வேலூர், ஏப்.11: வேலூர் சட்டமன்ற தொகுதியில் உரிய ஆவணமின்றி எடுத்து வரப்பட்ட ரூ.2.94 லட்சம் பறிமுதல் செய்தனர். தமிழக சட்மன்ற தேர்தலையொட்டி பணம், பரிசு பொருட்களை வினியோகத்தை தடுக்க பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிரமாக வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, வேலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வேலூர் தீயணைப்பு நிலையம் அருகே நேற்று முன்தினம் பறக்கும் படை குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக காரை நிறுத்தி சோதனை செய்தபோது, ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சந்தீப்குமார் என்பதும், காரில் உரிய ஆவணமின்றி ரூ.75,700 எடுத்து வரப்பட்டது தெரியவந்தது.
அதேபோல், நிலை கண்காணிப்பு குழுவினர் சங்கரன்பாளையம் கூட்ரோட்டில் நடத்திய சோதனையில, கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த நாராயணசாமி என்பவர் உரிய ஆவணமின்றி ரூ.77 ஆயிரம் எடுத்து வந்தது தெரியவந்தது. தொடரந்து, நேற்று காலை நிலை கண்காணிப்பு குழுவினர் வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே நடத்திய சோதனையில் உரிய ஆவணமின்றி எடுத்து வரப்பட்ட ரூ.60 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். அதேபோல், நேற்று பிற்பகல் பறக்கும் படை குழுவினர், கொணவட்டம் மேம்பாலம் அருகே சோதனை நடத்தினர். அப்போது, அவ்வழியாக வந்த பைக் நிறுத்தி சோதனை செய்தனர். அதில் உரிய ஆவணமின்றி எடுத்த வரப்பட்ட ரூ.81,700 பணம் இருந்து தெரியவந்தது. இதையடுத்து, பறிமுதல் செய்து, ரூ.2 லட்சத்து 94 ஆயிரத்து 400ஐ வேலூர் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
