×

தமிழக சட்டப்பேரவை தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது: நாளை மறுதினம் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு

சென்னை: தமிழகத்தில் கடந்த 20 நாட்களாக நடைபெற்று வந்த அனல் பறக்கும் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் ஓய்ந்துள்ளது. இதைத்தொடர்ந்து, நாளை மறுதினம் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் நாளை மறுநாள் (23ம் தேதி) ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 4,023 வேட்பாளர்கள் களத்தில் நிற்கின்றனர். தமிழகத்தில் திமுக, அதிமுக, நாம் தமிழர், தவெக என 4 முனை போட்டி நிலவுகிறது.

இந்த தேர்தலில் வெற்றி வாகை சூடுவதற்காக ஒவ்வொரு கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. திமுக மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் களம் இறங்கி உள்ளது. முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் கடந்த 31ம் தேதி திருவாரூரில் தனது பிரசாரத்தை தொடங்கினார். தொடர்ந்து அவர் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் சூறாவளி பிரசாரம், பொதுக்கூட்டம், ரோடு ஷோ ஆகியவற்றில் கலந்துகொண்டு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.

திமுக கூட்டணிக்கு ஆதரவாக முன்னாள் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தற்போது அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, டெல்லி முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால், பீகார் ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சி தலைவர் தேஜஸ்வி, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் வைகோ, பிரேமலதா, திருமாவளவன், சண்முகம், வீரபாண்டியன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களும் தொடர் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.

அதிமுக கடந்த 2021ம் ஆண்டு இழந்த ஆட்சியை மீண்டும் பிடித்து விட வேண்டும் என்ற நோக்கத்தில் களம் கண்டு உள்ளது. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் 25ம் தேதி மயிலாப்பூரில் தனது பிரசாரத்தை தொடங்கினார். தினமும் 2 அல்லது 3 இடங்களில் தீவிர பிரசாரம் செய்து வருகிறார். அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட பலரும் பிரசாரம் செய்தனர்.

நாம் தமிழர் கட்சி தனது கொள்கையில் எந்த சமரசமும் செய்யாமல், வழக்கம் போல் இந்த தேர்தலிலும் தனித்து களம் காண்கிறது. மற்ற கட்சிகள் செய்ய தயங்கும் காரியத்தை, சீமான் துணிந்து தனது வேட்பாளர்கள் பட்டியலில் 117 ஆண்கள், 117 பெண்கள் என பெண்களுக்கு 50 சதவீத ஒதுக்கீடு வழங்கினார். காரைக்குடியில் சீமான் போட்டியிட்டாலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வாக்கு சேகரித்து வருகிறார். இந்த சட்டமன்ற தேர்தலில் முதன் முதலாக நடிகர் விஜய் தலைமையிலான தவெக கட்சி களம் காண்கிறது.

அந்த கட்சியின் ஒரே நட்சத்திரமாக இருக்கும் விஜய், பல்வேறு மாவட்டங்களில் சென்று ரோடு ஷோ சென்றபடி வாக்கு சேகரித்து வந்தார். அவர் இந்த தேர்தலில் திமுகவுக்கும், தவெகவுக்கும்தான் நேரடி போட்டி என கூறி வருகிறார். கோடையின் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வேட்பாளர்கள் இறுதிக்கட்ட ஓட்டுவேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். சுமார் 20 நாட்களாக நடந்து வந்த அனல் பறக்கும் பிரசாரம், இன்று (செவ்வாய்) மாலை 6 மணியுடன் ஓய்ந்தது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் இன்று மாலை 6 மணியுடன் பிரசாரத்தை நிறைவு செய்தார். அதேபோல், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலம் எடப்பாடி தொகுதியிலும், தவெக தலைவர் விஜய் சென்னை நந்தனத்திலும் பிரசாரத்தை நிறைவு செய்தனர். சீமான் காரைக்குடியில் நிறைவு செய்தார்.

தேர்தல் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் முடிந்த நிலையில், அரசியல் கட்சியினர் பொதுமக்களை சந்தித்து வாக்கு கேட்டால் அல்லது பிரசாரம் செய்தால், சமூகவலைதளம் மூலம் வாக்கு சேகரித்தால் 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்படும் என்று தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது. மேலும், தொகுதிக்கு சம்பந்தம் இல்லாத நபர்கள் வெளியேற வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தேர்தல் கருத்துக்கணிப்பு வெளியிட தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்துள்ளது. அதன்படி எந்தவித தேர்தல் கருத்துக்கணிப்பும் இன்று மாலை 6 மணிக்கு பிறகு வெளியிடக்கூடாது. அதேபோல் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பும் மேற்கு வங்காள இறுதிகட்ட தேர்தல் முடிந்த பின்னர் வருகிற 29ம் தேதி மாலை 6.30 மணிக்கு மேல்தான் வெளியிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேர்தல் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் முடிந்த நிலையில், நாளை மறுதினம் (23ம் தேதி) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. அன்றைய தினம் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். வாக்குப்பதிவு முடிந்து, 23ம் தேதி இரவு வாக்கு எந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டு ஸ்டிராங்க் ரூமுக்கு எடுத்து செல்லப்பட்டு, துப்பாக்கி போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்படும். இதைத்தொடர்ந்து, மே 4ம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

* 35 நாட்களில் ரூ.1,213 கோடி பணம், பரிசு பொருள் பறிமுதல்

தமிழகத்தில் மொத்தம் 5,73,43,291 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 2,80,30,658 ஆண் வாக்காளர்களும், 2,93,04,905 பெண் வாக்காளர்களும் 7,728 மூன்றாம் பாலின வாக்காளர்களும் உள்ளனர். மாநிலம் முழுவதும் 75,064 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. வாக்களிக்க வசதியாக நாளை மறுதினம் (23ம் தேதி) பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் வணிகம், வர்த்தகம், தொழிற்சாலைகளில் பணிபுரியும் அனைவருக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச் 15ம் தேதி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, ஆவணங்கள் இல்லாமல் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.

அதன்படி நேற்று (20ம் தேதி) வரை ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் சென்ற ரொக்கப்பணம் ரூ.169.85 கோடியும், ரூ.2.95 கோடி மதிப்பிலான மதுபானம், ரூ.82.73 கோடி போதைப்பொருட்கள், ரூ.650.87 கோடி தங்கம் மற்றும் வெள்ளி, ரூ.306.34 கோடியிலான இதர பொருட்கள், இலவசங்கள் என மொத்தம் ரூ.1,213 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பரிசு பொருட்களை பறக்கும் படையினர் கைப்பற்றியுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.

Tags : Tamil Nadu Legislative Assembly election ,Chennai ,Tamil Nadu ,
× RELATED கொளத்தூர் என் செல்லக் குழந்தை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு