சித்துக்காடு, திருமணம்
நட்சத்திரங்களுள் சிறப்பு மிக்கதாக விளங்குவது சுவாதி நட்சத்திரம். சுவாதி என்னும் புனிதமான சொல்லில் இருந்து உருவான இந்த நட்சத்திரம் சிவன், விஷ்ணு ஆகிய இருவரின் ஐக்கிய சொரூப சக்திகள் நிறைந்துள்ளன. நமச்சிவாய மந்திரத்தில் இடம் பெறும் வகாரத் தத்துவமும், சுவாதி என்னும் புனித சொல்லில் உள்ளடங்கியுள்ளது.
அவ்வாறே விஷ்ணுவின் அம்சங்களான சுந்தர்ராஜன், வாசுதேவன், திரிவிக்ரமன் ஆகிய மூவருக்கும் உரிய பீஜாட்சர சக்திகளும் நிறைந்துள்ளன. எனவே, சுவாதி நட்சத்திர நாளில் சிவனும், விஷ்ணுவும் இருவரும் இணைந்து அருள்பாலிக்கும் “சித்துக்காடு தாத்திரீஸ்வரர்’’ திருக்கோயிலுக்குச் சென்று வழிபட்டு வணங்குவது சிறப்பான பலன்களைத் தரும் என்று நம்பப்படுகிறது.
பொதுவாக சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், பெரியோர்களிடம் மரியாதையுடனும் அன்புடனும் பழகு பவர்களாக இருப்பார்கள். உயர்ந்த சிந்தனை, அறிவுத்திறன் மற்றும் முன் யோசனையுடன் செயல்படும் இயல்பும் இவர்களிடம் காணப்படும். எளிதில் பிறரின் நம்பிக்கையைப் பெறக்கூடியவர்களாகவும், எளிமையான குணங்களைக் கொண்டவர்களாகவும் திகழ்வர். சுவாதி நட்சத்திரத்தின் சிறப்பு அம்சம் என்னவெனில், சுபபலன்களையும், நற்பேறுகளையும் அனுபவிக்கும் யோகம் பெற்றவர்களாகக் கருதப் படுகின்றனர்.
இந்த நட்சத்திரத்தில், தோஷம் இருப்பதாகக் கருதுபவர்கள், வழிபட வேண்டிய தலங்களில் முக்கியமானது சித்துக்காடு தாத்திரீஸ்வரர் திருகோயில் ஆகும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சித்தர்கள் வாழ்ந்து தவம் செய்த புனிதத் தலமாகச் சித்துக்காடு போற்றப்படுகிறது. இந்தத் தலத்தில், சிவபெருமானை வழிபட்டால், அவருடைய அருளால் துன்பங்கள் நீங்கி நல்வாழ்வு கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை யாகும்.
மயிலாடுதுறை அருகிலும் சித்தர்காடு என்ற புனிதத் தலம் காணப்படுகிறது. அதுபோலவே, சென்னை அருகில் உள்ள சித்துக்காட்டில் சிவனும், விஷ்ணுவும் இணைந்து அருள்பாலிக்கும் சிறப்புமிக்க சிவாவிஷ்ணு ஆலயம் அமைந்துள்ளது. சுவாதி நட்சத்திரத்தாருக்கு, இத்தலம் சிறந்த பரிகாரத் தலமாக விளங்குகிறது. இவ்விடம் “திருமணக் கிராமம்” என்றும் “சித்தர்காடு’’ என்றும் அழைக்கப் படுகிறது.
இத்தலத்தின் வரலாறு
முக்காலத்தில் நெல்லிமரங்கள் அடர்ந்து வளர்ந்த மலைப்பகுதியாக, சித்துக்காடு இருந்தது. “தாத்ரி” என்ற சொல்லுக்கு சமஸ்கிருதத்தில் “நெல்லி” என்று பொருள். இனிதே இங்கு அருள்பாலிக்கும் சிவபெருமான், “தாத்திரீஸ்வரர்’’ எனப் போற்றப்படுகிறார். அம்பாள், “குளந்தலாம்பிகை’’ என்னும் திருநாமத் துடன் அருள்பாலிக்கிறார். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, சித்தர்கள் இக்காட்டில் தவம் செய்து இறை அருள் பெற்றதாகக் கூறப்படுகிறது. அதனால், சித்தர்கள் வாழ்ந்த காடு என்பது காலப்போக்கில் மருவி, “சித்துக்காடு” என அழைக்கப்பட்டது. இத்தலத்தில், “ஜடாமுடி சித்தர்’’ மற்றும் “பிராண தீபிகா சித்தர்’’ ஆகிய இரு சித்தர்கள் நீண்ட காலம் தவம் செய்து, இறைவனை வழிபட்டதாகத் தல வரலாறு கூறுகிறது.
