கீழ்பென்னாத்தூர், ஏப். 17: சட்டமன்ற தேர்தலில் 100% வாக்களிக்க தேர்தல் ஆணையத்தின் சின்னம் வடிவில் விழிப்புணர்வு நடந்தது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் 23ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்குவதை தடுக்க பறக்கும் படையினர், நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே சட்டமன்ற பொதுத்தேர்தலில் 100% சதவீதம் வாக்குப்பதிவை உறுதி செய்ய மாவட்டம் முழுவதும் வாக்காளர்களுக்கு தேர்தல் குறித்த விழிப்புணர்வு 100 சதவீதம் ஏற்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பிலும், அரசுப்பள்ளிகளின் சார்பிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றது.
அதன்படி திருவண்ணாமலை மாவட்டம் 064.கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, கீழ்பென்னாத்தூர் அரசு, ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் சார்பாக 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி தலைமை ஆசிரியர் எம்.பிரசன்னா தலைமையில், கீழ்பென்னாத்தூர் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவி ஆணையர் (கலால்) க.செந்தில்குமார், கீழ்பென்னாத்தூர் தாசில்தாரும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் வே.ராஜேந்திரன், தேர்தல் பிரிவு துணை தாசில்தார் தனபால், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் வெங்கடேசன், தலைமையிடத்து தாசில்தார் மஞ்சுநாதன் ஆகியோர் முன்னிலையில் பள்ளி ஆசிரியர்கள் ஒருங்கிணைப்புடன் இந்திய தேர்தல் ஆணையத்தின் சின்னம் வடிவில் 400க்கும் மேற்பட்ட மாணவர்களை அமர வைக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் உதவித் தலைமை ஆசிரியர் கேசவன், உடற்கல்வி இயக்குனர் முகமது நபி ஆகியோர் உடனிருந்தனர்.
