×

தபால் வாக்குகளை தேர்தல் நடத்தும் அலுவலகங்களில் செலுத்த ஏற்பாடு கலெக்டர் தகவல் 12 துறை சார்ந்த அலுவலர்கள் இன்று முதல்

வேலூர், ஏப்.17: வேலூர் மாவட்டத்தில் 12 துறை சார்ந்த அலுவலர்கள் இன்று முதல் தபால் வாக்குகளை தேர்தல் நடத்தும் அலுவலகங்களில் செலுத்தலாம் என்று கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.கலெக்டர் சுப்புலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்திய தேர்தல் ஆணையமானது தேர்தல் பணிகளில் ஈடுபடும் அலுவலர்களுக்கு தங்களுடைய வாக்குரிமையை செலுத்துவதற்காக தபால் வாக்கு வசதியை வழங்கியுள்ளது. அதன்படி வாக்குச்சாவடிகளில் பணிபுரியும் வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்கள் தங்களுடைய தபால் வாக்குகளை 2ம் கட்ட பயிற்சி வகுப்பு மற்றும் மறு பயிற்சி வகுப்புகளில் செலுத்த வழிவகை செய்துள்ளது.
தேர்தல் வாக்குப்பதிவு நாளன்று அத்தியாவசிய பணிகளில் ஈடுபடும் தென்னக ரயில்வே, இந்திய வானொலி, கப்பல்துறை, விமான போக்குவரத்து துறை, மத்திய தகவல் ஒளிப்பரப்புத்துறை, ஊடகத்துறையினர், சென்னை மெட்ரோ ரெயில், தமிழ்நாடு போக்குவரத்து கழகம், தமிழ்நாடு மின்பகிர்மான கழகம், தீயனைப்புத்துறை, சிறைத்துறை மற்றும் போக்குவரத்து காவலர்கள் ஆகிய 12 துறைகளை சார்ந்த விருப்பமுள்ள பணியாளர்கள் தபால் வாக்குகளை செலுத்துவதற்காக படிவம் 12டி யும், வாக்குப்பதிவு தினத்தன்று பணிகளில் ஈடுபடும் காவல்துறையினர் தங்களது தபால் வாக்குகளை செலுத்த படிவம் 12 யும் சம்மந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் வழங்கியுள்ளனர்.

அவ்வாறு வேலூர் மாவட்டத்தில் அத்தியாவசிய பணிகளில் ஈடுபட்டுள்ள 12 துறைகளை சார்ந்த 171 நபர்கள் அளித்துள்ளனர். மேலும் வாக்குப்பதிவு தினத்தன்று தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள வேலூர் மாவட்டத்தை சார்ந்த 1473 காவலர்கள், 146 நுண் பார்வையாளர்கள் மற்றும் இதர அலுவலர்கள் தங்களது தபால் வாக்குகளை தங்களது சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்திலும், பிற மாவட்டங்களை சார்ந்த 395 காவலர்கள் தங்களது தபால் வாக்குகளை வேலூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்திலும், சேவூரில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் பிரிவு 15 வது அணியில் பணிபுரியும் 615 காவலர்கள் தங்களது தபால் வாக்குகளை காட்பாடி சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்திலும் அமைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு வசதி மையங்களில் இன்று முதல் வரும் 22ம் தேதி வரை நாள்தோறும் காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை செலுத்தலாம். எனவே தபால் வாக்குகளை செலுத்த உள்ள அத்தியாவசிய பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள், காவலர்கள் மற்றும் நுண்பார்வையாளர்கள் தபால் வாக்குகளை செலுத்தும்பொழுது தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள 12 அடையாள அட்டைகளில் ஏதேனும் ஒன்றை கட்டாயம் கொண்டு செல்ல வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags : Vellore ,Collector ,Suppulikshmi ,Supulakshmi ,Election Commission of India ,
× RELATED உரிய ஆவணமின்றி காரில் கொண்டு சென்ற...