அவர்கள், நெல்லி மரத்தடியில் சிவலிங்கத்தைப் பிரதிஷ்டைச் செய்து, தினமும் வழிபாடு நடத்தினர். மேலும், இறைவனுக்குத் தேவையான மலர்களைப் பெற, நந்தவனம் அமைத்து பலவகையான நறுமண மலர்களைத் தொடுத்து, சிவபெருமானுக்குக் சூட்டினர்.வனம் முழுவதும் நறுமணம் பரவிவீசியதால் இத்தலத்திற்கு, “திரு” என்னும் அடைமொழியும் சேர்க்கப்பட்டு “திருமணம்” என்ற பெயர் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர், அப்பெயரே நிலவி “திருமணக் கிராமம்” என நிலைபெற்றது.
பிராண தீபிகா சித்தர்
பிராண சக்தி மற்றும் சுவாசக் கலையில் ஆழ்ந்த ஞானம் பெற்றவராக பிராண தீபிகா சித்தர் விளங்கினார். மனித உடலில் உள்ள உயிராற்றலை ஒழுங்கு படுத்தி ஆரோக்கியமான வாழ்வை அளிக்கும் அருள் ஆற்றல் பெற்றவராக இவர் போற்றப்படுகிறார். எனவே, இவரை வழிபடுவோருக்கு உடல் நலம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.
“ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும்
காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாரில்லை
காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாளருக்குக்
கூற்றை உதைக்கும் குறியது வாமே” (571)
– என்று திருமூலர் திருமந்திரம் மூன்றாம் தந்திரத்தில் பிராணாயாமத்தின் சிறப்பை விளக்குகிறார்.
இடகலை பிங்கலை நாடிகள் வழியே மூச்சை உள்ளே இழுத்து, பின்பு வெளியே விட்டு நுரையீரலில் காற்றை நிரப்பும். இதில் மூச்சை உள்வாங்கி (பூரகம்) வெளியேற்றி (ரெசகம்) உள்ளே நிறுத்தும் (கும்பகம்) இந்த கால அளவை, மாத்திரை அறியாதவர் பலர் ஆவர். இக்கலையை அறிந்தவர்கள் ஞானிகள். இவர்கள் முதுமையும் மரணமும் இல்லாமல் எமனை வெல்லும் ஆற்றலைப் பெற்றவர்கள் என்று உரைக்கிறார், திருமூலர். இக்கலையை பிராண தீபிகர் அறிந்திருந்தார்.
ஜடாமுடி சித்தர்
நீண்ட ஜடா முடியைக் கொண்டு இருந்ததனால், இப்பெயர் பெற்று நீண்டகாலம் தவநிலையில் இருந்த காரணத்தாலும் இவரை “ஜடாமுனி சித்தர்’’ என்று அழைத்தனர். இவரது பக்தியை மெச்சி, சிவபெருமான் காட்சி தந்து அருள் புரிந்தார் என்று தல வரலாறு கூறுகிறது. இவரை வழிபட்டால், ஆயுள் விருத்தி, உடல் ஆரோக்கியம் மற்றும் மன உறுதி கிடைக்கும் என்று அனுபவ பூர்வமாகச் சொல்லப்படுகிறது. குறிப்பாக, இருதய பலவீனம் உடையவர்கள் நலனுக்காக, பல பக்தர்கள் இத்தலத்திற்கு வந்து வழிபடுகின்றனர். இத்தலத்தில், ஜடாமுடி சித்தர் மற்றும் பிராண தீபிகா சித்தர் சந்நதிகளில், நெய் தீபம் ஏற்றி மனமுருகி இறைவனை வழிபட்டால், உடல் மற்றும் மனநலம் மேம்படும் என்பது பக்தர்களின் கண்கூடான நம்பிக்கையாகும்.
“நாலும் இரு மூன்றும் ஈரைந்தும் ஈராறும்
கோலின் மேல் நின்ற குறிகள் பதினாறும்
மூலங் கணடாங்கே முடிந்த முதல் இரண்டும்
காலங் கண்டான் அடி காணலும் ஆமே’’
“பிறப்பிலி பிஞ்ஞகன் பேரருளாளன்
இறப்பிலி யாவருக்கும் இன்பம் அருளும்
துறப்பிலி தன்னைத் தொழுமின் தொழுதால்
மறப்பிலி மாயா விருத்தமும் ஆமே’’
திருமூலர் முதல் மந்திரத்தில், 25 ஆவது பாடலிலே சிவபெருமானின் அழகைப் பிஞ்ஞகன் என்று வருணிக்கிறார். இதன் பொருள் என்ன என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். பிஞ்ஞகன் என்றால் “சிவபெருமான் பேரருள் மிக்கவன்’’ என்பது பொருள்.
