×

மாநிலங்களவை துணை தலைவராக ஹரிவன்ஷ் போட்டியின்றி தேர்வு

புதுடெல்லி: மாநிலங்களவை துணை தலைவராக ஹரிவன்ஷ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். நாடாளுமன்றத்தில் மாநிலங்களவை துணைத் தலைவராக இருந்த ஐக்கிய ஜனதா தளத்தின் ஹரிவன்ஷ் நாராயணன் சிங் பதவிக்காலம் கடந்த 9ம் தேதியுடன் முடிவடைந்தது. கடந்த 10ம் தேதியன்று குடியரசுத் தலைவரால் இவர் மாநிலங்களவை உறுப்பினராக நியமன உறுப்பினராக அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஹரிவன்ஷ் நாராயண் சிங் (69) மூன்றாவது முறையாக மாநிலங்களவை துணை தலைவர் பதவிக்கு வேட்பாளராக நிறுத்தப்பட்டார். இதனையடுத்து மாநிலங்களவை துணை தலைவர் பதவிக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. அப்போது, ஹரிவன்ஷை துணைத் தலைவராக தேர்ந்தெடுப்பதற்கான தீர்மானம் அவை முன்னவர் ஜேபி நட்டாவால் முன்மொழியப்பட்டது.

பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலமாக நிறைவேற்றப்பட்டது. இந்த தேர்தலின்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதன் பின்னர் ஹரிவன்ஷ் மாநிலங்களவை துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஹரிவன்ஷ் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு மொத்தம் ஐந்து தீர்மானங்கள் முன்மொழியப்பட்டன. தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட பிறகு ஹரிவன்ஷ் மாநிலங்களவையின் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பதை நான் அறிவிக்கிறேன் என்று மாநிலங்களவை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

பின்னர் அவை முன்னவர் நட்டா, எதிர்க்கட்சி தலைவர் கார்கேவையும் அழைத்து துணைத் தலைவருக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைக்கு ஹரிவன்ஷை அழைத்துச்செல்லுமாறு அவைத்தலைவர் கேட்டுக்கொண்டார். பிரதமர் மோடி முன்னிலையில் அவர்கள் இருவரும் ஹரிவன்ஷை இருக்கையில் அமர வைத்தனர். மாநிலங்களவைத் துணைத் தலைவராக ஹரிவன்ஷ் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு பிரதமர் மோடி மற்றும் கார்கே ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். இது அவர் மீதும் அவரது அனுபவத்தின் மீதும் அவை வைத்துள்ள நம்பிக்கையை பிரதிபலிக்கிறது” என்று பிரதமர் தெரிவித்தார்.

Tags : Harivansh ,Deputy Chairman ,Rajya Sabha ,New Delhi ,Harivansh Narayan Singh ,United Janata Dal ,President… ,
× RELATED தமிழ்நாட்டுக்கு பாதிப்பை உருவாக்க...