×

தவறுக்காக தன்னையே தண்டித்த பக்தன்!

மகாவிஷ்ணுவின் திருவடிகளில் மலரிட்டு வணங்கி னாள் பூமாதேவி.“பரம்பொருளே, ஊழ்வினையை அனுபவித்து வரும் ஒருவன், உயர்ந்ததான தெய்வ பக்தியை அடைய வழி என்ன என்பதைத் தாங்கள் சொல்லியருள வேண்டும்!’’ என வேண்டினாள். அவளுடைய நல்லெண்ணத்தைப் பாராட்டிய மகாவிஷ்ணு, “ஊழ்வினை அனுபவிப்பவனாக இருந்தாலும், ஒருவன் பகவத் கீதையைப் பக்தியுடன் பாராயணம் செய்தால் போதும்; அவன் ஜீவன் முக்தனாக, என்றும் அழியாத பேரின்பத்தை அனுபவிப்பான். எந்த பாவமும் அவனைத் தீண்டாது.

“மிகுந்த அன்புடன் பகவத் கீதையை எழுதிப் புத்தக வடிவாக வைக்கப்பட்டுள்ள இடம், கீதையைப் பாராயணம் செய்யக் கூடிய இடம் ஆகியவற்றில் கங்கை முதலான புண்ணிய நதிகள் எல்லாம் இருக்கும்.“கோபியர், கோபாலர்கள், நாரதர், உத்தவர், நாராயணன் அடியவர்கள், தேவர்கள், முனிவர்கள், யோகிகள், நாகர் ஆகியோர் வந்து, பகவத் கீதையைப் பாராயணம் செய்பவர்க்கு அனுகூலமாய் இருப்பார்கள். “கீதை படிக்கப்படும் இடத்தில், நான் அமர்ந்து இருப்பேன்’’ எனக் கூறினார்.

இவ்வாறு மகாவிஷ்ணு கூறிய இந்த விவரங்களை மனத்தில் பதிய வைத்து, அதன்படியே வாழ்க்கையை நடத்திவந்தார் சோக்கா பரமானந்தர். அதிகாலையில் எழுந்திருந்து, அன்றாட அனுஷ்டானங்களை முடித்து, முறைப்படி பூஜை செய்து, பகவத்கீதையைப் பாராயணம் செய்வார். பாராயணம் என்றால் சாதாரணப் பாராயணம் அல்ல! பகவத் கீதையில் உள்ள ஒவ்வொரு சுலோகத்திற்கும் ஒவ்வொரு சாஷ்டாங்க நமஸ்காரம் வீதம், ஸ்லோகங்களையும் சொல்லி, நமஸ்காரங்கள் செய்வார்; அது முடிந்ததும் சில வீடுகளில் பிச்சை எடுத்து, அதன் மூலம் வாழ்நாளை நடத்திவந்தார். அவருடைய உள்ளம்,“பலப்பலப் பிறவிகளுக்குப் பிறகு, மிகவும் அற்புதமான இந்த மானிடப் பிறவி கிடைத்திருக்கிறது. இந்த உலகிலேயே மிகவும் உயர்ந்ததான செல்வம், இந்த மானிடப் பிறவிதான். இதைப் பகவானைப் பணியும் காரியங்களில் ஈடுபடுத்த வேண்டும்’’ என நினைத்தது. அதன் காரணமாகவே அவர் பகவத்கீதையைச் சொல்லி, அவ்வாறு நமஸ்காரம் செய்துவந்தார்.

ஒரு நாள்…சோக்கா பரமானந்தர், தன் வழக்கப்படிப் பகவத் கீதையில் ஒவ்வொரு சுலோகமாகச் சொல்லி, தரையில் விழுந்து நமஸ்காரம் செய்து கொண்டிருந்தார். திடீரென்று மழை பெய்யத் தொடங்கியது. ஒரு சில வினாடிகளில் தரை முழுதும் சேறும் சகதியுமாக ஆகிவிட்டது. ஆனால், அப்போதுகூட பகவத்கீதை சொல்லித் தரையில் விழுந்து வணங்குவதை, சோக்கா பரமானந்தர் நிறுத்தவில்லை. உடல் சேறாவதைப் பொருட்படுத்தாமல் நமஸ்காரம் செய்தார். அப்போது அந்த வழியாக வந்த வியாபாரி ஒருவர், சோக்கா பரமானந்தரின் செயலைப் பார்த்தார்.“ஆஹா! இவர் உத்தமமான பரிசுத்த ஆத்மா’’ என்று அதிசயித்து, உயர்ந்ததான ஒரு பட்டாடையை சோக்கா பரமானந்தரிடம் அளித்தார்.

