×

கண்ணோட்டம் தரும் அனுபவ அறிவு!

என்றென்றும் அன்புடன் 21

‘கண்ணோட்டம்’ ஆங்கிலத்தில் ‘Perspective’ என்று சொல்வார்கள். ஒரே நிகழ்வு, ஒரே பொருள், ஒரே மனிதர்… ஆனால், அதைப் பார்க்கும் ஒவ்வொருவரின் பார்வையிலும் அது வெவ்வேறாகத் தெரிகிறது. ஏன்?நமது அனுபவம், நமது வளர்ப்பு, நமது நம்பிக்கைகள், நமது விருப்பு வெறுப்புகள் என அனைத்தும் சேர்ந்து நமக்கென ஒரு கண்ணாடியை உருவாக்குகின்றன. அந்த கண்ணாடியின் வழியாகத்தான் நாம் இந்த உலகையே பார்க்கிறோம். அந்தக் கண்ணாடிதான் நமது ‘கண்ணோட்டம்’ என்று புரிந்து கொள்கிறோம்.நமது கண்ணோட்டம் விரியும்போது, உண்மையின் முழுப் பரிமாணமும் நமக்கு விளங்குகிறது.

ராமாயணம், அறத்தின் வழியில் வாழ்வது எப்படி என்பதைக் காட்டும் ஒரு வழிகாட்டி. ஆனால், அந்த அறம் என்பதே, ஒவ்வொருவரின் கண்ணோட்டத்தைப் பொறுத்து மாறுகிறது .ஒரு மன்னனாக, கொடுத்த வாக்கை மீறக்கூடாது என்பது தசரதனின் தர்மம்.ஆனால், ஒரு தந்தையாக, தன் உயிரினும் மேலான மகனை காட்டுக்கு அனுப்புவது கொடிய பாவம். இந்த இரண்டு கண்ணோட்டங்களுக்கும் இடையில் சிக்கி, அவர் உயிர் துறக்கிறார். அவருக்கு அது சத்தியத்தைக் காக்க நடந்த தியாகம் அல்ல; பாசத்தால் விளைந்த மரண ஓலம். தன்னை முன்னிறுத்தி அதைப் பார்ப்பதால் வந்த விளைவு.

கூனியின் தூண்டுதலால், தன் மகன் பரதன் நாடாள வேண்டும் என்ற குறுகிய கண்ணோட்டம் அவளிடம் மேலோங்கு கிறது. தன் மகனின் எதிர்காலத்தைப் பற்றிய பாதுகாப்பின்மையும், பதவியின் மீதான ஆசையும் அவளது பார்வையை மறைக்கிறது. அந்த நேரத்தில், அவள் செய்வது தன் மகனுக்குச் செய்யும் நன்மை என்றே அவள் கண்ணோட்டம் சொல்கிறது.பின்னாளில், அதே செயல் எவ்வளவு பெரிய தவறு என்பதும் தன்னை தன் விருப்பை முன் நிறுத்தியதால் வந்த விளைவு என்றும் புரிந்தது.

அண்ணனின் பாதுகையை அரியணையில் வைத்து, ஒரு துறவியைப் போல பதினான்கு ஆண்டுகள் ஆட்சி செய்த பரதனின் கண்ணோட்டம் தியாகத்தாலும், பக்தியாலும் ஆனது. அவனுக்கு அந்த ராஜ்ஜியம், தன் அண்ணனிடம் இருந்து திருடப்பட்டது. அதை மீண்டும் அவரிடமே ஒப்படைப் பதுதான் தன் கடமை என்று பார்த்தான். அவன் தன் விருப்பை முன்னிறுத்தாமல் மக்களின் நலனையும் , அண்ணனின் வழிகாட்டுதலையும் முன் நிறுத்தினான்.

நிகழ்வு ஒன்றுதான். ஆனால், ஒரே குடும்பத்தில் ஒவ்வொருவரின் கண்ணோட்டமும் அந்த நிகழ்வின் அர்த்தத்தையே மாற்றி விடுகிறது.இராமாயணம் நமக்குக் கற்றுத் தருவது, தர்மம் என்பது ஒரே நேர்க்கோட்டில் பயணிப்பதில்லை.தசரதனின் மனைவிகள் சுமித்ரையும், கௌசல்யையும் எடுத்துக் கொண்டால், அவர்கள் கண்ணோட்டம் முற்றிலும் வேறாக இருக்கிறது.சுமித்ரைக்கு எல்லோர் மீதும் பாசம் அதிகம். தன் குழந்தைகளில் லட்சுமணன் ராமனுக்கு சேவை செய்ய கிளம்பும் பொழுதும், சத்ருக்னன் பரதனுக்கு சேவை செய்யும் பொழுதும் அதைப் பார்த்து மகிழ்ந்தாள்.

