×

சாலையை மறித்து போராட்டம் நடத்தியதால் பாஜக அமைச்சரை பார்த்து ‘கெட் அவுட்’ கூறிய பெண்: போக்குவரத்து நெரிசலால் மக்கள் ஆவேசம்

மும்பை: மும்பையில் பாஜக சார்பில் நடத்தப்பட்ட போராட்டத்தினால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் சிக்கிய பெண் ஒருவர், மாநில அமைச்சரைச் சந்தித்து ஆவேசமாக முறையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக கூட்டணி சார்பில், எதிர்க்கட்சியான மகா விகாஸ் அகாடிக்கு எதிராக மும்பையின் வொர்லி பகுதியில் பிரம்மாண்ட போராட்டம் நடத்தப்பட்டது. ஒன்றிய அரசு கொண்டு வந்த மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் முட்டுக்கட்டை போடுவதாகக் கூறி இந்த ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டது. வொர்லியின் ஜம்போரி மைதானத்தில் தொடங்கி டோம் பகுதி வரை நடத்தப்பட்ட இந்த பிரசார ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்றனர்.

மாலை 5 மணிக்குத் தொடங்க வேண்டிய இந்த ஊர்வலம் தாமதமானதால், அப்பகுதி முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்நிலையில் தனது குழந்தையைப் பள்ளியிலிருந்து அழைத்து வரச் சென்ற பெண் ஒருவர், பல மணி நேரம் நெரிசலில் சிக்கித் தவித்தார். அந்தப் பெண், ஆத்திரத்தில் தனது காரை விட்டு இறங்கி நேராகப் போராட்டத்தின் நடுவே புகுந்தார். அங்கிருந்த மகாராஷ்டிரா மாநில நீர்வளத்துறை அமைச்சர் கிரீஷ் மகாஜன் மற்றும் போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ‘இங்கிருந்து வெளியேறுங்கள்; மக்கள் நூற்றுக்கணக்கில் காத்துக் கொண்டிருக்கிறார்கள்; அங்கே காலி மைதானம் உள்ளது, அங்கு சென்று போராட்டம் நடத்துங்கள்’ என்று அமைச்சரைப் பார்த்து உரத்த குரலில் கத்தினார்.

போலீசார் அவரைச் சமாதானப்படுத்த முயன்ற போது, அவர்களையும் கடுமையாகச் சாடிய அவர், ‘உயர் அதிகாரிகளுடன் பேச வேண்டும்’ என வலியுறுத்தினார். இந்தப் போராட்டத்தால் பொதுமக்களுக்கு ஏற்பட்ட சிரமங்களை அவர் சுட்டிக்காட்டினார். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

Tags : BJP ,minister ,MUMBAI ,MINISTER OF STATE ,STATE ,Maharashtra ,Maha Vikas Akadi ,
× RELATED பெங்காலி திரைத்துறையில் ஒற்றுமை...