கமுதி அருகே பொன்னு விளையுற பூமியில் பொன் ஏர் விடும் திருவிழா: புதிய ஏர்க் கலப்பையுடன் ஊர்வலமாக சென்ற கிராம மக்கள்

 

கமுதி: சித்திரை முதல் நாளையொட்டி கமுதி அருகே பச்சேரி கிராமத்தில் பாரம்பரியமாக நடைபெறும் பொன் ஏர் விடும் திருவிழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே அபிராமம் பகுதியில் உள்ள பள்ளபச்சேரி கிராமத்தில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. இக்கிராமத்தில் 1000-க்கும் மேற்பட்ட விவசாய குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு ஆண்டுதோறும் விவசாயம் செழிக்க வேண்டி சித்திரை முதல் நாளில் பொன் ஏர் விடும் திருவிழா நடைபெறுவது வழக்கம். கடந்த 200 வருடங்களுக்கும் மேலாக இந்த பாரம்பரிய விழா நடைபெற்று வருகிறது.

இதன்படி, இந்த ஆண்டு சித்திரை மாதத்தின் முதல் நாளையொட்டி நேற்று மாலை பொன் ஏர் விடும் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக, புதிதாக செய்யப்பட்ட ஏர் கலப்பை அபிராமத்தில் உள்ள சப்பாணி கோயில் முன்பு வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர், வாணவேடிக்கை, கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டத்துடன் கிராம மக்கள் ஊர்வலமாக ஏர் கலப்பையை முக்கிய வீதிகள் வழியாக சுமந்து வந்தனர். பின்னர் அபிராமம் – முதுகுளத்தூர் சாலையில் உள்ள அய்யனார் கோவில் முன்பு வைத்து ஏர் கலப்பைக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

தொடர்ந்து, பள்ளபச்சேரி கிராம வயலில் ஏர்கலப்பை கொண்டுசெல்லப்பட்டு இரட்டை மாடுகள் பூட்டப்பட்டு பொன் ஏர்விடும் பாரம்பரிய திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இதில் கிராம மக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு, இந்த ஆண்டு விவசாயம் செழிக்க வேண்டி வழிபட்டனர். வயலில் அனைவரும் இணைந்து நவதானியங்கள் மற்றும் நெல் மணிகளை விதைத்தனர். இந்த விழாவால் பள்ளபச்சேரி கிராமம் களைகட்டியது.

Related Stories: