×

தமிழ்நாட்டை இந்தியாவின் நம்பர் 1 மாநிலமாக மட்டுமல்ல தெற்காசியாவின் மாடல் மாநிலமாக மாற்றுவேன்: தேர்தல் பரப்புரை நிறைவு பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு: மாநில உரிமை காக்க மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்களிக்க கோரிக்கை

 

சென்னை: தமிழ்நாட்டை இந்தியாவின் நம்பர் ஒன் மாநிலமாக மட்டுமல்ல, தெற்காசியாவின் மாடல் மாநிலமாக மாற்றிக் காட்டுவேன். மாநில உரிமைக்காக மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என கொளத்தூர் தேர்தல் பிரசார நிறைவு நாள் பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.

திமுக தலைவர், முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் நேற்று மாலை அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பொதுமக்கள் சாலையின் இருபுறமும் திரண்டிருந்து முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பொதுமக்களின் வாழ்த்து மழையில் நனைந்தபடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

திரண்டிருந்த பொதுமக்கள் கூட்டத்தினர் மத்தியில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் பிரசார வாகனம் ஊர்ந்து சென்றது. அந்த அளவுக்கு பொதுமக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. செல்லும் இடங்களில் எல்லாம் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பொதுமக்கள் பூக்களை தூவி வரவேற்றனர்.

தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை, கொளத்தூரில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் பரப்புரை நிறைவுப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: ஒவ்வொரு ஊருக்கும் சென்றபோது, அங்கு போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி வைத்தேன்.

கொளத்தூரில் எனக்கு நானே ‘இன்ட்ரோ’ கொடுத்துக் கொள்கிறேன். உங்களுக்காக உழைத்து இத்தனை திட்டங்களைக் கொளத்தூருக்குக் கொண்டு வந்த உங்களில் ஒருவனான இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுக்கு மூன்று முறை வாய்ப்பு கொடுத்தீர்கள். உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து இன்னொரு முறையும் எனக்கு வாய்ப்பு கொடுங்கள். கொடுப்பீர்களா? கொளத்தூர் வேட்பாளர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் வெற்றி உறுதியா? நன்றி!

நம்முடைய தலைநகரையே தவிக்கவிட்ட ஆட்சிதான் அதிமுக ஆட்சி. சிறிய மழைக்கே வெள்ளத்தில் உங்களைத் தத்தளிக்கவிட்ட ஆட்சி அதிமுக ஆட்சி. நம்முடைய கடந்த 5 ஆண்டு ஆட்சியில், மளமளவெனச் சென்னையின் அனைத்துப் பகுதிகளிலும், மேம்பாலங்கள், மெட்ரோ பணிகள், பூங்காக்கள், நூலகங்கள், முதல்வர் படைப்பகங்கள், மழைநீர் வடிகால்கள், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பாக ஏழைகளுக்கு நகரின் மையப்பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகள், விளையாட்டு மைதானங்கள், குத்துச்சண்டை அகாடமி, நவீன பேருந்து நிலையங்கள், தாழ்தள பேருந்துகள், மின் பேருந்துகள், ஏசி பேருந்துகள் எனப் பட்டியல் போட்டால் போய்க் கொண்டே இருக்கும். அந்த அளவிற்கு வேலை பார்த்திருக்கிறோம்.

அதுவும் வடசென்னை வளர்ச்சித் திட்டம் எனக் கொண்டு வந்து, 8 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கி, உட்கட்டமைப்புகளை மேம்படுத்தி, வடசென்னையின் இமேஜையே மாற்றிவிட்டோம். நிறைய பேர், இப்படி நாம் உருவாக்கிய இடங்களுக்குச் சென்று பார்க்கும்போது, “நம்முடைய சென்னையில் இப்படி ஒரு வசதியா? எப்படி இருந்த இடம் இப்படி மாறிவிட்டது?” என்று கேட்டு ரீல்ஸ் போடுகிறார்கள். அதையெல்லாம் பார்க்கும்போது எனக்கு ஏற்படும் மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகளே இல்லை.

