அட்சய திருதியை – 20.4.2026
தமிழ் ஆண்டின் முதல் மாதமான சித்திரை, ஆன்மிக வளமும், பொருள் வளமும் ஒன்றாகத் தரும் புண்ணிய மாதமாகக் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் தொடர்ச்சியாக வரும் முக்கிய மான வைபவங்கள் மனித வாழ்க்கையை உயர்த்தும் அரிய வாய்ப்புகளை அளிக்கின்றன. அவற்றில் முக்கியமானவை அட்சய திருதியை, நரசிம்ம ஜெயந்தி, சித்ரா பௌர்ணமி ஆகும். அட்சய திருதியை ஏப்ரல் மாதம் இருபதாம் தேதியும், நரசிம்ம ஜெயந்தி ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதியும், மதுரையில் கோலாகலமாக நடக்கும் சித்ரா பௌர்ணமி விழாக்கள், குறிப்பாக அழகர் வைகை ஆற்றில் இறங்குவது மே 1-ஆம் தேதியும் நடைபெறுவதால், இந்த மூன்று வைபவங்களின் சிறப்புகள் குறித்து இந்த பகுதியில் காண்போம்.
அட்சய திருதியை என்ன பொருள்?
‘‘அட்சயம்” என்பது குறையாதது. அழியாதது என்றும் பெருகுவது என்று பொருள். “திருதியை” என்பது மூன்றாவது திதி. இவை இரண்டும் இணையும் நாள் அட்சய திருதியை எனப்படுகிறது. இந்த நாளில் செய்யப்படும் எந்த நற்செயலும் ஒன்று நூறாக, நூறு ஆயிரமாகப் பல்கிப் பெருகும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. திருதியை திதி இயல்பாகவே சுப திதி. அதுவும் வளர்பிறையில் வருவது இன்னும் அதிகமான மங்களத்தைத் தருகிறது. வளர்பிறை என்பது வளர்ச்சி, விருத்தி, பெருக்கம் ஆகியவற்றைக் குறிக்கும். ஆகவே, இந்த நாளில் தொடங்கப் படும் செயல்கள் அனைத்தும் நிறைவும் முன்னேற்றமும் அடையும்.
சித்திரையில் வருவது சிறப்பு
திருதியையில் ரம்பா திருதியை போன்ற பல உண்டு. திருதியை திதி பல மாதங்களில் பல்வேறு பெயர்களால் போற்றப்படுகிறது:
* அட்சய திருதியை – குறையாத புண்ணியத்தை தரும் நாள்
* ரம்பா திருதியை – அழகு, சௌபாக்கியம் தரும் நாள்
* கௌரி திருதியை – கௌரி வழிபாட்டுக்கு உகந்தது
* சௌபாக்கிய கௌரி விரதம் – திருமண நலன் வேண்டி கடைப்பிடிக்கப்படும்.
இதில் மிகச் சிறந்தது – எல்லோரும் அனுசரிப்பது அட்சய திருதியை. காரணம், சூரியன் உச்சம் அடையும் காலமாக சித்திரை வளர்பிறையில் வருகிறது. இந்தக் காலம் ஆற்றல், ஒளி, உற்சாகம், வாழ்வின் எழுச்சி ஆகியவற்றை அதிகரிக்கிறது. இதனால், அட்சய திருதியையின் புண்ணிய பலன் மேலும் பலமடைகிறது. திருதியை திதி என்பது வெறும் கால அளவல்ல; அது வாழ்க்கையின் ஒரு வளர்ச்சிச் சின்னம்.
“முதல் திதி ” (பிரதமை) – ஆரம்பம்
“இரண்டாம்திதி ” (த்விதியை) – இரட்டை நிலை
“மூன்றாம் திதி ” (திருதியை) – விருத்தி, விரிவு, பெருக்கம் – என்பதை உணர்த்துகிறது.
