×

வகுப்புகள் புறக்கணிப்பு தமிழ்நாட்டிலும் மாணவர் போராட்டம் தீவிரம்: ரயில் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு: சென்னை மெரினா கடற்கரையில் நுழைய தடை

சென்னை: டெல்லியில் நீட் தேர்வுக்கு எதிராக போராடும் மாணவர்களுக்கு ஆதரவாக, தமிழ்நாட்டிலும் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்தது. திருப்பரங்குன்றத்தில் கல்லூரி வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் ரயில் மறியலில் ஈடுபட்டனர். மெரினா கடற்கரையில் மாணவர்கள் ஒன்று கூடுவோம் என்ற தகவல் பரவியதால் அதை தடுக்கும் வகையில், மெரினா கடற்கரையில் பொதுமக்கள் நுழைய போலீசார் நேற்று அதிரடியாக தடை விதித்தனர்.

தலைநகர் டெல்லியில் நீட் தேர்வு வினாத்தாள் வெளியானதை கண்டித்தும், அதற்கு பொறுப்பேற்று ஒன்றிய உயர் கல்வித்துறை அமைச்சர் பதவி விலக கோரியும் காக்ரோச் ஜனதா கட்சி சார்பில் தொடர் போராட்டம் நடந்து வருகிறது. இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்ததால், போலீசாருக்கும் மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் மாணவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசி போலீசார் தடியடி நடத்தினர். இதனால் டெல்லி முழுவதும் பெரும் கலவரமாக மாறி உள்ளது.

மாணவர்கள் மீது டெல்லி போலீசார் நடத்திய தடியடியை கண்டித்து தற்போது நாடு முழுவதும் மாணவர்களின் போராட்டம் பரவி உள்ளது. இந்நிலையில் தமிழகத்திலும் மாணவர்கள் நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும், டெல்லியில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடியை கண்டித்தும் நேற்று முன்தினம் முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதேநேரம் தமிழகத்தில் காக்ரோச் ஜனதா கட்சி போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்ததால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமாக பாலன் இல்லத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கடந்த 4 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்கும் வகையில் தமிழக காவல்துறை பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருந்தாலும், மாணவர்கள் அமைப்புகள் நேற்று முன்தினம் கூட்டாக தமிழ்நாடு மாணவர் இளைஞர் கூட்டமைப்பு என்ற பெயரில், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் வகுப்புகளை புறக்கணித்து நீட் தேர்வு ரத்து மற்றும் டெல்லியில மாணவர்கள் மீது நடத்திய தாக்குதலை கண்டித்து மாணவ, மாணவிகள் போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்தால் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடக்காத வகையில், டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் உத்தரவுப்படி சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி அன்பு மேற்பார்வையில் தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிகள் முன்பு இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மதுரை திருப்பரங்குன்றம் ரயில் நிலையத்தில் இந்திய மாணவர் சங்கத்தினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதேபோல் கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு மாணவர்கள் சங்கம் சார்பில் போராட்டம் நடந்தது.

சீர்காழி, மயிலாடுதுறை என அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மாணவர்கள் ஒன்றிய பாஜ அரசுக்கு எதிராகவும், நீட் தேர்வுக்கு எதிராகவும் போராட்டம் நடத்தினர். குறிப்பாக சென்னையில் மெரினா கடற்கரை அருகே உள்ள மாநில கல்லூரி, சென்னை பல்கலைக்கழகம், பச்சையப்பன் கல்லூரி, ராயப்பேட்டையில் உள்ள புதுக்கல்லூரி, திருவொற்றியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நந்தனம் கல்லூரி, தி.நகரில் உள்ள தியாகராயர் கல்லூரி என சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளில் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து அந்தந்த கல்லூரிகள் முன்பும் போராட்டம் நடத்தினர்.

