×

திருவிக நகர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவாக செயல்படும் தவெக

பெரம்பூர், ஏப்.12: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் சார்பில், வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது. இதில், வேட்பாளர்கள் தேர்வு தொடங்கி, அனைத்து அரசியல் நகர்வுகளிலும் தொடர்ந்து குளறுபடிகள் நடந்து வருகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள் மற்றும் வேட்பாளர் அறிவிப்பிற்கு 2 நாட்களுக்கு முன்பு கட்சியில் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. விஜய் கட்சியில் உள்ள புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, செங்கோட்டையன், நிர்மல் குமார், ஜான் ஆரோக்கியசாமி உள்ளிட்ட சிலரின் செயல்பாடுகள் மட்டுமே வெளியே தெரிகின்றன. மற்ற தொகுதிகளில் வேட்பாளர்கள் என்ன செய்கிறார்கள் என்பதே தெரியவில்லை. தங்களது கொள்கைகளை பிட் நோட்டீஸ் அடித்து தினமும் காலை ஒரு மணி நேரம் மாலை ஒரு மணி நேரம் என வீடு வீடாக கொடுத்து வருகின்றனர். அதுவும் பெயரளவிற்கு மட்டுமே.

பல இடங்களில் இவர்கள் அதிமுக வேட்பாளர்களுக்கு சாதகமாக நடந்து கொள்கிறார்கள் என்ற குற்றச்சாட்டும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. அதை உறுதி செய்யும் விதமாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி போட்டியிடும் தொகுதியில் தவெக வேட்பாளரின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. அது நிராகரிக்கப்பட்டதா அல்லது நிராகரிக்கும்படி அந்த வேட்புமனுவை தயார் செய்தார்களா? என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமே. இப்படி பல தொகுதிகளில் தவெக வேட்பாளர்கள் உள்குத்து வேலைகளில் இறங்கி விட்டனர். இன்னும் சில இடங்களில் அவர்கள் பணம் வாங்கிக்கொண்டு அதிமுக வேட்பாளர்களுக்கு உதவி செய்வதாகவும் கூறப்படுகிறது.

குறிப்பாக முன்னாள் அமைச்சர்கள் பணபலம் பொருந்திய நபர்களிடம் தவெக வேட்பாளர்கள் விலை போய் உள்ளதாக கூறப்படுகிறது. அந்த கட்சியின் தலைவர் விஜய் 15 நிமிடம் பேசுவதற்கு சென்றாலே விபத்துகள் மற்றும் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனால் தவெக வேட்பாளர்கள் பலர் விஜய் சிலையை தயார் செய்து, அதனுடன் வேனில் பிரசாரம் செய்து வருகின்றனர். சென்னை திருவிக நகர் சட்டமன்ற தொகுதியில் தவெக சார்பில் பல்லவி என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இதுவரை பெரிய அளவில் இவர் எந்த பிரசாரத்தையும் மேற்கொள்ளவில்லை. பெயரளவிற்கு மட்டுமே பிட் நோட்டீஸ் அடித்து இவரது ஆட்கள் வீடு வீடாகச் சென்று கொடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து விசாரித்ததில், திருவிக நகர் சட்டமன்ற தொகுதியில் தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி சார்பில், உயிரிழந்த ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி வேட்பாளராக நிற்கிறார். இவர் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். இவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்பு பொற்கொடி தவெக தலைவர் விஜய்யிடம் அந்த தொகுதியில் மட்டும் தனக்கு ஆதரவு அளிக்கும்படி கேட்டதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் திருவிக நகர் சட்டமன்ற தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பல்லவி முதலில் வேட்புமனு தாக்கல் செய்ய மாட்டார் எனக் கூறப்பட்டது. ஆனால் அப்படி விட்டு விட்டால் அதிமுகவுடன் நேரடி கூட்டணி என்று அனைவரும் விமர்சனம் செய்வார்கள் என்று கருதி பல்லவியை வேட்புமனு தாக்கல் செய்ய செய்துவிட்டு தற்போது அவரை அதிக அளவில் பிரசாரத்தில் ஈடுபட வேண்டாம் என தலைமை அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையிலேயே திருவிக நகர் சட்டமன்ற தொகுதியில் தவெக அடக்கி வாசிக்கிறது. இப்படி பல தொகுதிகளில் அதிமுக வெற்றிக்காக தவெக உள்குத்து வேலைகளில் இறங்கி உள்ளது. இவை ஒவ்வொன்றாக இனி வெளியே வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Thaveka ,AIADMK ,Thiruvik Nagar assembly ,Perambur ,Vijay ,Tamil Nadu ,Vetri Kazhagam ,
× RELATED உரிமம் புதுப்பிக்காமல் துப்பாக்கி வைத்திருந்த சிஐஎஸ்எப் வீரர் கைது