காளிதாசரின் உத்தர காலாம்ருதம்
யுகங்கள் நான்கு. நான்கு யுகத்தின் தோற்ற தினமே யுகாதி (யுகம் +ஆதி ) தினமாகக் கொண்டாடப்படுகிறது. முதல் யுகம் கிருத யுகம், ஐப்பசி மாத அமாவாசைக்குப் பின் நவமியில் ஆரம்பம் ஆயிற்று. திரேதா யுகம் சித்திரை மாத அமாவாசைக்கு பின்வரும் வளர்பிறை திருதியில் தோன்றியது. துவாபர யுகம் மாசி மாத அமாவாசையில் ஆரம்பமானது. நான்காவது யுகமாக கலியுகம் ஆவணி மாத பௌர்ணமிக்கு பின்வரும் தேய்பிறை திரயோதசி திதியில் தொடங்கியது. இந்த நான்கு நாள்களில், கிருதயுகம் தொடங்கிய நாள் நவமி என்பதாலும், துவாபர யுகம் தொடங்கியது அமாவாசை என்பதாலும், கலியுகம் தேய்பிறையில் தொடங்கியதாலும் சிறப்பில்லை. வளர்பிறையில் சித்திரை மாதத்தில் ஆரம்பித்த திருதியை என்பதால், இரண்டாவது யுகமான ராமர் அவதரித்த திரேதாயுகம் அட்சய திருதியை தினமாகக் கொண்டாடப்படுகிறது. ஜோதிட சாஸ்திரப்படி இந்த நாளில் நடுப்பகலில் திருதியை திதி இருக்க வேண்டும். துவிதியை திதி இருக்கக்கூடாது என்று காளிதாசரின் உத்தர காலாமிர்தம் குறிப்பிடுகிறது.
மங்கல நாளில் எதைத் தொட்டாலும் வெற்றி
அட்சய திருதியை என்பது காலத்தின் சுபம், திதியின் மங்களம், இயற்கையின் வளர்ச்சி சக்தி இந்த மூன்றும் இணைந்த அரிதான தெய்வீகநாள். அட்சய திருதியை குறித்து பல்வேறு புராணங்கள் விளக்கமாக எடுத்துரைக்கின்றன. பவிஷ்ய புராணம், விஷ்ணு புராணம் போன்ற புராணங்களில் அட்சய திருதியை பற்றிய குறிப்புகள் உள்ளன. திருமணம் போன்ற சகல நிகழ்ச்சிகளுக்கும் ஏற்ற நாளாக திருதியை திதி விளங்குகிறது. கல்வி கற்பதற்கும் தொழில் தொடங்குவதற்கும், ஹோமங்கள் போன்ற புண்ணிய காரியங்களைச் செய்வதற்கும், வீடுகட்ட ஆரம்பிக்கவும், கிரகப் பிரவேசம் செய்யவும், யாத்திரை மேற்கொள்ளவும் இந்த நாள் ஏற்றது என்று சாஸ்திரம் கூறுகிறது.
அட்சய பாத்திரம் கிடைத்த நாள்
பாண்டவர்கள் வனவாசம் செய்த காலம். காட்டில், தினமும் அவர்களைச் சந்திக்க முனிவர்கள், பக்தர்கள், விருந்தினர்கள் வந்தார்கள். “அதிதி தேவோ பவ” என்ற தர்மத்தை மறக்காத பாண்டவர்கள், யாரையும் பசியோடு அனுப்ப விரும்பவில்லை. ஆனால், உணவு? காடு என்பதால் கிடைப்பது குறைவு. இதனால் பெரும் கவலை அடைந்தார்கள். சூரிய பகவானை நோக்கி தவம் செய்தனர். பிரகாசமான ஒளியாக சூரியன் தோன்றினார். “தர்மபுத்ரா! உன் மனம் தூயது. பிறர் பசியைப் போக்க நினைக்கும் உன் எண்ணம் எனக்கு இன்பம் அளிக்கிறது” என்று கூறி, அவர் ஒரு அதிசயப் பாத்திரத்தை அளித்தார். அதுதான் அட்சய பாத்திரம். “இந்த பாத்திரத்தில், உணவு எடுக்கும் வரை, எத்தனைப் பேருக்கு வேண்டுமானாலும் உணவு குறையாமல் கிடைக்கும். ஆனால், அவள் சாப்பிட்ட பிறகு அந்த நாளுக்கான அன்னம் நிற்கும்,” என்று சூரியன் அருளினார். காட்டில் இருந்தாலும், அவர்கள் இல்லம் அன்னதான மையமாக மாறியது. யார் வந்தாலும் யாரும் பசியோடு திரும்பவில்லை. அள்ளஅள்ளக் குறையாத, அன்னத்தைத் தந்த அட்சய பாத்திரம் கிடைத்த நாள் அட்சய திருதியை.
