- தமிழ்நாடு அரசு
- வேலூர்
- பள்ளி கல்வித் துறை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தொடக்கக் கல்வி கூட்டு இயக்குநரகம்
வேலூர், ஏப்.18: தமிழகத்தில் நடப்பு 2026-2027ம் கல்வி ஆண்டில் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் ஆட்டிசம் மற்றும் அறிவுசார் குறைபாடுடைய மாற்றுத்திறனாளி குழந்தைகளை பள்ளியில் சேர்க்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்(தொடக்கக்கல்வி)களுக்கும் தொடக்கக்கல்வி இணை இயக்குநரகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ‘ஆட்டிசம் மற்றும் அறிவுசார் குறைபாடு உள்ள குழந்தைகளைத் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் முதலாம் வகுப்பில் கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதற்காக அனைத்துப் பள்ளிகளின் முகப்பிலும் அல்லது தலைமை ஆசிரியர் அறைக்கு முன்னும், ‘அறிவுசார் குறைபாடு மற்றும் ஆட்டிசம் நிலை கொண்ட குழந்தைகள் இந்தப் பள்ளியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.’ என்ற வாசகத்தை பெரிய அளவில் டிஜிட்டல் பலகைகளாகவோ அல்லது வேறு வகையிலோ காட்சிப்படுத்தி வைக்க வேண்டும்.
இந்த உத்தரவை அனைத்துப் பள்ளிகளும் பின்பற்றுவதை மாவட்டக் கல்வி அலுவலர்கள்(தொடக்கக் கல்வி) உறுதி செய்ய வேண்டும். மேலும் பள்ளிகளில் இந்த வாசகம் காட்சிப்படுத்தப்பட்டதற்கான அறிக்கையை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் ஆட்டிசம் பாதிப்புள்ளோருக்கான சிறப்பு மையத்திற்கு அனுப்ப வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பள்ளிகளில் உள்ளடக்கிய கல்வியை ஊக்குவிக்கவும், இக்குழந்தைகளுக்கான கல்வி உரிமையை உறுதிப்படுத்தவும் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