மேலும், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தள பக்கங்களில் ஜல்லிக்கட்டு போராட்டம்’ போல் நீட் எதிர்ப்பு பேராட்டம் நடத்துவோம் என்றும், இதனால் அனைவரும் மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை முன்பு ஒன்று கூடுவோம் என தகவல் பரவி வருகிறது. இதையடுத்து சென்னை போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவுப்படி அண்ணாசதுக்கம் முதல் கலங்கரை விளக்கம் வரை உள்ள மெரினா கடற்பகுதிகளில் 2 துணை கமிஷனர்கள் தலைமையில் 300க்கும் மேற்பட்ட போலீசார் நேற்று காலை முதல் பாதுகாப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை, உழைப்பாளர் சிலை பகுதிகளில் யாரும் வராத அளவிற்கு போலீசார் தடுப்புகள் அமைத்துள்ளனர். மெரினா கடற்கரைக்கு வரும் பொதுமக்களை போலீசார் வேறு பகுதிகளுக்கு செல்லும்படி அறிவுறுத்தினர். காமராஜர் சாலையில் இருந்து மெரினா பகுதிக்கு செல்லும் அனைத்து சர்வீஸ் சாலைகளிலும் போலீசார் தடுப்புகள் அமைத்து போக்குவரத்துக்கு தடை செய்தனர்.

சந்தேகத்திற்கு இடமான வகையில் யாரேனும் நடமாடினால் அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். பொதுமக்கள் மெரினா கடற்கரையில் நுழைய போலீசார் தடை விதித்துள்ளதால், கடற்கரைக்கு வந்த சுற்றுலா பயணிகள் மற்றும் குழந்தைகளுடன் வந்த பெற்றோர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்து வருவதால் சென்னை உள்பட மாநிலம் முழுவதும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் கல்லூரிகள் முன்பு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், மாணவர்கள் போராட்டத்தில் தடை செய்யப்பட்ட அமைப்புகளை சேர்ந்தவர்கள் யாரேனும் ஈடுபடுகிறார்களா என்பது குறித்தும் தீவிரவாத தடுப்பு பிரிவு மற்றும் க்யூ பிரிவு அதிகாரிகள் தனியாக கண்காணித்து வருகின்றனர்.

* பயணிகள் ரயில் மறிப்பு
மதுரை திருப்பரங்குன்றம் ரயில் நிலையத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மதுரை மாநகர், புறநகர் சார்பில் மறியல் போராட்டம் நேற்று நடந்தது. இதில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம், சிஐடியூ ஆகிய அமைப்புகளும் பங்கேற்றன. போராட்டத்தின் ஒரு பகுதியாக, திருப்பரங்குன்றம் பேருந்து நிலையம் அருகிலிருந்து ஏராளமானோர் பேரணியாக ரயில் நிலையத்தை நோக்கி வந்தனர்.

ரயிலை முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட முற்பட்டபோது நுழைவாயில் அருகே அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் பதற்றம் ஏற்பட்டது. அப்போது மாணவர் சங்க நிர்வாகிகள், காவல்துறையினருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டு தடுப்புகளை தாண்டி நுழைவாயில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையில், மற்றொரு குழுவினர் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநிலச் செயலாளர் பொன்னத்தாய் தலைமையில், ரயில் நிலையத்திற்குள் சென்று பாலக்காடு – திருச்செந்தூர் பயணிகள் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ரயில் மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்ய முயன்றபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் மாணவர் சங்கத்தைச் சேர்ந்த குரு கணேஷ், ஷபீர் ஆகியோருக்கு கை முறிவு ஏற்பட்டது. அதேபோல் பலரின் சட்டைகள் கிழிக்கப்பட்டன. மேலும், மாதர் சங்க நிர்வாகிகளை ரயில்வே தண்டவாளத்தில் தரதரவென இழுத்துச் சென்று காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்த சம்பவத்தால் பாலக்காடு – திருச்செந்தூர் பயணிகள் ரயில் சிறிது நேரம் தாமதமாக புறப்பட்டது. இதேபோல் கோவை, நாகர்கோவில், சிதம்பரம், திண்டிவனம், தர்மபுரி என தமிழகம் முழுவதும் மாணவ அமைப்புகள் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

* நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்து வருவதால் சென்னை உள்பட மாநிலம் முழுவதும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் கல்லூரிகள் முன்பு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

* மாணவர்கள் போராட்டத்தில் தடை செய்யப்பட்ட அமைப்புகளை சேர்ந்தவர்கள் யாரேனும் ஈடுபடுகிறார்களா என்பது குறித்தும் தீவிரவாத தடுப்பு பிரிவு மற்றும் க்யூ பிரிவு அதிகாரிகள் தனியாக கண்காணித்து வருகின்றனர்.

Tags : Tamil Nadu ,Chennai Marina ,Chennai ,NEET ,Delhi ,Tiruparangundum ,
× RELATED அனிதா வீட்டுக்கு மறைமுகமாக...