×

சொத்து விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் மருத்துவக்கல்வி இயக்குநரகம் உத்தரவு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பணியாளர்கள்

வேலூர், ஏப்.12: அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் பணிபுரியும் பணியாளர்கள் சொத்து விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று மருத்துவக்கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு மருத்துவக் கல்வி ஆராய்ச்சி இயக்குநரகத்தின் கீழ் மாநிலம் முழுவதும் 36 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் செயல்பட்டுவருகின்றன. இங்கு இருதய பாதிப்புகளுக்கு துல்லியமாக கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் கேத்லேப், சிடி பெட்ஸ்கேன், உணர்திறன் ஒருங்கிணைப்பு பூங்கா உள்ளிட்ட பல்வேறு அதிநவீன வசதிகள் உள்ளன. நாள்தோறும் புற நோயாளிகளாகவும், உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

அதேபோல், 3 பல் மருத்துவக்கல்லூரிகளும் செயல்பட்டு வருகிறது. அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளுடன் இணைந்த மருத்துவமனைகள், பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனைகள், புறநகர் மருத்துவமனைகளும் செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவக் கல்லூரிகளில் முதல்வர்கள். இயக்குநர்கள், திட்ட இயக்குநர்கள், இணை இயக்குநர், துணை முதல்வர், மருத்துவ கண்காணிப்பாளர்கள், பேராசிரியர்கள், நர்சிங் கல்லூரி முதல்வர்கள், இணை பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், ஆர்எம்ஓக்கள், பிற மருத்துவ அதிகாரிகள், நர்சிங் ஊழியர்கள், பாரமெடிக்கல் ஊழியர்கள், அமைச்சுப்பணியாளர்கள், அடிப்படை ஊழியர்கள் என்று 55 ஆயிரத்து 211 பேர் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது மருத்துவக்கல்லூரி ஆராய்ச்சி இயக்குநரகத்தின் கீழ் செயல்படும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பணிபுரியும் அனைத்து மருத்துவர்கள், செவிலிய கண்காணிப்பாளர்கள், செவிலியர்கள், இதர பணியாளர்கள், மருத்துவமனை பணியாளர்களின் பெயரில் உள்ள சொத்து விவரங்களை அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மருத்துவக்கல்லூரி ஆராய்ச்சி இயக்குநரம் சார்பில், அனைத்து மருத்துவக் கல்லூரி முதல்வர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் அனைத்து மருத்துவர்கள், செவிலிய கண்காணிப்பாளர்கள், செவிலியர்கள், இதரப்பணியாளர்கள், மருத்துவமனை பணியாளர்கள், சுகாதாரப்பணியாளர்கள் மற்றும் அமைச்சு பணியாளர்கள் ஆகிய அனைவரும் தங்களின் பெயரில் உள்ள சொத்துவிவரங்களை உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும், அனைத்து அலுவலர்களின் சொத்து விவரங்களை பணிப்பதி வேட்டில் பதிய வேண்டும். பணிப்பதிவேட்டின் நகல்கள் மற்றும் பணியாளர்களின் எண்ணிக்கை குறித்த விவரங்களை மருத்துவக்கல்லூரி ஆராய்ச்சி இயக்குநரகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். அலுவலர்கள், பணியாளர்களின் சொத்து தொடர்பான ஆவணங்களை உடனடியாக சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. சொத்து தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்காத அலுவலர்களின், விவரங்களையும் இயக்குநரகத்திற்கு அனுப்பி வைக்கவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Directorate of Medical Education ,Vellore ,Tamil Nadu Directorate of Medical Education and Research ,
× RELATED கணினி குலுக்கல் முறையில்...