“இதை ஏற்றுக்கொள்ளுங்கள்!’’ என வேண்டினார். ஆசை என்பது அறவே இல்லாத சோக்கா பரமானந்தரோ, அதை மறுத்தார்.“ஐயா! பிச்சை எடுத்த உணவும், தைத்த கந்தையும்தான் (கந்தை என்பது தைக்கப்பட்ட பழைய ஆடை) எனக்கு உகந்தது. மற்றவை எதுவும் எனக்குத் தகாது. இந்தப் பட்டாடையை ருக்மிணி நாயகரான பண்டரிநாதனுக்குச் சார்த்துங்கள்! எனக்கு மிகுந்த மகிழ்ச்சி உண்டாகும்’’ என்றார்.

ஆனால், வியாபாரியும் பலவந்தமாகப் பட்டாடையை சோக்கா பரமானந்தரின் இடுப்பில் சுற்றிவிட்டு, மகிழ்ச்சியோடு போய்விட்டார். சோக்கா பரமானந்தரின் நிலையோ; தன் விருப்பத்திற்கு மாறாகத் தன் இடுப்பில் சுற்றப்பட்ட பட்டாடையைச் சற்று, தூக்கிப் பிடித்துக் கொண்டார். தரையில் விழுந்து நமஸ்காரம் செய்தால், சேற்றில் புரண்டு இந்தப் புதிய பட்டாடை அழுக்காகப் போய்விடும் எனத் தனக்குத் தானாகவே சொல்லிக் கொண்டு, கைகளால் மட்டும் பூமியைத் தொட்டுவிட்டு நின்றபடியே கீதா பாராயணத்தைத் தொடர்ந்தார்.

தெய்வீக அனுபவம் வாய்க்கப் பெற்றிருந்தும், பற்றற்ற ஞானியின் மனம் பட்டாடையில் பற்று கொண்டுவிட்டதால், அவர் மனம் தடுமாறியது. உடம்பில் எங்கும் இல்லாத களைப்பு மேலிட்டது. தியானம், தவம் எல்லாம் பறந்தன. பசி, தாகங்கள் தலையெடுத்தன.“ஏன் இப்படிப்பட்ட விபரீத உணர்ச்சி உண்டாகிறது? பற்றில்லாத நான், பட்டாடையில் ஆசை வைத்ததால் தானே இந்தக் கேடு விளைந்தது? தெய்வத்திற்கு நைவேத்தியம் செய்ய வேண்டிய அன்னத்தில், நாய் வாயை வைத்ததைப் போல; பகவத் கீதை பாராயணம் செய்து தூய்மை அடைந்த நான், பட்டாடை மேல் கொண்ட பற்றினால் இழிநிலைக்கு ஆளாகிவிட்டேனே! ஏதாவது பரிகாரம் செய்து இப்பாவத்தைத் தீர்த்துக் கொள்ள வேண்டும்’’ என்று சொல்லி, அதற்கான வழியைப் பற்றிச் சிந்தித்தார், சோக்கா பரமானந்தர்.

அந்த நேரத்தில் விவசாயி ஒருவர் தன் நிலத்தை உழுவதற்காக, ஏரைத் தூக்கிக் கொண்டு, எருதுகளுடன் அந்த வழியாகப் போனார். அதைப் பார்த்த சோக்கா பரமானந்தர், அந்த விவசாயியை அழைத்து,“உனக்கு இந்தப் பட்டாடையைச் சன்மானமாகத் தருகின்றேன். உன் எருதுகளை என்னிடம் சற்று நேரம் கொடு!’’ என வேண்டினார். விவசாயி ஒப்புக் கொண்டார். பட்டாடையைக் கொடுத்துவிட்டு, எருதுகளைப் பெற்றுக் கொண்ட சோக்கா பரமானந்தர், “விவசாயியே! இந்த எருதுகளின் கழுத்தில் இருக்கும் நுகத்தடியில் என் இரண்டு கால்களையும் கட்டி, என்னைத் தலைகீழாகத் தொங்க விடு. அதன் பிறகு இந்த இரண்டு எருதுகளையும் அடித்து விரட்டித் துரத்து!’’ என வேண்டினார்.