இப்படியாக, அதிமுகவின் 10 ஆண்டு ஆட்சியில் கண்டுகொள்ளப்படாமல் இருந்த சென்னைக்கு, தலைநகருக்குரிய கவனம் இப்போதுதான் கிடைக்கிறது. நம்முடைய ஆட்சியில் தலைநகரைத் தலைசிறந்த நகராக மாற்றி இருக்கிறோம். அடுத்தகட்டமாக, நேற்று முன்தினம் ‘சென்னை சூப்பர் சிக்ஸ்’ என்ற பெயரில் ஒரு சிறப்புச் செயல்திட்டத்தையும் அறிவித்திருக்கிறேன். கடந்த முறையைவிட, அதிக வாக்கு வித்தியாசத்தில் இந்த முறை வெற்றி பெற வேண்டும். எத்தனை பேர் வந்தாலும், சென்னைக்காக உழைக்கும் தி.மு.க. கொடி மட்டும்தான் சென்னையில் பறக்க வேண்டும். பறக்கும்! இது உறுதி.

உங்களுக்கான திட்டங்களையும் வளர்ச்சிப் பணிகளையும் கொண்டு வந்திருக்கிறோம். எடுத்துக்காட்டிற்கு இந்த கொளத்தூர் தொகுதியையே எடுத்துக் கொள்ளுங்கள். இதை ஏன் நான் மாடல் தொகுதி என்று சொல்கிறேன் தெரியுமா? கடந்த 5 ஆண்டில் தமிழ்நாட்டில் முதல் முறையாக முதல்வர் படைப்பகங்கள், முதல்வர் கல்விச் சோலை அமைத்திருக்கிறோம்.

கொளத்தூருக்குத் தேவையான மேம்பாலங்கள் கட்டித் திறந்திருக்கிறோம். அதிக அளவிலான ஏரி, குளங்களைத் தூர்வாரிச் சீரமைத்திருக்கிறோம். நவீன பேருந்து நிலையங்கள், தரமான மருத்துவமனை, வசதியான திருமண மாளிகை, பூங்காக்கள், இளைஞர்களுக்கான மினி ஸ்டேடியம், விளையாட்டுத் திடல்களை அமைத்திருக்கிறோம். புதிதாகக் கல்லூரியைத் தொடங்கியிருக்கிறோம். இப்படி கொளத்தூரில் திரும்பும் பக்கமெல்லாம், புதிய புதிய கட்டமைப்புகளை உருவாக்கியிருக்கிறோம்.

தமிழ்நாடு முழுவதும் என்னுடைய இந்த பிரசார நிறைவு உரையைப் பார்க்கும் என்னுயிர் மக்களே… நாங்கள் ஆட்சிக்கு வந்து முதல் மூன்று ஆண்டுகளில் செய்த சாதனைகளைப் பார்த்தே, நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியாவிலேயே யாரும் பெற முடியாத நாற்பதுக்கு நாற்பது என்ற முழு வெற்றியைப் கொடுத்தீர்கள். அதே போன்று சட்டமன்றத் தேர்தலிலும் நாம் வரலாறு படைக்க வேண்டும். தமிழ்நாட்டின் தொடர் வளர்ச்சிக்காக எங்களுக்குத் தொடர்ச்சியான வெற்றியைத் தர வேண்டும். தொழில்துறை என்று எடுத்துக் கொண்டால், தமிழ்நாடு முழுவதும் இன்றைக்கு அனைத்து மாவட்டங்களிலும் சிப்காட் தொழிற்பூங்கா, சிறிய மாநகரங்களில் கூட டைடல் பூங்காக்கள் என்று தமிழ்நாடு இப்படி வளர்ந்து வருகிறது.

