சென்னை: தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், 2027-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பில் பங்கேற்க தமிழக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பான ஒரு அறிக்கையில் சமூக, பொருளாதார மற்றும் வீட்டுவசதித் தரவுகளை உருவாக்கும் நோக்கில், நாட்டின் மிக முக்கியமான தேசிய தரவு சேகரிப்புப் பணிகளில் ஒன்றான 2027-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பைத் தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது.
இந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பு பணிகள் 2 கட்டங்களாக நடத்தப்படும். அந்த வகையில் 17 ஜூலை 2026 முதல் 31 ஜூலை 2026 வரையிலும், அதனைத் தொடர்ந்து வீட்டுப் பட்டியல் பதிவுகள் 1 ஆகஸ்ட் 2026 முதல் 30 ஆகஸ்ட் 2026 வரையிலும் நடைபெறும்.
இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் வரலாற்றில் முதன்முறையாக, குடிமக்களுக்குப் பாதுகாப்பான இணையதளம் மற்றும் மொபைல் செயலி மூலம் சுயவிவரக் கணக்கெடுப்பு வசதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து குடும்ப உறுப்பினர்களும் தங்களின் கணக்கெடுப்புத் தகவல்களை இணையவழியில் எளிதாகப் பூர்த்தி செய்ய இயலும். எனவே தமிழக மக்கள் அனைவரும் இந்த வசதியை முழுமையாகப் பயன்படுத்திக்கொண்டு தங்களின் சுயவிவரக் கணக்கெடுப்பை நிறைவு செய்யுமாறு ஆளுநர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பை வெற்றிகரமாக நடத்துவதற்காக. ஒவ்வொரு குடும்பமும் முழுமையான மற்றும் துல்லியமான தகவல்களை அளித்து. கணக்கெடுப்பு அலுவலர்களுக்கு முழு ஒத்துழைப்பையும் வழங்கவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
