புழல், ஏப்.18: தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நேற்று முதல் அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி விடுமுறை நாட்களில் மாணவர்களின் பாதுகாப்பு கருதி பெற்றோர் கவனத்தில் கொள்ள வேண்டிய சில முக்கிய தகவல்கள் குறித்து புழல் காந்தி பிரதான சாலையில் உள்ள சென்னை மாநகராட்சி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ஜான்சிராணி தலைமையில், பெற்றோர்-ஆசிரியர் கழக ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் பள்ளி வளாகத்தில் நடந்தது. இதில், மாணவர்களின் பாதுகாப்பு, மாணவர்களின் ஆரோக்கியமான உணவு, கல்வி இணை செயல்பாடுகள், ஒரு மணி நேரமாவது பொது நூலகங்களுக்கு குழந்தைகளை அழைத்து செல்லுதல், இசை, நடனம் மற்றும் ஓவியம் வரைதல் போன்றவற்றில் ஆர்வமுள்ள மாணவர்களை விடுமுறை நாட்களில் இவற்றை கற்றுகொள்ள பெற்றோர் ஊக்கப்படுத்த வேண்டும். மேலும், அருகில் உள்ள ஏரி, குளங்களுக்கு மாணவர்கள் செல்லாதவாறு பாதுகாத்து கொள்ள வேண்டும் உள்ளிட்ட அறிவுறைகள் அளிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் அம்பத்தூர் வட்டார அனைவருக்கும் கல்வி இயக்க மேற்பார்வையாளர் ஹில்டா பால், மாணவர்களின் பெற்றோர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
