×

நடப்பாண்டில் இந்திய பொருளாதாரம் 6.4% வளர்ச்சி காணும் – ஐ.நா கணிப்பு

இந்தியாவின் பொருளாதாரம் இந்த ஆண்டில் (2026-ல்) 6.4 சதவீதமாகவும், அடுத்த ஆண்டில் (2027-ல்) 6.6 சதவீதமாகவும் வளரும் என்று சமீபத்திய ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை ஒன்றில் கணிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்திற்கான, பொருளாதார மற்றும் சமூக ஆணையம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், இந்தியா அடைந்த வலுவான வளர்ச்சியால் உந்தப்பட்டு, தெற்கு மற்றும் தென்மேற்கு ஆசிய பொருளாதாரங்கள் கடந்த 2024-ஆம் ஆண்டில் 5.2% வளர்ச்சி கண்டிருந்த நிலையில், கடந்த 2025-ஆம் ஆண்டில் 5.4% வளர்ச்சி அடைந்ததாக தகவல் தெரிவித்துள்ளது.

குறிப்பாக சரக்கு மற்றும் சேவை வரியின் (GST) விகிதக் குறைப்புகள், மற்றும் அமெரிக்காவின் வரி உயர்வு அமலுக்கு வருவதற்கு முன்னதாகவே கணிசமான ஏற்றுமதிகள் முன்கூட்டியே மேற்கொள்ளப்பட்டது போன்ற ஒருசில காரணிகள் காரணமாக 2025-ஆம் ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி 7.4 சதவீதமாக சற்று உயர்ந்ததாக ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்தின் பொருளாதார மற்றும் சமூக ஆய்வு 2026 (Economic and Social Survey of Asia and the Pacific 2026) அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த ஆகஸ்ட் 2025-ல் 50 சதவீத வரி விதித்ததை தொடர்ந்து, அமெரிக்காவிற்கான ஏற்றுமதி 25 சதவீதம் சரிந்ததால், 2025-ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் பொருளாதார செயல்பாடுகளில் சற்று வேகம் குறைந்து மந்தமானதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. அதே போல இந்தியாவின் பணவீக்கம் நடப்பாண்டில் 4.4 சதவீதமாகவும், 2027-ஆம் ஆண்டில் 4.3 சதவீதமாகவும் இருக்கும் என்றும் அறிக்கையில் கணிக்கப்பட்டுள்ளது.

அதே போல வர்த்தக ரீதியான பதற்றங்கள் மற்றும் புவிசார் அரசியல் சார்ந்த நிச்சயமற்ற சூழல்களுக்கு நடுவே, வளர்ந்து வரும் ஆசிய மற்றும் பசிபிக் பிராந்தியப் பொருளாதாரங்களுக்கு வரும் நேரடி அயல்நாட்டு முதலீடுகளின் (FDI) வரத்தும் குறைந்திருப்பதாக அறிக்கை குறிப்பிட்டுள்ளது. மேலும் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில், முதல் மூன்று காலாண்டுகளில் புதிய அந்நிய நேரடி முதலீட்டில் (greenfield FDI) மிகப்பெரிய பங்கை கவர்ந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா, ஆஸ்திரேலியா, கொரிய குடியரசு மற்றும் கஜகஸ்தான் ஆகியவை உள்ளன.

இந்த நாடுகள் முறையே 50 பில்லியன் அமெரிக்க டாலர், 30 பில்லியன் அமெரிக்க டாலர், 25 பில்லியன் அமெரிக்க டாலர் மற்றும் 21 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடுகளை கவர்ந்துள்ளதாக அறிவித்துள்ளன என்றும் அறிக்கை கூறுகிறது.

Tags : United Nations ,India ,Asia ,Pacific region ,
× RELATED இந்தியாவில் மிக மோசமான ஊழல் கட்சி...