விளையாட்டு வீரர்களுக்கு உபகரணங்கள் வழங்கும் திட்டம். வீட்டுவசதியை எடுத்துக் கொண்டால், ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தில் சொந்த வீடு எனும் கனவு நனவான யாராலும் ஸ்டாலினை நிச்சயமாக மறக்க முடியாது; அதோடு, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலமாக ஏழை மக்களுக்கான அடுக்குமாடி குடியிருப்புகள், பல ஆண்டு கனவாக இருந்த 23 லட்சம் பேருக்கு இலவச பட்டா. வயதானவர்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் ‘தாயுமானவர்’ திட்டத்தில் வீடு தேடி ரேஷன் பொருள் சேரும்போது, அவர்கள் நிச்சயம் இந்த ஸ்டாலினை வாழ்த்துவார்கள். ஆன்மிகமா? சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.

அதேபோன்று, அரசு ஊழியர்களுக்கு எப்படிப்பட்டக் கோரிக்கையை நிறைவேற்றிக் கொடுத்தோம் என்று உங்கள் அனைவருக்கும் தெரியும். இப்படி துறை வாரியாக நிறைய இருக்கிறது. அதனால்தான் சொல்கிறேன். சிறந்த உட்கட்டமைப்புக்குத் தமிழ்நாடுதான். சிறந்த கல்விக்கு தமிழ்நாடுதான். மருத்துவத்திற்கு தமிழ்நாடுதான். தொழில் முதலீட்டுக்கு தமிழ்நாடுதான். சட்டம்-ஒழுங்குக்கு தமிழ்நாடு தான். அமைதிக்கும் மதநல்லிணக்கத்திற்கும் தமிழ்நாடுதான். இப்படி எல்லாத் துறையிலும் சிறக்க உழைப்பவன்தான் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். இன்று எதிர்க்கட்சிகளே நாம் இப்போது நிறைவேற்றிக் கொண்டு வரும் திட்டங்களைத்தான், பெயரை மட்டும் மாற்றி அவர்களுடைய தேர்தல் அறிக்கையாக வெளியிட்டிருக்கிறார்கள். இதுதான் உண்மை.

ஆனால், நம்மை எதிர்த்து நிற்பவர்கள் யார் என்று பார்த்தீர்களா? டெல்லியிலிருந்து இரண்டு ரெய்டு நடந்தவுடனேயே பயந்துபோய், கர்ச்சிப்பால் முகத்தை மறைத்துக் கொண்டே, சட்டமன்றத்தைக்கூட விட்டுவிட்டு, வேறு வேறு காரில் டெல்லி சென்று, கூட்டணி வைத்துவிட்டு வந்தார் பழனிசாமி. சரி, அந்தக் கூட்டணிக்காவது இவர்தான் தலைமையா என்று கேட்டால் அதுவும் கிடையாது. இவர்களின் குடுமி டெல்லியிடம் இருக்கிறது. அனைத்து முடிவுகளும் அங்கிருந்துதான் எடுக்கப்படுகிறது.

அதனால்தான், இந்தத் தேர்தலையே ‘தமிழ்நாடு வெர்சஸ்’ என்டிஏ-‘தமிழ்நாடு அணி ெவர்சஸ் டெல்லி அணி’ எனச் சொன்னேன். நிறைய பேர்கூட, “ஏன் டெல்லி என்று சொல்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். இவர்களிடம் திரும்ப ஆட்சி சென்றால், டெல்லி ரிமோட் கன்ட்ரோல் ஆட்சிதான் தமிழ்நாட்டில் மறுபடியும் நடக்கும்.

