×

இந்தியா விஸ்வகுரு இல்லை: ஒன்றிய அரசின் போலி பெருமையை உடைத்த பாஜக மூத்த தலைவர்

புதுடெல்லி: ஒன்றியத்தில் ஆளும் பாஜக அரசு, இந்தியா தற்போது ‘விஸ்வகுரு’வாக உருவெடுத்துள்ளதாகப் பிரசாரம் செய்து வரும் நிலையில், அக்கட்சியின் மூத்த தலைவரே அதற்கு எதிரான கருத்துக்களைத் தெரிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். கடந்த 2014ம் ஆண்டு பிரதமர் மோடிக்காகத் தனது வாரணாசி தொகுதியை விட்டுக் கொடுத்தவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சரும், பாஜகவின் முன்னாள் தலைவருமான முரளி மனோகர் ஜோஷி (92), தற்போது அக்கட்சியின் வழிகாட்டுதல் குழு உறுப்பினராக உள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாகவே மோடி தலைமையிலான ஒன்றிய அரசு, இந்தியா உலக நாடுகளுக்குத் தலைமை தாங்குவதாகக் கூறி வரும் விளம்பரங்கள் அனைத்தும் வெறும் கண்துடைப்பு என்பது இவரது பேச்சின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. டெல்லியில் நேற்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் துணை அமைப்பான ‘சமஸ்கிருத பாரதி’ அலுவலகத் திறப்பு விழாவில் பங்கேற்ற முரளி மனோகர் ஜோஷி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், ‘பாரத நாடு தற்போது விஸ்வகுருவாக இருக்கிறது என்று கூறுவதை தனிப்பட்ட முறையில் நான் ஏற்கவில்லை. எனவே, விஸ்வகுரு என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். ஒரு காலத்தில் நாம் உலகிற்கே குருவாக இருந்தோம் என்பது உண்மைதான். ஆனால், இன்றைய யதார்த்த நிலையில் நாம் அவ்வாறு இல்லை.

எதிர்காலத்தில் அந்த நிலையை அடையவே நாம் பாடுபட வேண்டும்’ என்று கூறி ஒன்றிய அரசின் போலிப் பெருமையை உடைத்தார். மேலும், சமஸ்கிருத மொழியை இந்தியாவின் அதிகாரப்பூர்வ மொழியாக்க டாக்டர் அம்பேத்கர் முயன்றதைச் சுட்டிக்காட்டிய அவர், வரும் காலங்களில் நவீனக் கணினித் தொழில்நுட்பங்களுக்குச் சமஸ்கிருதமே உயிர்நாடியாக அமையும் என்றும் தெரிவித்தார்.

Tags : India ,BJP ,Union government ,New Delhi ,BJP government ,Union ,Varanasi ,Modi ,
× RELATED உயிருக்கு போராடும் ஆப்கானிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர்…