வேலூர், ஏப்.12: வேலூர் சிறைகளில் உள்ள சட்டமன்ற தேர்தலில் குண்டர் கைதிகள் யாரும் வாக்களிக்க விருப்ப மனு அளிக்கவில்லை என சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 23ம் நடைபெற உள்ளது. தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் வீட்டில் இருந்தே வாக்களிக்கும் வகையில் தபால் வாக்கிற்கான படிவங்கள் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் சிறையில் உள்ள கைதிகள் வாக்களிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 9 மத்திய சிறைகளில் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் ஓட்டுப்போட்ட விருப்பமுள்ளவர்களிடம் இருந்து மனுக்கள் பெறப்படும். அதன்பின்னரே அவர்கள் தகுதியானவர்களா? என கண்டறியப்படும். இதில் ஆயுள் தண்டனை கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் ஓட்டுபோட அனுமதியில்லை. வேலூர் மத்திய சிறை மற்றும் வேலூர் பெண்கள் தனிச்சிறையில் 50க்கும் மேற்பட்டவர்கள் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் வாக்களிக்க விருப்பமுள்ளதா? என விருப்பம் கேட்கப்பட்டது. இதில் யாரும் தபால் வாக்களிக்க விருப்ப தெரிவிக்கவில்லை. இதுகுறித்து சிறைத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 10 குண்டர் சட்ட கைதிகள் தபால் அளிக்க விருப்பம் தெரிவித்தனர். ஆனால், தற்போது நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் குண்டர் கைதிகள் யாரும் தபால் வாக்களிக்க விருப்பம் தெரிவிக்கவில்லை. இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது’ என்றனர்.
