×

ஆணவத்தை கைவிட்டு இளைஞர்களின் குரலுக்கு செவி சாயுங்கள் ; ஒன்றிய அரசுக்கு கெஜ்ரிவால் கோரிக்கை

டெல்லி: தலைநகர் டெல்லியில் நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்து போராட்டம் நடத்திய மாணவர்கள் மற்றும் இளைஞர்கள்மீது போலீஸார் தடியடி நடத்திய சம்பவத்திற்கு, ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு புகார்களுக்கு எதிராக ஆயிரக்கணக்கான இளைஞர்கள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் திரண்டு நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்த முயன்றனர். அப்போது கூட்டத்தைக் கலைக்க பாதுகாப்புப் படையினர் தடியடி மற்றும் கண்ணீர் புகைக் குண்டுகளைப் பயன்படுத்தினர்.

இதற்காக ஒன்றிய பாஜக அரசை கடுமையாக விமர்சித்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால், ஆளும் அரசு நமது பிள்ளைகள் மீது தடியடி நடத்துகிறார்கள், அவர்கள் மீது கண்ணீர்ப் புகைக் குண்டுகளும் வீசப்படுகின்றன. கல்வி முறையையும் தேர்வு முறையையும் சரிசெய்வதற்குப் பதிலாக, மோடிஜி நாட்டின் இளைஞர்கள் மீது நேரடியாகப் போர் தொடுத்துள்ளார் என்று இதன் மூலம் தெரிகிறது என சாடியுள்ளார்.

பிரதமரின் ஆணவத்தை இளைஞர்கள் ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். நாட்டின் ஒட்டுமொத்த இளைஞர்களும் ஜந்தர் மந்தரில் திரண்டுள்ளனர். அவர்களின் குரலுக்குச் செவிசாய்ப்பதற்குப் பதிலாக, அவர்கள் மீது தடியடி நடத்த ஒன்றிய அரசு உத்தரவிடுகிறது, இது சரியல்ல.

நீதியைக் கோரி வீதிகளில் இறங்கியிருப்பவர்கள் நமது நாட்டின் பிள்ளைகள் என்று நான் அரசுக்கு நினைவுபடுத்துகிறேன். எனவே ஆணவத்தைக் கைவிட்டு, அவர்களின் குரலுக்குச் செவிசாயுங்கள் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறி உள்ளார்.

Tags : Gejriwal ,Union ,Delhi ,National Coordinator ,Yes Atmi Party ,Arvind Kejriwal ,
× RELATED ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர...