×

காதா? கொம்பா?

கமால்! பக்தியிலும் ஞானத்திலும் தலைசிறந்த கபீர்தாசரின் மகன். முன்னே முளைத்த காதைவிடப் பின்னே முளைத்த கொம்பு வலிமையானது என்பதை நிரூபிக்கும் கமாலின் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சி இது. கபீர்தாசரின் மகனான கமால், சின்னஞ்சிறு வயதிலேயே தந்தையைப் போலவே பக்தியில் தலை சிறந்து விளங்கினான். வாயைத் திறந்தாலே `ராம’ நாமம், `கிருஷ்ண’ நாமம்தான். அவனுடைய பக்தியும் நல்லொழுக்கமும் அனைவரையும் கவர்ந்தன. சிறு வயதாக இருந்த கமால், ஒருநாள் பெற்றோர்களை நெருங்கி,“நான், துவாரகை சென்று கண்ணனைத் தரிசிக்கப் போகின்றேன்’’ என்றான். மனம் மகிழ்ந்த பெற்றோர்கள், அனுமதி அளித்தார்கள். கமாலும் தன்னந்தனி ஆளாகப் புறப்பட்டுச் சென்றான். துவாரகை சென்று கண்ணனைத் தரிசித்து விட்டுத் திரும்பிக் கொண்டிருந்தான்.

வழியில் கமாலைப் பார்த்த வியாபாரி ஒருவர், அவனைத் தன் வீட்டிற்குள் அழைத்துச் சென்று நன்கு உபசரித்து, நன்றாக விருந்தளித்தார். கமாலின் அழகு முகமும் இனிமையான வார்த்தைகளும் பழகும் தன்மையும் கண்ட வியாபாரி, விலைஉயர்ந்த மாணிக்கக்கல் ஒன்றைக் கமாலுக்கு அளித்தார். அதைக்கண்ட கமால் நடுங்கினான்; “ஐயா! வேத மணி, அழகுமணி, அன்புமணி, ஐஸ்வர்யமணி எனப் பலவிதமான திருநாமங்களைப் பெற்ற கண்ணன் எனும் விலை மதிக்க முடியாத மணி, என் மனதில் இருக்கும்போது, இந்த மாணிக்க மணி எனக்கு எதற்கு?’’ என்று அழுத்தமாக மறுத்தான்.

வியாபாரி விடவில்லை. கமாலுக்குத் தெரியாமல், அவன் ஆடையில் ஒரு பக்கமாக மாணிக்கத்தை முடிந்துவிட்டார். அதை அறியாமல், கமாலும் வீடு திரும்பினான். வீட்டிற்கு வந்தவுடன் தந்தையிடம் நடந்ததைச் சொன்னான் கமால். அப்போது கமாலின் ஆடை முடிச்சைக் கண்ட கபீர், அதை அவிழ்த்துப்பார்த்தார். அதிலிருந்த மாணிக்கக்கல்லைக் கண்டவுடன் அதிர்ச்சி அடைந்து, மயக்கம்போட்டுக் கீழே விழுந்தார். அதைக்கண்ட கமால், நடந்ததை உணர்ந்து, கையில் மாணிக்கக்கல்லைச் சுமந்தபடி, வியாபாரியின் வீட்டை நோக்கி ஓடினான். வியாபாரியிடம், “என்ன ஐயா! இப்படிச்செய்து விட்டீர்களே?’’ என்று புலம்பி, மாணிக்கக்கல்லை அவரிடம் ஒப்படைத்துவிட்டு, வீடு திரும்பினான் கமால்.

அதற்குள்ளாக மயக்கம் தெளிந்து எழுந்த கபீர், “என்ன பையன் இவன்? அருள் மயமான ராமநாமத்தைப் போய், விற்று விட்டானே இந்தப்பாவி! விற்கக்கூடியதா அது? இவனைப் போய்ப் பத்து மாதம் சுமந்து பெற்றாயே!’’ என்று மனைவியை ஏசிக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் வீட்டிற்குள் நுழைந்த கமால், தந்தையை வணங்கி, “அப்பா! என்னை அறியாமல் நடந்தது இது. வியாபாரி என் ஆடையில் மாணிக்கக்கல்லை முடிந்து வைத்தது எனக்குத் தெரியாது. மன்னியுங்கள்! அம்மாணிக்கக்கல்லை, வியாபாரியிடமே திருப்பி கொடுத்துவிட்டேன்’’ என்று நடந்ததைச் சொன்னான். கபீரின் மனம் அமைதி அடைந்தது;

“ஆகா! என் மகன் ராமநாமத்தை விற்கவில்லை’’ என்று சொல்லியபடியே, மகனைத் தழுவிக்கொண்டார். தெய்வநாமத்தை எந்த அளவிற்கு கபீரும் அவர் குடும்பத்தாரும் மதிப்பளித்தார்கள் என்பதை விளக்கும் வரலாறு இது. தெய்வநாமத்தை மனதாறச் சொல்வோம்! தீமைகள் ஓடிப்போம்!

V.R.சுந்தரி

Tags : Katha ,Kamal ,Kabirtazar ,
× RELATED திருக்கடைக் காப்பு எனும் பாதுகாக்கும் பதிகம்