என்று கூறியது. தற்போது அங்கு அசம்பாவிதங்களைத் தவிர்க்க ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
