டெல்லி: நாட்டின் தென் மாநிலங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கும் தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாக சில அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்ற திட்டமிடும் தொகுதி மறுவரையறையால் தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்த தகவல்கள் அரசியல் சூழ்ச்சியா என்று பலரது மனதிலும் கேள்விகளை எழுப்பி இருக்கிறது.
ஏனென்றால் தொகுதி மறுவரையறையால் நாடாளுமன்றத்தில் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் வெகுவாக குறையும் என்று தெரிகிறது. தற்போதைய நிலவரப்படி தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் நாடாளுமன்றத்தில் 24.3 சதவீதமாக இருந்து வருகிறது. ஒருவேளை ஒன்றிய அரசின் திட்டப்படி தொகுதி மறுவரையறை மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு விட்டால் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் நாடாளுமன்றத்தில் 20.7 சதவீதமாக குறைந்து விடும் என தெரிகிறது. அதே நேரம் தற்போதைய நிலவரப்படி 38.1 சதவீதமாக இருக்கும் இந்தி பேசும் வட மாநிலங்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் தொகுதி மறுவரையறைக்கு பின் 43.1 சதவீதமாக அதிகரித்து விடும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.
அதே போல ஒன்றிய அரசு நிறைவேற்ற துடிக்கும் தொகுதி மறுவரையறைப்படி இந்தி பேசும் மாநிலங்களின் மக்களவை தொகுதி எண்ணிக்கை சுமார் 76.8 சதவீதம் உயரும். ஆனால் இதோடு ஒப்பிட்டால் தொகுதி மறுவரையறைக்கு பின் தென் மாநிலங்களின் மக்களவை தொகுதி வெறும் 33.3 சதவீதம் மட்டுமே உயரும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த சதவீதம்படி பார்த்தால் ஒன்றிய அரசின் மறுவரையறைப்படி வட மாநிலங்களின் மக்களவை தொகுதி எண்ணிக்கை, தென் மாநிலங்களை விட சுமார் 2 மடங்கு உயரும். 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகைப்படி தொகுதி மறுவரையறை நடைபெறும் என்பதால், மக்கள் தொகையை கட்டுப்படுத்திய தென் மாநிலங்களுக்கு, மறுவரையறையால் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் மாறாது என பாஜக அளித்த உறுதிமொழி மசோதாவில் இல்லை என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.
தொகுதி மறுவரையறை செய்வதால் தென் மாநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படாது என பாஜக கூறியிருந்த உறுதிமொழிகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன என அரசியல் விமர்சகர்கள் குறிப்பிட்டு உள்ளனர். மறுவரையறை மசோதா நிறைவேறுமானால் பாஜக வலுவாக உள்ள மாநிலங்களுக்கு சாதகமான சூழல் நாடாளுமன்றத்தில் உருவாகும், அதே நேரம் பாஜக பலவீனமாக உள்ள மாநிலங்கள் நாடாளுமன்றத்தில் பலவீனமடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2026-27 மக்கள் தொகை கணக்கெடுப்பு காலதாமதமாவதால், 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மறுவரையறை செய்ய பாஜக திட்டமிடுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