குசேலனுக்குச் செல்வம் கிடைத்த நாள்
அட்சய திருதியை அன்று குசேலனுக்கு கண்ணனின் அருளால் ஏராளமான செல்வம் கிடைத்தது அட்சய திருதியை நாளில் சென்று சேவிக்க வேண்டும் என்று அவர் திட்டமிடவில்லை. கண்ணனிடம் சென்று தன்னுடைய வறுமையை நீக்கி கொள்ள வேண்டும் என்பதும் அவருடைய திட்டம் அல்ல. தன்னுடைய தோழனாகிய கண்ணன் எப்படி இருக்கிறான் என்று பார்த்துக் கொண்டு வரவேண்டும் என்ற நினைப்பிலேயே புறப்படுகின்றார். அவனுக்கு ஏதாவது கொடுக்க வேண்டும் என்பதற்காக ஒரு சிறு துணியில் அவல் எடுத்துக் கொண்டு புறப்படுகிறார். அந்த எளிமையான உணவுதான் அவரிடத்தில் கொடுப்பதற்கு இருந்தது. அதை இடுப்பில் கட்டிக்கொண்டு கண்ணனிடத்திலே கொடுக்கின்றார். இப்பொழுது அவர் கண்ணனிடத்திலே எதுவும் வாங்கவில்லை. இடுப்பில் கட்டியிருந்த அவலை கண்ணன் எடுத்துக் கொண்டதும் அதுவே பற்பல செல்வமாக வளர்ந்தது. வாங்கினால் வளரும் என்பது அல்ல; கொடுத்தால் தான் வளரும் என்பதே கதையின் மிக முக்கியமான செய்தி.
கனகதாரா ஸ்தோத்திரம்
இந்த அட்சய திருதியை நாளில் ஆதி சங்கர பகவத்பாதர் கனகதாரா ஸ்தோத்திரம் பாடி ஒரு ஏழைபெண்ணின் செல்வக் குறையைப் போக்கி அருளினார். அட்சய திருதியை நாளில் காலை வேளையில் பூஜை அறையில் கோலம் போட்டு விளக்கேற்றி மகாலட்சுமி படத்திற்கு பூக்கள் மற்றும் நெல்லிக்கனி மற்றும் நிவேதனங்கள் (இனிப்பு) வைத்து, கனகதாரா ஸ்தோத்திரத்தைப் பாராயணம் செய்யவும். பத்மா, பத்மாலயா, ஸ்ரீ பத்ம-தாரிணீ என்று துதிக்கப்படும் மஹாலஷ்மிக்கு தாமரை மலர்கள் கொண்டு அர்ச்சனை செய்வது விசேஷம். இதனால் செல்வம் பெருகும். கடன் தீரும். திருமாலின் அருளும், லட்சுமி கடாட்சமும் கிடைக்கும்.
வியாசர் பாரதம் தொடங்கிய நாள்
“வியாசாய விஷ்ணு ரூபாயா” என்றபடி விஷ்ணுவின் அம்சமான வியாச மாமுனிவர் மனித குலத்திற்கு தர்மம், நீதிமுறை, வாழ்க்கை நெறி ஆகியவற்றை எடுத்துரைக்கும் ஒரு மகாகாவியத்தை உலகிற்கு அளிக்க எண்ணினார். அந்தக் காப்பியம் தான் மஹாபாரதம். இந்த ஞான நதியை எழுதித்தர யாரால் முடியும்? வியாசர் தன் மனதில் விநாயகரை நினைத்தார். விநாயகர் தோன்றினார். வியாசர் சொல்லச் சொல்ல, விநாயகர் எழுதினார். அப்படி எழுதத் தொடங்கிய நாள் அட்சய திருதியை. இதை வில்லிபுத்தூர் ஆழ்வார்,
நீடாழி யுலகத்து மறைநாலொ டைந்தென்று நிலைநிற்கவே
வாடாத தவவாய்மை முனிராசன் மாபார தஞ்சொன்னநாள்
ஏடாக வடமேரு வெற்பாக வங்கூரெழுத்தாணிதன்
கோடாக வெழுதும்பி ரானைப் பணிந்தன்பு கூர்வாமரோ.
