×

சென்னைக்கு திமுக சிறப்பு தேர்தல் அறிக்கை 1000 மினி பேருந்துகள் இயக்கப்படும்

 

* மெட்ரோ ரயில் பணிகள் 2028க்குள் முடிக்கப்படும்
* 20,000 உயர் ஊதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்
* 20 அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சென்னை மாவட்டத்திற்கான தேர்தல் அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் ேநற்று வெளியிட்டார். அதில் அனைத்து குடியிருப்பு பகுதிகளிலும் அதி ஒளி மின் விளக்குகள் அமைக்கப்படும். 1,000 புதிய மினி பேருந்துகள் இயக்கப்படும். மெட்ரோ ரயில் விரிவாக்க பணிகள் 2028ம் ஆண்டுக்குள் முடிக்கப்படும். 20,000 உயர் ஊதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 23ம் தேதி நடக்கிறது. இதற்கான தேர்தல் பிரசாரம் நாளையுடன் முடிகிறது. சட்டமன்ற தேர்லை முன்னிட்டு திமுக தேர்தல் அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 29ம் தேதி வெளியிட்டார். அதில் இல்லத்தரசிகளுக்கு வாஷிங் மிஷின், பிரிட்ஜ் போன்ற வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க ரூ.8 ஆயிரம் கூப்பன் வழங்கப்படும்.

மகளிருக்கு ரூ.2000 உதவித்தொகை, மாணவர்களுக்கு ரூ.,1500, முதியோருக்கு ரூ.2000, மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2500 ஆக உயர்த்தப்படும், புதிதாக 10 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும். 20 லட்சம் விவசாயிகளுக்கு இலவச பம்ப்செட் மற்றும் 8ம் வகுப்பு வரை காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என்பது உள்ளிட்ட 50 தலைப்புகளில் 525 அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். திமுகவின் தேர்தல் அறிக்கை மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தேர்தல் அறிக்கை என்பது பேசும் பொருளாகியுள்ளது.

இந்த நிலையில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் “சென்னை சூப்பர்-6” எனும் திராவிட மாடல் 2.O வாக்குறுதிகளை வெளியிட்டார். இதனை திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பெற்றுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் சென்னை மாவட்டத்துக்கான திமுக வேட்பாளர்கள் உடன் இருந்தனர். சென்னை மாவட்டத்துக்கான திமுகவின் தனி தேர்தல் அறிக்கை 6 தலைப்புகளில் 20 அறிவிப்புகள் இடம் ெபற்றுள்ளன. அதில் சென்னைக்கான மேம்படுத்தப்பட்ட பொதுவசதிகள், சென்னை முழுவதும் சிறப்பான போக்குவரத்து, திட்டமிட்ட கால அளவில் உட்கட்டமைப்புத் திட்டங்கள், மனிதாபிமானம்-அறிவியல் முறையில் கைவிடப்பட்ட நாய்களின் பிரச்னைக்குத் தீர்வு, உலகளாவிய சிறப்பு மையம், உலகளாவிய திறமைத் தளம் ஆகிய தலைப்புகளிலான “திராவிட மாடல் 2.0 வாக்குறுதிகள் அதில் இடம் பெற்றுள்ளன.

சென்னைக்கான தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பதாவது:

* மேம்படுத்தப்பட்ட பொது வசதிகள்

நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்புகளில் குடியிருப்போர் நல மகளிர் நலச் சங்கம் மூலம் அரசு நிதியுதவியுடன் பொது வசதிகள் மேம்படுத்தப்படும். மெட்ரோ குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகளுக்கு ஆர்ஓ சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகள் மற்றும் மெட்ரோ குடிநீர் வசதி உள்ள குடியிருப்புகளுக்கு காலமுறைப்படி குடிநீர் விநியோகம் செய்யப்படும். அனைத்து குடியிருப்பு பகுதிகளிலும் அதி ஒளி தெருவிளக்குள் அமைக்கப்படும். கலை, இசை, இலக்கிய நிகழ்ச்சிகளுக்கென ஒரு தனித்துவ உலகத்தர பண்பாட்டு மையம் அமைக்கப்படும்.

* சென்னை முழுவதும் சிறப்பான போக்குவரத்து

பேருந்து நிறுத்தங்கள், மெட்ரோ நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களுடன் ஒவ்வொரு தெருவையும் இணைக்கும் வகையில் 1,000 புதிய மினி பேருந்துகள் இயக்கப்படும். போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, பயண நேரத்தை 25% வரை சேமிக்க செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் இயங்கும் போக்குவரத்து மேலாண்மை அமல்படுத்தப்படும்.

* திட்டமிட்ட கால அளவில் உட்கட்டமைப்புத் திட்டங்கள்

எண்ணூர் முதல் பூஞ்சேரி வரையிலான சென்னை எல்லைச் சாலை திட்டம் போன்ற 10-க்கும் மேற்பட்ட முக்கிய திட்டங்கள் 2027க்குள் முடிக்கப்படும். மெட்ரோ விரிவாக்கப் பணிகள் 2028ம் ஆண்டுக்குள் முடிக்கப்படும். மழைநீர் வடிகால்கள் 2028ம் ஆண்டுக்குள் முடிக்கப்படும்.
அழகான சாலைகள், அகலமான நடைப்பாதைகள், நிழல் தரும் மரங்கள், அனைவரும் பயன்படுத்தக்கூடிய கழிப்பறை வசதிகள் என உலகத் தரத்தில் எழில்மிகு சாலை வசதிகள் 2029ம் ஆண்டுக்குள் அமைக்கப்படும். மனிதாபிமானம், அறிவியல் முறையில் கைவிடப்பட்ட நாய்களின் பிரச்னைக்கு தீர்வு. விலங்குகள் பிறப்புக் கட்டுப்பாட்டு (ஏபிசி) திட்டத்தின் கீழ், கால்நடை மருத்துவர்கள் மற்றும் நாய் பிடிப்பவர்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரிக்கப்படும். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் (என்ஜிஓஎஸ்) இணைந்து விரிவுபடுத்தப்பட்ட காப்பகங்கள் உருவாக்கப்படும்.

உலகளாவிய சிறப்பு மையம்

ஏஐ, அனிமேசன், விசுவல் எபேக்ட்ஸ், கேமிங் போன்ற தொழில்நுட்பங்களுக்காக சிறப்பு மையம் உருவாக்கப்படும். 10 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்படும். 20,000 உயர் ஊதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். உலகளாவிய திறமைத் தளம். உலகத்தரம் வாய்ந்த உட்கட்டமைப்பு.
உயர்ரகத் திறன் மேம்பாட்டு பயிற்சி. ஆராய்ச்சி மையம். அதிக வருமானம் ஈட்டக்கூடிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
இவ்வாறு தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

Tags : DMK ,Chennai ,Chief Minister ,MK Stalin ,Chennai district ,
× RELATED ஐபிஎல்: ஈடன் கார்டனில் ரிங்கு சிங்...