×

அரசின் வாக்குறுதிகளை நம்பமுடியாது பிரதமர், அமித்ஷா சொல்வது ஒன்று மசோதாவில் இருப்பது வேறு: கனிமொழி எம்.பி குற்றச்சாட்டு

புதுடெல்லி: திமுக நாடாளுமன்றக்குழுத் தலைவர் கனிமொழி எம்.பி. மக்களவையில் தொகுதி மறுவரையறை மசோதா மீதான விவாதத்தில் பேசியதாவது: பெண்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பது போன்ற போர்வையில் கொண்டு வரப்பட்டுள்ள இந்த மூன்று மசோதாக்களும், இந்தியக் கூட்டாட்சித் தத்துவத்தின் மீதான மிகப்பெரிய தாக்குதல். இப்போது தொகுதிகளின் எண்ணிக்கையை 850 ஆக அதிகரித்தால் பெரும்பாலான எம்பிக்களுக்கு ஐந்து ஆண்டுகளில் இந்த நாடாளுமன்றத்தில் பேசக் கூட வாய்ப்பு கிடைக்காது.

தமிழ்நாட்டில் இரண்டு குழந்தைகளுடன் குடும்பக் கட்டுப்பாடு செய்துகொண்ட ஒவ்வொரு குடும்பமும் நாட்டின் நலனுக்காக அரசு சொன்னதை நம்பியது. தற்போது தமிழ்நாட்டின் கருவுறுதல் விகிதம் 1.6 ஆக உள்ளது.  ஆனால் இந்த ஒன்றிய பாஜ அரசு, \\” இந்த நாட்டின் மீது அக்கறை கொண்டு எங்களை மதித்து நடந்ததற்காக நீங்கள் தண்டிக்கப்படுவீர்கள், உங்கள் பிரதிநிதித்துவத்தை நாங்கள் குறைக்கப் போகிறோம்\\” என்று சொல்கிறது. தொகுதி மறுவரையறை ஆணையத்தின் முடிவை எந்த நீதிமன்றத்திலும் கேள்வி கேட்க முடியாது என்பது அச்சமளிக்கிறது.

பெண்கள் இடஒதுக்கீட்டை 2021 கணக்கெடுப்பிற்குப் பின் எடுக்கப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் அமல்படுத்துவோம் என்று கூறிவிட்டு, தற்போதுவரை கணக்கெடுப்பை நடத்தாமல் 2011 தரவுகளைப் பயன்படுத்தத் துடிப்பது ஏன்? கடந்த பத்து ஆண்டுகளாக மாநில முதலமைச்சர்களின் கோரிக்கைகளை மதிக்காத இந்த அரசு, தேர்தல் நேரத்தில் மட்டும் இவ்வளவு அவசரம் காட்டுவது வெறும் அரசியல் நாடகம்.

இது அரசியலமைப்புச் சீர்திருத்தம் அல்ல, தேர்தலுக்கான ஒரு தந்திரம். தொகுதி மறுவரையறையுடன் பெண்கள் இடஒதுக்கீட்டை இணைப்பது ஒரு பொறி. தொகுதி மறுவரையறையை எதிர்த்தால் எங்களைப் பெண்களுக்கு எதிரானவர்கள் எனக் காட்ட பாஜக முயல்கிறது. பெண்களைத் தேர்தல் கேடயமாகப் பயன்படுத்துகிறது. உங்களுக்கு உண்மையில் அக்கறை இருந்தால், தொகுதி மறுவரையறை நிபந்தனையை நீக்கிவிட்டு 2029-லேயே இடஒதுக்கீட்டை வழங்கலாமே?

தொகுதிகளின் எண்ணிக்கையை 850ஆக உயர்த்தினால், வட மாநிலங்கள் மற்றும் பாஜ ஆளும் மாநிலங்களின் பலம் மட்டுமே 400 இடங்களைத் தாண்டிவிடும். இதன் மூலம், தென்னிந்தியா மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் ஆதரவே இல்லாமல் அரசியலமைப்பைத் திருத்தும் அதிகாரம் உங்களுக்குக் கிடைத்துவிடும். தென்னிந்திய மாநிலங்களின் வலிமையைக் குறைத்து, உங்கள் கொள்கைகளைத் திணிப்பதே இந்தத் திட்டத்தின் உண்மையான நோக்கம்.

குடியரசுத் தலைவர் தேர்தலிலும் மக்கள் தொகை அடிப்படையில் எம்.எல்.ஏ-க்களின் வாக்கு மதிப்பு மாறுவது, கூட்டாட்சி சமநிலையைப் பாதிக்கும். இந்த மசோதா மிகவும் குழப்பமானது. 2011 கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் இடங்கள் 32-ஆகக் குறையுமா, அல்லது இடங்கள் அதிகரிக்கப்பட்டால் 48 அல்லது 59 இடங்கள் கிடைக்குமா என்பதில் தெளிவு இல்லை. பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் சொல்வது ஒன்றாக உள்ளது.

ஆனால், மசோதாவில் வேறொன்றாக இருக்கிறது. இங்கே அவையில், அளிக்கப்படும் வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்படுவதில்லை என்பதால், இந்த அரசின் வாக்குறுதிகளை எங்களால் நம்ப முடியவில்லை. தற்போதைய 543 இடங்களிலேயே பெண்கள் இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்தினால் நாங்கள் ஆதரிப்போம். 25 ஆண்டுகாலத் திட்டத்தை 48 மணி நேரத்தில் தீர்மானிக்காமல், மசோதாவைத் திரும்பப் பெற்று நாடாளுமன்றக் கூட்டுக் குழுவிடம் ஒப்படையுங்கள்.

கருப்பு என்பது எங்களின் அறிவுசார் தலைவர் பெரியார் கற்பித்த சுயமரியாதைப் போராட்டத்தின் அடையாளம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். மாநிலங்களைச் சமமான கூட்டாளிகளாகக் கருதிய அண்ணா, கலைஞர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகியோரின் பெயரால், மாநிலங்களின் உரிமையைப் பறிக்கும் இந்த மசோதாவை நாங்கள் எதிர்க்கிறோம் என்றார்.

Tags : Amit Shah ,Kanimozhi ,New Delhi ,DMK Parliamentary Group ,Lok Sabha ,
× RELATED தமிழ்நாட்டுக்கு பாதிப்பை உருவாக்க...