– என்று பாடுகிறார்.
பசியைப் போக்குங்கள்
அட்சய திருதியை என்பது பல தெய்வீக நிகழ்வுகள் ஒன்று சேர்ந்த புண்ணிய நாள். பராசக்தி, அன்னபூரணி வடிவம் கொண்டு உலக மக்களின் பசியை போக்கினார். சிவனின் சாபமும் இதனால் விலகியது. அன்னம் மாயை அல்ல, வாழ்க்கையின் ஆதாரம் என்பதை உணர்த்தினார்.
இந்த நாள் அன்னதானத்தின் உயர்ந்த மகிமை கொண்டது. பசியை போக்குவது பரம தர்மம்” “பகிர்ந்தால் குறையாது; பெருகும்” அன்னம் அளிப்பவன், இறைவனே ஆகிறான்” என்பதை உணர்த்தியநாள் அட்சய திருதியை. இந்த நாளில், அன்னதானம் செய்யுங்கள். ஒரு நெல் விதையிலிருந்து 1000 மணிகள் கிடைப்பதைப்போல, ஒவ்வொரு சோற்றுப் பருக்கையும் தானம் செய்யும் பொழுது, அது பல் மடங்கு புண்ணியமாக வளரும். அட்சயமாய் வளரும். அதாவது குறைவில்லாமல் வளரும் என்பதனால் அட்சய திருதியை அன்று அவசியம் அன்னதானம் செய்ய வேண்டும். சித்திரை மாதம் என்பதால் தயிர் அன்னத்தைதானம் செய்வது சிறப்பு.
மஹாலட்சுமி தோன்றிய நாள்
துர்வாச முனிவரின் கோபத்தால், தேவர்கள் செல்வத்தை இழந்தனர். அதைத்திரும்பக் கிடைப்பதற்கு, பாற்கடலைக் கடைந்தனர். பாற்கடலை கடைந்த பொழுது, அவர்கள் விரும்பிய அத்தனைச் செல்வங்களும் ஒன்றன்பின் ஒன்றாகக் கிடைத்தன. நிறைவாக செல்வத்தின் அதிபதியான மகாலட்சுமித் தாயார் ஒரு தாமரை மலரில் தோன்றினார். தேவர்களுக்கு அருள் செய்து விட்டு மகாவிஷ்ணுவின் திரு மார்பில் அமர்ந்து கொண்டார். பாற்கடல் கடைந்த பொழுது மகாலட்சுமி தோன்றிய நாள் அட்சய திருதியை. பாற்கடலைக் கடைதல் என்பது உழைப்பையும், அதிலிருந்து கிடைத்த செல்வங்கள் என்பது, உழைப்பின் பயனையும் குறிப்பிடுகிறது. எனவே, வணிகமோ, உத்தியோகமோ, தொழிலோ அட்சய திருதியை நாளில் தொடங்கினால், மிகச்சிறந்த பலனைத் தரும்.
அட்சய திருதியையில் அற்புத நிகழ்வுகள்
விஷ்ணுவின் ஆறாவது அவதாரமான பரசுராமர். அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநிறுத்த அவதரித்த நாள் அட்சய திருதியை. இந்த நாள் அதர்ம நிவாரணம், வீரியம், நீதியின் வெற்றி ஆகியவற்றைக் குறிக்கிறது. அட்சய திருதியை தினத்தை சமணர்கள் “அட்சய தீஜ்’’ என்றழைக்கிறார்கள். ரிஷப தேவர் எனும் தீர்த்தங்கரரின் நினைவு நாளாக அட்சய திருதியை தினத்தை சமணர்கள் அனுசரிக்கிறார்கள்.
