டெல்லி: நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் துவங்கி நடைபெற்று வரும் நிலையில், ஒன்றிய அரசு நிறைவேற்ற துடிக்கும் தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு அறிமுக நிலையிலேயே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அறிமுக நிலையிலேயே தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு எதிராக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தின. மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 543-லிருந்து 850-ஆக அதிகரிக்க செய்யும் தொகுதி மறுவரையறை மசோதா இன்று தாக்கலாகிறது. தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் பங்கேற்றுள்ள எம்.பி-க்கள் கருப்பு சட்டை அணிந்து உள்ளனர்.
மாநில சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரை கூட்டி உள்ளதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள மசோதாக்கள் கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படை மீதான தாக்குதல் என கண்டனம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மகளிர் இட ஒதுக்கீடு மசோதா 2023-ல் நிறைவேற்றப்பட்ட நிலையில், 2024 மக்களவை தேர்தலின்போது நிறைவேற்ற கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், அப்போது அதை ஏற்க மறுத்த ஒன்றிய அரசு, அவசரகதியில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற தற்போது முயற்சிப்பது ஏன் என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி உள்ளன. அரசியலமைப்பு மாநிலங்களுக்கு வழங்கி உள்ள பாதுகாப்பை முற்றிலும் தகர்க்க பாஜக முயல்கிறது, தற்போது அவசரகதியில் மசோதாக்களை ஒன்றிய அரசு தாக்கல் செய்யும் விதமே பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.
நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை கபளீகரம் செய்ய பாஜக அரசு முயற்சிக்கிறது என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கே.சி.வேணுகோபால் குற்றம்சாட்டி பேசினார். இப்படி பேசி கொண்டிருந்த போது இடையிடையே குறுக்கிட்டு பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பார்த்து கடுப்பான கே.சி.வேணுகோபால், தான் பேசும் போது வார்த்தைக்கு வார்த்தை குறுக்கிட்டு பேசுவது ஏன் என்று கேள்வி எழுப்பினார். மக்கள் தொகை கணக்கெடுப்பு, மறுவரையறைக்கு பின் மகளிர் இடஒதுக்கீடு தரப்படும் என சட்டம் கொண்டு வந்ததே பாஜக தான், ஆனால் தற்போது புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 2029-க்குள் தொகுதி மறுவரையறை மேற்கொள்ள சாத்தியம் இல்லை என்று ஒன்றிய அரசு கூறுவது ஏற்கத்தக்கது அல்ல, எனவே தொகுதி மறுவரையறை மசோதாவை திரும்ப பெற வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் நீங்கள் எப்படி தொகுதி மறுவரையறை செய்தீர்கள் என்பதை நாட்டு மக்கள் பார்த்து கொண்டு தான் இருந்தார்கள், எனவே தொகுதி மறுவரையறை என்ற பெயரில் அதிகார குவிப்பை செய்ய முயற்சிக்க வேண்டாம் என காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது.