“நான்’’. ‘‘எனது “என்று தன்னை முன்னிறுத்திக் கொள்ளவில்லை.கௌசல்யை தன் கணவன் தசரதனுக்கு கைகேயியின் மீது அதிகம் அன்பு இருப்பது தெரிந்து அதற்காக கலங்காமல், தன்னை உயர்ந்த விஷயங்களில் ஈடுபடுத்திக் கொண்டு தன் கண்ணோட்டத்தை உயர்வாக வைத்துக்கொண்டாள். அயோத்தி முழுவதும் பாட சாலைகள் அமைத்தாள்.மகாபாரதம், வாழ்க்கையின் சாம்பல் நிறப் பக்கங்களைக் காட்டுகிறது.இங்கே நல்லவர் யார், கெட்டவர் யார் என்று எளிதில் சொல்லிவிட முடியாது.

ஒவ்வொருவரின் செயலுக்குப் பின்னாலும் ஒரு கண்ணோட்டம் இருக்கிறது. ஒரு சத்திரியன், சண்டைக்கோ சூதாட்டத்திற்கோ விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்பதுதான் தர்மம் என்று தர்மர் நம்பினார். அந்த குறுகிய தர்மக் கண்ணோட்டத்தில் சிக்கி, தன் நாடு, தம்பியர், தன்னை, ஏன் தன் மனைவியையே இழக்கிறார். அவரது கண்ணோட்டம், சம்பிரதாயத்தில் குறுகிய வட்டத்தில் சிக்கிக். கொண்டது.

திரௌபதி சபையில் கேட்ட கேள்வி, மகாபாரதத்தின் மிக முக்கியமான கேள்வி.“தன்னைத் தோற்றவர், பிறரை எப்படி பணயம் வைக்க முடியும்?” இது ஒரு பெண்ணின் கண்ணோட்டத்தில் இருந்து, ஒட்டுமொத்த தர்ம சாஸ்திரங்களையும் கேள்விக்குள்ளாக்கியது.அவளது பார்வை, பாதிக்கப்பட்டவரின் பார்வை. அதுவரை யாரும் சிந்திக்காத ஒரு புதிய கண்ணோட்டத்தை அது உருவாக்கியது.பீஷ்மர், துரோணர் அஸ்தினாபுரத்து அரியணைக்குக் கட்டுப்பட்டவர்கள்.நடப்பது அதர்மம் என்று தெரிந்தும், தங்கள் ராஜ விசுவாசம், தங்கள் பதவி என்று சொந்த விருப்புகளை பிடித்து கொண்டனர்.

போர்க்களத்தில், எதிரே நிற்கும் உறவினர்களையும், குருமார்களையும் கண்டு அர்ஜுனன் கலங்குகிறான்.“ஒரு ராஜ்ஜியத்திற்காக என் சொந்தங் களைக் கொல்வதா? இந்த பாவம் எனக்கு வேண்டாம்” என்கிறான்.இது, ‘நான்’, ‘எனது’ என்ற குறுகிய, பாசத்தால் பிணைக்கப்பட்ட கண்ணோட்டம். அப்போதுதான் கிருஷ்ணர், பகவத் கீதையின் மூலம் அவனது கண்ணோட்டத்தை முற்றிலுமாக மாற்றுகிறார்.

அவர் சொல்கிறார், நீ உன் இனம், உன்னுடைய தேசம், உங்கள் குடும்பம், உங்கள் அனுபவங்கள் ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட ஒரு சிறையில் அகப்பட்டு கொண்டு இருக்கிறாய் . அந்த சிறைக்குள் இருந்து கொண்டுதான் உலகைப் பார்க்கிறாய் அதனால் நீ பார்ப்பது உண்மையை அல்ல; உன்னுடைய நிபந்தனைகளுக்கு (conditioning) உட்பட்ட ஒரு பிம்பத்தை மட்டுமே.”“நீ கொல்கிறாய் என்று நினைக்கிறாய். ஆனால் ஆன்மாவுக்கு அழிவில்லை.”

“கடமையைச் செய், பலனை எதிர்பார்க்காதே.” “நடப்பதெல்லாம் என் செயலே. நீ ஒரு கருவி மட்டுமே.” கிருஷ்ணர், அர்ஜுனனின் பார்வையை ‘என் உறவினர்கள்’ என்ற சிறிய வட்டத்தில் இருந்து, ‘தர்மத்தை நிலைநாட்டுதல்’ என்ற பிரபஞ்சக் கடமைக்கு உயர்த்துகிறார்.அவர் அர்ஜுனனின் குறுகிய கண்ணோட்டம் எனும் கண்ணாடியை உடைக்கிறார். ஒரு புதிய, பரந்த பார்வையை கொடுக்கிறார். அது கிடைத்தவுடன், அர்ஜுனனின் குழப்பம் தீர்ந்து போகிறது. போர் புரிகிறான்.