அட்சய திருதியையில் நடந்த செயல்கள்
* இராமர் அவதரித்த திரேதா யுகம் இந்த நன்னாளில்தான் தொடங்கியது.
* பகீரதன் மூலம் கங்கா தேவி பூமிக்கு வந்த நாள் இது.
* குபேரன் மகாலட்சுமியை வேண்டி வழிபட்டு, செல்வங்களுக்கு அதிபதியாகும் வரத்தைப் பெற்ற நாள்.
சிவாலயங்களில் அட்சய திருதியை
சிவாலயங்களில் அட்சய திருதியை என்பது, இறைவன் பிட்சாடணராகத் தோன்றி அன்னை அன்னபூரணியிடம் உணவு பெற்று, உலகின் பசியைப் போக்கிய நிகழ்வைக் குறிக்கும் சிறப்பு நாளாகும். இந்நாளில் சிவாலயங்களில் விசேஷ வழிபாடுகள், அன்னதானம், மற்றும் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு சிறப்பாக நடைபெறும். சிவாலயங்களில் பிட்சாடணர் (பிச்சை ஏற்கும் கோலம்) மூர்த்திக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் அன்னம் சமர்ப்பித்து வழிபடுவது வழக்கம்.சிவாலயம் சென்று, குறிப்பாக மாலை வேளையில் சிவனை வழிபடுவதால், வற்றாத செல்வம் மற்றும் உணவுக்குப் பஞ்சம் வராது என்பது நம்பிக்கை. அட்சய திருதியை நாளில் சிவனுடன், குபேரனையும் வழிபட்டு தானம் செய்வது சிறப்பானதாகக் கருதப்படுகிறது.
திருமலையில் அட்சய திருதியை
அட்சய திருதியை அன்று, வராகத் தலமாகிய ஸ்ரீ முஷ்ணத்தில், உதய காலத்தில் கருட சேவை விழா நடைபெறும். சிதம்பரத்தில் மேலவீதி ஸ்ரீ ராமபிரானுக்கு காலை கருட சேவையும், தில்லை கோவிந்தராஜப் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனமும் நடக்கும். திருமலையில் அட்சய திருதியை மிகவும் சிறப்பான நாளாகக் கொண்டாடப்படுகிறது, வேத காலத்திலிருந்தே தங்கம் லட்சுமியின் அம்சமாகக் கருதப்படுவதால், இந்நாளில் தங்கம் வாங்குவது நீடித்த செல்வத்தைத் தரும் என்பதால் அட்சய திருதியை அன்று தங்கம், வெள்ளி மற்றும் செப்பு நாணயங்கள்/டாலர்கள் திருப்பதி தேவஸ்தானத்தால் விற்பனை செய்யப்படுகின்றன.
சிவபெருமானுக்கு காசு மாலை
கும்பகோணம் பட்டீஸ்வரர் அருகிலுள்ள முழையூர்ஸ்ரீ பரசுநாதர் கோவிலில் அட்சய திருதியை தினத்தன்று சிவபெருமானுக்கு காசு மாலை அணிவித்து குபேர பூஜை நடத்துவார்கள். அப்போது சிவனை தரிசித்தால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. கும்பகோணம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள 16 பெருமாள் கோவில்களில் இருந்து 16 பெருமாள்கள் கருடவாகனத்தில் புறப்பட்டு வருவார்கள். கும்பகோணம் பெரிய தெருவில் 16 பெருமாள்களும் ஒரு சேர அணிவகுத்து பக்தர்களுக்கு தரிசனம் தருவார்கள். இந்த அற்புத தரிசனம் ஆண்டுக்கு ஒரு தடவையே நடைபெறும். அன்று 16 பெருமாள்களையும் வழிபட்டால் வாழ்வில் பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழலாம் என்பது நம்பிக்கை.
