×

அயோத்தியில் சரயு நதியில் படகில் இறைச்சி சாப்பிட்டு, மது அருந்திய 3 பேர் கைது!

அயோத்தி: அயோத்தியில் உள்ள சரயு நதியில் படகில் அமர்ந்து ஆட்டிறைச்சி சாப்பிட்டு, மது அருந்தியதாக மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அங்குள்ள குப்தார் காட் பகுதியில், நதியின் நடுவே ஒரு படகில் நான்கு பேர் இறைச்சி சாப்பிட்டு, மது அருந்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இதைத் தொடர்ந்தே போலீசார் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

இதுகுறித்து நகர வட்டார காவல் அதிகாரி கூறுகையில், “வைரலான வீடியோவில் நான்கு இளைஞர்கள் ஆட்டிறைச்சி சாப்பிடுவதும், மது அருந்துவதும் தெரிந்தது. அவர்களில் மூன்று பேரை நாங்கள் கைது செய்துள்ளோம். தப்பியோடிய மற்றொருவரைத் தேடி வருகிறோம்” என்றார்.

கைது செய்யப்பட்டவர்கள் லவ்குஷ் நிஷாத், ஜிதேந்திர நிஷாத் மற்றும் ராஜ்குமார் நிஷாத் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். புனிதமாக கருதப்படும் சரயு நதியில் இவ்வாறு செய்ததன் மூலம், பக்தர்களின் மத உணர்வுகளையும் நம்பிக்கையையும் இவர்கள் புண்படுத்தியதாக போலீசார் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதம், வாரணாசியில் உள்ள கங்கை நதியில் படகில் சிக்கன் சமைத்து, மது குடித்ததாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களின் படகும் பறிமுதல் செய்யப்பட்டு, 25 முதல் 32 வயதிற்குட்பட்ட அந்த ஐந்து பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

அதேபோல், கடந்த மார்ச் மாதம் கங்கை நதியில் படகு ஒன்றில் இப்தார் விருந்தின் போது சிக்கன் பிரியாணி சாப்பிட்டதாக 14 பேர் கைது செய்யப்பட்டனர். வழிபாட்டுத் தலத்தை அசுத்தப்படுத்துதல் மற்றும் மத உணர்வுகளைப் புண்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

Tags : Sarayu River ,Ayodhya ,Guptar Ghat ,
× RELATED தமிழ்நாட்டில் நடைபெறுவது சட்டத்தின்...