கூச் பெஹார்: மேற்கு வங்க மாநிலம் கூச் பெஹாரில் நேற்று நடந்த பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது: பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதானை கொன்றது பிரதமர் மோடிதான். நாங்கள் தொகுதி மறுவரையறை மசோதாவைத்தான் எதிர்த்தோமே தவிர, பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதாவை அல்ல. 2010ம் ஆண்டில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 2010ல் மாநிலங்களவையில் பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றியது.
பெண்களின் உரிமைகளையும் நலனையும் உறுதி செய்வதில் நாங்கள் எப்போதும் மிகுந்த அக்கறை கொண்டுள்ளோம். 2023ம் ஆண்டிலேயே நாடாளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டு விட்டது. அதை உடனடியாக அமலுக்கு கொண்டு வர வேண்டும் என நாங்கள் கூறினோம். அதை ஏற்காத பாஜ 30 மாதங்களாக தூங்கி இருந்து விட்டு இப்போது தமிழ்நாடு, மேற்கு வங்க தேர்தலில் ஆதாயம் பெற அரசிலயமைப்பு திருத்த மசோதா கொண்டு வந்தனர்.
இந்த மசோதா மக்களவையில் முடங்கியது பிரதமர் மோடியின் தோல்வி. இது அவருடைய சித்தாந்தத்தின் தோல்வி. பாஜ மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகளின் தோல்வி. பிரதமர் மோடி தனது அரசுப் பணிகளை புறக்கணித்து விட்டு மேற்கு வங்கம் முழுவதும் நீண்ட காலமாக பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்கிறார். அவர் மேற்கு வங்கத்தின் முதல்வராக விரும்புகிறாரா அல்லது நாட்டின் பிரதமராக தொடர விரும்புகிறாரா? இவ்வாறு அவர் பேசினார்.