தேர் கட்டும் பணி
விளங்குளம் அட்சயபுரீஸ்வரர் (தஞ்சை மாவட்டம்): இதுவே அட்சய திருதியை அன்று வழிபட வேண்டிய மிக முக்கிய ஆலயம். இங்கு அட்சயபுரீஸ்வரர், அபிவிருத்தி நாயகியை வழிபட்டால் தோஷங்கள் நீங்கி, செல்வம் பெருகும், திருமணத் தடைகள் நீங்கும். அட்சய திருதியை அன்றுதான் கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி ஆலயங்களின் நடை திறக்கப்படும். கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் ஆலயங்களும் இந்நாளில் திறக்கப்பட்டு யாத்திரை தொடங்கும். பூரி ஜகந்நாதர் ஆலயத்தில் இந்நாளில்தான் ஆண்டுதோறும் நடைபெறும் ரதயாத்திரைக்கான தேர் கட்டும் பணி (ரதக்ருத்யா) தொடங்கப்படும்.
என்னென்ன வாங்கலாம்?
அட்சய திருதியை அன்று சில பொருட்களை வாங்கினால் வீட்டில் அதிர்ஷ்டம் வரும். தங்கம், வெள்ளி, உப்பு மற்றும் மல்லிகைப் பூ வாங்கலாம். அட்சய திருதியை அன்று கடன் வாங்கக் கூடாது. யாருக்கும் தீங்கு நினைக்கக் கூடாது. அட்சய திருதியை அன்று விரதம் இருக்கலாம். ஏழைகளுக்கு அன்னதானம் செய்யலாம். சூரியனுடைய உச்சராசியில் பிதுர் ஆத்ம காரகனான சூரியனும், சந்திரனுடைய உச்ச ராசியில் மாதுர்கிரகமான சந்திரன் பிரகாசிக்கும் ஒரு அமைப்பு. வேறு எந்த நாளுக்கும் கிடையாது என்பதால் அட்சய திருதியைக்கு அவ்வளவு மதிப்பு. உத்தர காலாமிர்தம் இயற்றிய காளிதாசன் இந்த திருதியை திதி நாளில் எல்லா விதமான மங்களகரமான காரியங்களும் செய்யலாம் என்று சொல்லுகிறார். தண்ணீர் நிரம்பிய குடத்தை தானமாகத் தருவது சிறப்பு என்கிறார்கள். இதனை `தர்மகடம்’ எனப் போற்றுவர். அட்சய திருதியை தினத்தில் செய்யப்படும் பித்ரு தர்ப்பணம் பல தலைமுறைக்கு முந்தைய நமது மூதாதையர்களுக்கும் போய் சேரும் என்பது ஐதீகம். எனவே, அட்சய திருதியை தினத்தன்று செய்யப்படும் பித்ருகடன் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
அட்சய திருதியை அன்று செய்ய வேண்டியது
* தானம் செய்ய வேண்டும்.
* தவம் (வழிபாடு) செய்ய வேண்டும்.
* அட்சய திருதியை அன்று அதிகாலையான பிரம்ம முகூர்த்தத்தில் நாம் பூஜை செய்தாலே அதிக பலன் கிடைக்கும்.
* வீட்டு வாசலில் கோலம் போட்டு விளக்குகளை வைத்து மாவிலைத் தோரணம் கட்டி, வழிபாடுகள் செய்ய வேண்டும்.
* அட்சய திருதியை தினத்தன்று அதிகாலை விஷ்ணு பூஜை செய்வது அளவிடற்கரிய பலன்களைத்தரும்.
* பசு மாடு போன்ற விலங்குகளுக்கு ஏதேனும் உணவு கொடுக்க வேண்டும்.
* பறவைகளுக்கு நீர் வைக்க வேண்டும் தானியங்கள் போட வேண்டும்.
* பசி என்று வந்தவருக்கு ஒரு வாய் சோறு போட வேண்டும்.
* உடைகள் இல்லாதவர்களுக்கு அன்று புத்தாடைகள் வாங்கி தானம் செய்ய வேண்டும்.
ஒவ்வொரு அட்சய திருதியைக்கும் தவறாமல் தானம் செய்தால் மறு பிறவியில் அரசனுக்கு இணையான செல்வந்தர்களாக பிறப்பார்கள் என்பது ஐதீகம்.