விவரம் அறியாத விவசாயியும் அதேபோலச் செய்தார். காளைகள் இரண்டும் காட்டின் வழியே கடும் வேகத்தில் ஓடின. நுகத்தடியில் தலைகீழாக கட்டப் பட்டிருந்த சோக்கா பரமானந்தர், கல்லிலும் முள்ளிலும் அடித்து இழுக்கப்பட்டார். அவர் உடம்பில் இருந்து ரத்தம் வெளியேற ஆரம்பித்தது. அவரைச் செக்கச்செவேல் என்று காட்டியது. உடம்பிலிருந்து சதை பிய்ந்து போய், ஆங்காங்கே விழத் தொடங்கியது; எலும்புகள் வெளிப்பட்டு உடையத் தொடங்கின.ரத்தத்தில் தோய்ந்துபோய்ச் சிவந்த நிறத்தில் இருந்த அவரது உடம்பைக் கண்டு, காட்டில் சுற்றி ஓடிக் கொண்டிருந்த மாடுகள் மிரண்டு போய், இன்னும் வேகமாக ஓடின. அந்த நிலையிலும் சோக்கா பரமானந்தர் மனம் தளரவில்லை.

“பாழும் உடலே! பகவானை வழிபடும் போது அலட்சியம் காட்டினாய் அல்லவா? கஷ்டப்படு! உனக்கு இந்த தண்டனை போதாது. பாண்டுரங்கா! உன்னைச் சரியாக வழிபடாத நான், தகுந்த பிராயச்சித்தம் செய்துவிட்டேன். என்னை உன் திருவடிகளில் சேர்த்துக் கொள்!’’ என வேண்டினார்; மயக்கம் அடைந்தார். அதே வினாடியில் அங்கு பாண்டுரங்கன் தோன்றினார். காளைகளை நிறுத்திக் கட்டவிழ்த்து, ரத்தம் சொட்டச் சொட்ட சதை பிய்ந்து தொங்கிய சோக்கா பரமானந்தரைத் தன் கரங்களால் தடவிக்கொடுத்தார். பக்தரின் உடம்பிலிருந்து ரத்தமும் புண்களும் மறைந்தன. அவர் உடல் முன்பிருந்ததைவிட, அதிக தேஜசுடன் விளங்கியது. உணர்வு பெற்றார்.

பாண்டுரங்கனைப் பார்த்தார்; கைகள் தாமாகவே வணங்கின. வேரற்ற மரம் போல சுவாமியின் திருவடிகளில் விழுந்தார், பக்தர். கருணை வழியும் கண்களைப் பக்தர் மீது பரவவிட்ட பாண்டுரங்கன்,“தூய்மையான பக்தி கொண்ட தாசனே! எந்தக் குற்றமும் இல்லாத நீ, இவ்வாறு தண்டனை விதித்துக் கொள்ளலாமா? உன்னைப் போன்ற அடியார்களே, எனக்குச் செல்வம். அவர்கள் உண்பதெல்லாம் நான் உண்பதாகும். அவர்கள் செய்வதெல்லாம் எனக்கு வழிபாடு. அவர்கள் மகிழ்ந்தால் நான் மகிழ்வேன். அவர்கள் துயரப்பட்டால் நானும் துயரப்படுவேன்.

உன்னைப் போன்ற அடியாரே எனக்குத் துணை எனும்போது, நீ இவ்வாறு செய்யலாமா?’’ எனக் கேட்டார். பக்தரான சோக்கா பரமானந்தர்,“பாண்டுரங்கா! என்னை மன்னித்துத் தேக அபிமானம் என்பது அணுவளவுகூட இல்லாமல், எப்போதும் எந்த நேரமும் உன்னையே நினைத்து, உன் நாமங்களைச் சொல்லிக் கொண்டிருக்க அருள் செய்!’’ என வேண்டினார்.

“அப்படியே ஆகட்டும்!’’ என்ற பாண்டு ரங்கன், அங்கிருந்து மறைந்தார். பண்டரி புரத்தில், தன் சந்நதியில் கூடி இருந்து, நாம சங்கீர்த்தனம் செய்து கொண்டிருந்த பக்தர்களுக்கு, சோக்கா பரமானந்தரின் தூய்மையான பக்தியைத் தானே விவரித்தார் பாண்டுரங்கன். அதைக் கேட்டுக் கொண்டிருந்த ஞானதேவர் முதலான பக்தர்கள்,“பாண்டுரங்க விட்டலா! பண்டரிநாதா விட்டலா!’’ என்று ஜெயகோஷம் எழுப்பினார்கள்.

V.R.சுந்தரி

 

Tags : Bhooma Devi ,Mahavishnu ,God ,
× RELATED ஆஷாட நவராத்திரியில் வாராஹியை துதிப்போம்!