×

தமிழக சட்டப்பேரவை பொது தேர்தலை முன்னிட்டு தொகுதியை விட்டு வெளியூர் ஆட்கள் வெளியேற உத்தரவு: தமிழக தேர்தல் அதிகாரி உத்தரவு: பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரம்

 

சென்னை: தமிழகம் சட்டப்பேரவை பொதுத்தேர்தலுக்கான பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்வடைந்ததையொட்டி தொகுதிக்கு சம்பந்தம் இல்லாத ஆட்கள் வெளியேற தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையின் தற்போதைய பதவிக்காலம் மே 10ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனை முன்னிட்டு, தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம் மற்றும் அசாம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் கடந்த மார்ச் 15ம் தேதி அறிவித்தது.

தமிழகத்தில் ஏப்ரல் 23ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதன்படி, தேர்தலை முன்னிட்டு கடந்த சில வாரங்களாக அரசியல் கட்சிகள் பல்வேறு முறைகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டன. முக்கிய கட்சி தலைவர்கள் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுக்கூட்டங்கள், ரோடு ஷோக்கள் நடத்தினர். சமூக வலைதளங்கள் மூலமாகவும் வாக்காளர்களை கவரும் வகையில் பிரசாரம் மேற்கொண்டனர். இளைஞர்கள், பெண்கள், முதல் முறையாக வாக்களிக்க உள்ள வாக்காளர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவினரை கவரும் வகையில் புதிய பிரசார உத்திகளும் பயன்படுத்தப்பட்டன.

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை பொதுத்தேர்தலுக்கான அரசியல் கட்சிகளின் தீவிர பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. தேர்தல் விதிமுறைகளின்படி வாக்குப்பதிவிற்கு முன்பான 48 மணி நேரம் ‘அமைதிக்காலம்’ என அறிவிக்கப்படுவதால், இந்த காலப்பகுதியில் எந்தவித அரசியல் பிரசாரமும் மேற்கொள்ளக் கூடாது என்று இந்திய தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில், தேர்தல் நெறிமுறைகளை கடுமையாக அமல்படுத்தும் வகையில் தேர்தல் ஆணையம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதன்படி, 21ம் தேதி மாலை 6 மணிக்குப் பிறகு எந்தவித அரசியல் பிரசாரமும் நேரடி அல்லது மறைமுகமாக நடத்தக்கூடாது. தொலைக்காட்சி, வானொலி, சமூக வலைதளங்கள் உள்ளிட்ட ஊடகங்களில் தேர்தலைப் பாதிக்கும் வகையிலான பிரசாரங்களும் தடை செய்யப்பட்டுள்ளது.

வேட்பாளர்கள் அல்லது கட்சியினரால் வீடு வீடாக சென்று வாக்கு கேட்பதும் அனுமதிக்கப்படாது. அதேபோல் தொகுதியில் வாக்காளர்களாக இல்லாத வெளி நபர்கள், கட்சித் தொண்டர்கள் உள்ளிட்டோர் உடனடியாக தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

அதன்படி இந்த உத்தரவை அமல்படுத்தும் விதமாக, மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் இணைந்து தீவிர சோதனைகள் மேற்கொண்டு வருகின்றனர். லாட்ஜ்கள், ஓட்டல்கள், விடுதிகள், திருமண மண்டபங்கள் போன்ற இடங்களில் தங்கி உள்ள நபர்களின் விவரங்கள் சரிபார்க்கப்படுகின்றன.

சந்தேகத்திற்கிடமான நபர்கள் உடனடியாக வெளியேற்றப்படுவதுடன், தேவையான சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் வாக்குப்பதிவை அமைதியாக நடத்துவதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாநில போலீசார், ஆயுதப்படை போலீசார் மற்றும் மத்திய பாதுகாப்பு படையினர் ஆகியோர் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முக்கிய பகுதிகளில் கூடுதல் கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. எல்லைப் பகுதிகளில் வாகன சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

வாக்காளர்கள் அமைதியாகவும் அச்சமின்றியும் வாக்களிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. தேர்தல் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். மேலும், வாக்காளர்கள் அனைவரும் ஜனநாயகக் கடமையை உணர்ந்து கட்டாயம் வாக்களிக்க வேண்டும் எனவும் தேர்தல் ஆணையம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu Assembly General Election ,Tamil Nadu Election ,Chennai ,Election Commission ,Tamil Nadu Assembly ,Tamil Nadu ,
× RELATED வேலூரில் 107 டிகிரி வெயில்