×

கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்கம்; நெற்பயிரை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் பாதிப்பு: நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு

திருத்தணி: திருத்தணி பகுதியில், நவரை பருவத்தில் சாகுபடி செய்த நெல் மகசூலுக்கு தயாராக உள்ள நிலையில், அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில், நவரை பட்டத்தில் நெல் அறுவடை பணியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். விவசாயிகள் பயன்பெறும் வகையில், மாவட்டத்தில் 50 பகுதிகளில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் கடந்த 1ம் தேதி தொடங்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. திருத்தணி, திருவாலங்காடு, ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு பகுதிகளில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் பெயர் பதிவு செய்து நெல் அறுவடை செய்து விற்பனை செய்கின்றனர்.

கடந்த 10 நாட்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் லாரிகளில் சேமிப்பு கிடங்குகளுக்கு கொண்டு செல்ல லாரிகள் அனுப்புவதில் ஏற்பட்டுள்ள காலதாமதத்தால், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் திறந்தவெளியில் மற்றும் டிராக்டர்களில் தேக்கமடைந்துள்ளது. இதனால், மகசூலுக்கு தயார் நிலையில் உள்ள நெல் அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

அதிகாரிகள் மெத்தனம்
திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி, திருவாலங்காடு, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை பகுதிகளில் செயல்பட்டு வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 10 நாட்களாக நெல் மூட்டைகள் இருப்பு எடுக்காமல் தேங்கி நிற்கிறது. இதனால், சேமிப்பு கிடங்கு நிரம்பி திறந்த வெளியில் நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும், விற்பனைக்கு விவசாயிகள் கொண்டு வந்த நெல் மூட்டைகள் டிராக்டர்களில் 4 நாட்களாக காத்திருக்கிறது. இதனால், விவசாயிகள் பெரும் பாதிப்பு அடைந்துள்ளனர்.

லாரிகள் அனுப்புவதில் அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுகின்றனர். கமிஷன் கொடுத்தால் மட்டுமே லாரிகள் அனுப்பும் நிலை உள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர்.
திருத்தணி அருகே வேலஞ்சேரி, பூனிமாங்காடு, என்.என்.கண்டிகை உள்ளிட்ட பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளதாலும் அறுவடை செய்த நெல் விவசாய நிலங்கள் மற்றும் நெல் களங்களில் கொட்டப்பட்டுள்ளதால், மகசூலுக்கு தயார் நிலையில் உள்ள நெல் அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அடிக்கடி கோடை மழை பெய்து வருவதால் விவசாயிகள் பாதிக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்தனர்.

Tags : Consumer Goods Association ,Thiruthani ,Tirudtani ,THIRUVALLUR DISTRICT ,
× RELATED பெரியபாளையம் காவல் நிலையத்தில்...