நம்முடைய அனைத்துத் திட்டங்களும் நின்று போய்விடும். ஏற்கனவே அரசு தந்த காசைக்கூடத் திரும்பக் கேட்பார்கள். ஆனால், நாம் இப்போது இருக்கும் திட்டங்களோடு சேர்த்து, புதுத் திட்டங்களையும் நம்முடைய சூப்பர் ஸ்டார் தேர்தல் அறிக்கையில் சொல்லியிருக்கிறோம். ‘இல்லத்தரசி’ என்ற ஒரு வாக்குறுதியிலேயே எதிரிகள் எல்லாம் பார்த்து இன்றைக்கு புலம்பிக் கொண்டு இருக்கிறார்கள். இல்லத்தரசி திட்டத்திற்குதான் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் முதல் கையெழுத்து இருக்கும்! மகிழ்ச்சியா?

அதேபோன்று, உங்களுடைய மகளிர் உரிமைத்தொகை இனி மாதம் ஆயிரம் இல்லை, இரண்டாயிரம் ரூபாய்! விடுபட்ட மகளிரையும் இணைத்து, உரிமைத்தொகையை கொடுக்கப் போகிறோம். உங்களிடம் 2031 தேர்தலின்போது வாக்கு கேட்டு நான்தான் மீண்டும் வருவேன். இது இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் சத்தியம். சின்ன வயதிலிருந்தே என்னைச் சுற்றி இருந்ததும் எனக்குத் தெரிந்ததும் அரசியல், அரசியல், அரசியல் மட்டும்தான்.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். கூட என்னைப் பார்த்து, “நீ என்ன இந்த சின்ன வயதிலேயே கட்சி வேலை பார்த்துக் கொண்டு இருக்கிறாய்? ஒழுங்காகப் படிப்பில் மட்டும் கவனம் செலுத்து. நான் உன் பெரியப்பாவாகச் சொல்கிறேன்” என்று எனக்கு அட்வைஸ் செய்தார். ஆனால், அவர் சொன்னபடி படித்து முடித்தாலுமே, என்னுடைய அரசியல் ஆர்வம் குறையவே இல்லை. இந்தியா முழுவதும் எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்டு இருந்தபோது, 23 வயது இளைஞனாக அதை எதிர்த்து ஊர் ஊராக நாடகங்கள் நடத்தினேன். தமிழ்நாட்டில் மிசா கொடுஞ்சட்டத்தில் கைதான 500 பேரில் நானும் ஒருவன் என்றால், கலைஞரின் மகன் என்பதற்காக நான் கைது செய்யப்படவில்லை; கட்சிக்காக நான் அப்போதே செய்த என்னுடைய பரப்புரை காரணமாகத்தான் கைது செய்யப்பட்டேன்.

நான் மிகுந்த பணிவோடு சொல்கிறேன், இதுவரை தமிழ்நாட்டில் இருந்த முதல்வர்களில், இந்த ஸ்டாலின் அளவிற்கு அதிக நிகழ்ச்சிகள், மாவட்ட பயணங்கள், கள ஆய்வுகள், கூட்டங்கள், திட்டங்களின் தொடக்கம் என்று யாருமே கலந்துகொண்டிருக்க மாட்டார்கள். நான் என்னுடைய வீட்டில் இருந்ததைவிட, களத்தில் மக்களுடனும், பயணத்திலும், கோட்டையிலும் இருந்ததுதான் அதிகம். இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாகத் தமிழ்நாட்டை உயர்த்த வேண்டும் என்ற ஒற்றை குறிக்கோளோடு உழைத்துக் கொண்டிருக்கிறேன்.

இந்த ஸ்டாலினும், நம்முடைய திமுகவும் இந்த மண்ணில் இருக்கும் வரை, என்டிஏ.வால் தமிழ்நாட்டின் டிஎன்ஏ.வைச் சிதைக்க முடியாது! அடுத்த 5 ஆண்டில், இந்தியாவின் நம்பர் ஒன் மாநிலமாக மட்டுமல்லாமல், தெற்காசியாவின் மாடல் மாநிலமாகத் தமிழ்நாட்டை நான் நிச்சயம் மாற்றிக் காட்டுவேன்! இது உறுதி… உறுதி… உறுதி.

