மொடக்குறிச்சி: தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தலில் போட்டியிட கூடிய கட்சிகள் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வது, பரிசு பொருட்களை கொடுப்பது உள்ளிட்ட தேர்தல் நடத்தை விதிகளை மீறும் செயல்களில் ஈடுபடுகிறார்களா என மாநிலம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
அந்த வகையில் நேற்று நள்ளிரவு ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட செலப்பகவுண்டன்பாளையம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் கார் ஒன்றில் நடத்திய சோதனையில், உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட லட்சக்கணக்கான ரூபாய் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
காரில் இருந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் ஏதும் காட்டப்படாததால் அந்த பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பணத்தை எண்ணி பார்த்த போது அதில் மொத்தம் ரூ.90 லட்சம் இருந்தது கண்டறியப்பட்டது. பின்னர் ரூ.90 லட்சம் ரொக்க பணத்திற் காரில் கொண்டு வந்தவர்களிடம் இந்த பணம் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய எடுத்து செல்லப்படுகிறதா என விசாரிக்கப்பட்டது. உரிய முறையில் பதில் சொல்லாமல் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால், பறிமுதல் செய்யப்பட்ட ரூ.90 லட்சமும் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதனிடையே மொடக்குறிச்சியில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள பணம் , பாஜக-வினர் வாக்காளர்களுக்கு தர எடுத்து செல்ல முயன்றது என அப்பகுதி திமுக-வினர் குற்றம்சாட்டி உள்ளனர். ஏனென்றால் ரூ.90 லச்சம் ரொக்கம் எடுத்து செல்லப்பட்ட காரில் இருந்த அரவிந்த் என்பவர் மொடக்குறிச்சி பாஜக வேட்பாளரின் உறவினர் என்று திமுக-வினர் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