இந்தக் கண்ணோட்டம் சுலபம் அல்ல!நம்முடைய அகங்காரம், மமகாரம், நாம் நினைப்பதை விட ஆழமானது. பலமானது.அது நம்மை வீழ்த்திய படியே இருக்கும். அர்ஜுனனை போல், கௌசல்யை போல் , நம்மால் செயல் படுவது என்பது கொஞ்சம் கடினம் .இன்றைய காலம் ஒவ்வொரு நொடியும் நம் அகங்காரத்திற்கு தீனி போட்ட படி இருக்கிறது .(உதாரணம் :நாம் “selfie” குழந்தைகளாக இருக்கிறோம்).பெரும் சிக்கலில் மாட்டி இருக்கிறோம்.

எது நம்மைக் குறுகிய கண்ணோட்டத்தில் இருந்து விடுவிக்கும்?

பக்தி விடுவிக்கும். பாகவதம், உலகை பக்தி என்ற கண்ணோட்டத்தின் மூலம் எப்படிப் பார்ப்பது என்று கற்றுத் தருகிறது.இந்தக் கண்ணோட்டம் இருந்தால், சாதாரண நிகழ்வுகள் கூட தெய்வீகமாகத் தெரியும்.வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு, கோபியர்கள் கண்ணன் மீது கொண்டது ஒருவிதமான மோகம் போலத் தோன்றலாம்.ஆனால், அவர்களின் கண்ணோட்டத்தில், கண்ணன் ஒரு சாதாரண இடையர் குலச் சிறுவன் அல்ல; அவனே பரம்பொருள். அவன் வெண்ணெய் திருடுவது, குழல் ஊதுவது, ராசலீலை புரிவது என அனைத்தும் அவர்களுக்கு தெய்வீக விளையாட்டுக்கள் (லீலைகள்).

பக்தி என்ற கண்ணோட்டம், காதலை பக்தியாகவும், காமத்தை பிரேமையாகவும் மாற்றுகிறது. அவர்கள் கண்ணனை தங்களுக்குள் பார்த்தார்கள், தங்களை கண்ணனுக்குள் பார்த்தார்கள்.ஹிரண்யகசிபுவின் கண்ணோட்டம், வெறுப்பால் ஆனது.அவனுக்கு விஷ்ணுதான் முதல் எதிரி. ஆனால், அவன் மகன் பிரகலாதனின் கண்ணோட்டம், பக்தியால் ஆனது.

அவனுக்கு, தூணிலும் நாராயணன், துரும்பிலும் நாராயணன். தன்னைத் தந்தை கொல்ல முயலும் ஒவ்வொரு முறையும், அதில் கூட அவன் நாராயணனின் கருணையையே பார்த்தான்.“என் தந்தை மூலம் எனக்கு நாராயணனை அடையும் வழி கிடைக்கிறது” என்று கருதினான். இந்த அசைக்க முடியாத பக்தி என்ற கண்ணோட்டம்தான், அவனை நெருப்பிலும், கடலிலும், விஷத்திலும் இருந்து காப்பாற்றியது.

நீங்கள் இந்த உலகத்தை வெறுப்பு, சந்தேகம், பயம் என்ற கண்ணோட்டத்துடன் பார்த்தால், அது அப்படித்தான் தெரியும். ஆனால், பக்தி, அன்பு, நம்பிக்கை என்ற கண்ணோட்டத்துடன் பார்த்தால், கல்லும் முள்ளும் கூட கடவுளாகத் தெரியும்.இந்த பக்தியானது எல்லாவற்றிலும் இருக்கும் கண்ணோட்டத்தை தாண்ட வைக்கும்.நான் என்பதை இழக்க வைக்கும்.

எந்த விதமான தீர்ப்பும் இல்லாமல் (without judgement) கவனிக்க வைக்கும்.எந்தக் கண்ணோட்டத்தையும் தேர்ந்தெடுக்காமல், ஒரு நிகழ்வை, ஒரு உணர்ச்சியை, அது வரும்போது அப்படியே பார்த்து. நல்லது – கெட்டது, சரி – தவறு என்று முத்திரை குத்தாமல், அவற்றைக் கடந்து போகும். அதுதான் உண்மையான விடுதலை.எல்லா கண்ணோட்டங்களையும் களைந்துவிட்டு, நிபந்தனைகள் அற்ற, தூய்மையான விழிப்புணர்வுடன் வாழ்வது தான் தியானத்தின் உச்சநிலை. அந்த நிலைக்குச் செல்லும்போது கண்ணோட்டம் என்பதின் அர்த்தம் மாறிப்போகும்.

(தொடரும்)

ரம்யா வாசுதேவன்

Tags :
× RELATED தவறுக்காக தன்னையே தண்டித்த பக்தன்!