இந்த தேர்தல் மிக மிக முக்கியமான தேர்தல். அதனால் ஒவ்வொரு குடும்பத்திலும் அனைவருமே நம்முடைய திமுக கூட்டணிக்குத்தான் வாக்களிக்க வேண்டும். உரிமைத்தொகை, விடியல் பயணம் ஆகியவற்றில் பயனடையும் பெண்கள், உங்களுடைய பிள்ளைகளிடம் இதை எடுத்துச் சொல்ல வேண்டும். ‘நான் முதல்வன்’, லேப்டாப், புதுமைப் பெண், தமிழ்ப்புதல்வன் போன்ற திட்டங்களில் பயனடையும் இளைஞர்கள் – உங்கள் பெற்றோர்களிடம் திராவிட மாடல் ஆட்சி ஏன் தொடர வேண்டும் என்று எடுத்துச் சொல்லுங்கள்.

வீட்டில் இருக்கும் பெரியவர்கள் ‘தாயுமானவர்’ போன்ற திட்டங்களைச் சொல்லி, உங்களுடைய பேரப்பிள்ளைகளிடம் இந்த ஆட்சிதான் மீண்டும் வர வேண்டும் என்று புரிய வையுங்கள். அரசியல் விழிப்புணர்வு கொண்டவர்கள் – மாநில உரிமைகள், சமூக நீதி, மத நல்லிணக்கம் ஆகியவை காப்பாற்றப்பட வேண்டும் என்றால் திமுக தான் வர வேண்டும் என்று உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் பேசுங்கள்.

நீங்கள் பிரசாரம் செய்வது ஒரு கட்சிக்காகவோ, கூட்டணிக்காகவோ இல்லை; தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்காக. எனவே, ஒவ்வொரு வாக்காளரும், குறிப்பாக முதல் முறை வாக்களிக்கப் போகின்ற இளைஞர்கள், உங்கள் வாக்கின் மதிப்பையும் முக்கியத்துவத்தையும் புரிந்து கொண்டு வாக்களிக்க வேண்டும். உதயசூரியனுக்கும், கூட்டணிக் கட்சிகளுக்கும் உங்கள் ஆதரவை வழங்கிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டு விடைபெறுகிறேன். விடைபெறுகிறேன் என்றால், கூட்டத்திலிருந்து விடைபெறுகிறேன் என்று அர்த்தம். எப்போதும் உங்களுடன்தான் இருப்பேன்.
இவ்வாறு அவர் பேசினார்.

* நாங்கள் ஆட்சிக்கு வந்து முதல் மூன்று ஆண்டுகளில் செய்த சாதனைகளைப் பார்த்தே, நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியாவிலேயே யாரும் பெற முடியாத நாற்பதுக்கு நாற்பது என்ற முழு வெற்றியைப் கொடுத்தீர்கள்.

* அதே போன்று சட்டமன்றத் தேர்தலிலும் நாம் வரலாறு படைக்க வேண்டும். தமிழ்நாட்டின் தொடர் வளர்ச்சிக்காக எங்களுக்குத் தொடர்ச்சியான வெற்றியைத் தர வேண்டும்.

* மாநில உரிமைகள், சமூக நீதி, மத நல்லிணக்கம் ஆகியவை காப்பாற்றப்பட வேண்டும் என்றால் திமுக தான் வர வேண்டும் என்று உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் பேசுங்கள்.

* நீங்கள் பிரசாரம் செய்வது ஒரு கட்சிக்காகவோ, கூட்டணிக்காகவோ இல்லை; தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்காக.

Tags : Tamil Nadu ,India ,South Asia ,Chief Minister ,M.K. Stalin ,Secular Progressive Alliance ,Chennai ,Kolathur… ,
× RELATED மேற்குவங்கத்தில் இதுவரை இல்லாத...