பிறப்பு இறப்பு இல்லாதவன் பிஞ்ஞகன்
சிவபெருமானின் தலைக்கோலம் திருச்சடை, பிறை. கங்கை, பாம்பு மற்றும் மயிலிறகு ஆகியவற்றைத் தனது சடாபாரத்தில் (தலையில்) சூடி இருப்பதால் தலைக்கோலக் கடவுள் என்பது ஆகும். உயிர்களின் பிறவித் துன்பத்தை அறுக்க சிவபெருமான் அருட் செயல்கள் உணர்த்தி இருக்கிறார். மாணிக்கவாசகர் திருவாசகத்தில், பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் தன் மெய்க்கழல்கள் வெல்க என்று குறிப்பிடுகிறார்.
கோயிலை எழுப்பியவர்
மதுரையை ஆண்ட சுந்தரபாண்டியன் மன்னர், இக்கோயிலை எழுப்பியதாகக் கல்வெட்டுகள் கூறுகின்றன. அக்கல்வெட்டை இன்றும் காணலாம். சிவன் கோயில் அமைக்க மணலைத் தோண்டும் பொழுது, மண்ணுக்கு அடியில் பூங்குழலி அன்னையின் சிலை கிடைத்தது. இங்கே அமைக்கப்பட்ட தூண்களில் மிக விசித்திரமான அமைப்பு, சித்தர்கள் கல் உளியில் செதுக்கியதைக் காணலாம். ஒவ்வொரு தூண்களிலும் சித்தர்கள் உருவங்கள் செதுக்கப்பட்டு உள்ளன.
நந்தியின் சிறப்பு
சிவன் சந்நதி எதிரே உள்ள நந்தி சாந்தமாகக் காட்சி அளிக்கிறார். பொதுவாக நந்தியின் மூக்கில் மூக்கணாங் கயிறுடன் தோன்றுவார். ஆனால், இங்கே மூக்கணாம் கயிறு இல்லாமல் நந்தி சிவனைத் தரிசிப்பார். அம்பாள் பூங்குழலி அன்னைக்கு, பச்சை வண்ண வஸ்திரம் சாற்றி வளையல்கள் அணிவித்து, நெய்தீபம் ஏற்றி அர்ச்சனைச் செய்து வணங்கினால், வேண்டிய வரம் கிடைக்கும்.
பிரார்த்தனை
சுவாதி நட்சத்திரம் உடையவர்கள் தயிர் சாதம், புளியோதரை ஆகியவற்றைக் குபேரனுக்கு படைத்து வணங்குவது சிறப்புப் பிரார்த்தனையாகும்.
நேர்த்திக்கடன்
நெல்லிக்காய், பச்சைவண்ண வஸ்திரம் சாற்றுதல். சுவாமி, சிவபெருமானுக்கு நிவேதனமாக நெல்லிச்சாறு, நெல்லிக்கனி, நெல்லிக்காய், நெல்லிப்பொடி, நெல்லிச் சாதம் மற்றும் புளியோதரை ஆகிய உணவை நிவேதனமாக படைக்கலாம். இதனால், ஒருவர் செய்த பூர்வீக பாவங்கள் விலகும். பித்ரு தோஷம் நீங்கும். மேலும், பாலாபிஷேகம் செய்வதும் சிறப்பாகும்.
திருவிழா
கார்த்திகை ஆடி, தை கிருத்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகிய நாட்களில் சுப்பிரமணியருக்கு அபிஷேகம் நடக்கும். திருகார்த்திகை அன்று சிவன் சந்நதியில் 27 நட்சத்திரங்களுக்கும் தீபம் ஏற்றி பூஜை செய்கின்றனர். மார்கழியில் நடராஜருக்கு பத்து நாள் உற்சவம் நடைபெறும். மேலும், திருவாதிரை அன்று நடராஜருக்கும் சிவகாமி அம்பாளுக்கும் திருமண வைபவம் இங்கே நடைபெறும்.
நடை திறக்கும் நேரம்: காலை: 8:00 மணி முதல் 10:00 மணி வரை, மாலை: 5:00 மணி முதல் 7:00 மணி வரை.
எப்படி செல்வது?: சென்னை கோயம்பேட்டில் இருந்து 20 கி.மீ., தூரமும், திருவள்ளூரில் இருந்து 19 கி.மீ., தூரத்திலும் இக்கோயிலை அடையலாம்.
பொன்முகரியன்
