×

தெளிவு பெறு ஓம்

?ராமானுஜர் தண்டமும் சரித்திரத்தில் ராமானுஜருக்கு தண்டும் பவித்திரமும் போல கூரத்தாழ்வானும் முதலியாண்டானும் என்று இருக்கிறது. இதில் யார் தண்டம்? யார் பவித்திரம்?
-ஸ்ரீ வித்யா ரெங்கநாதன், திண்டிவனம்

தண்டம் முதலியாண்டான். பவித்திரம் கூரத்தாழ்வான்

?நாம் சட்டத்தைப் பின்பற்றி வாழ வேண்டுமா? தர்மத்தைப் பின்பற்றி வாழ வேண்டுமா?
– தேவநாதன், புதுக்கோட்டை.

இரண்டையும்தான். பின்பற்றி வாழ வேண்டும். ஆனால் ஒரு விஷயம், சட்டப்படி சரியாக இருப்பதெல்லாம் பல நேரங் களில் தர்மப்படி சரியாக இருக்கும் என்று சொல்ல முடியாது. தர்மப்படி சரியாக இருப்பதை சில நேரங்களில் சட்டம் அனுமதிக்காது. சட்டம் மாறுவது. தர்மம் மாறாதது. ஒருவன் பசியோடு ஏதாவது உதவி கேட்கிறான். நீங்கள் செய்வது தர்மம். செய்யவில்லை செய்ய விருப்பமில்லை என்றால் சட்டப்படி அது குற்றமல்ல. தர்மப்படி குற்றம்.

?கற்று அறிதல், அறியக் கற்றல் இரண்டுக்கும் என்ன வேறுபாடு?
– ஜெயலட்சுமி,ஸ்ரீ வில்லிப்புத்தூர்.

இப்பொழுது நீங்கள் அமெரிக்காவைப் பற்றி எழுதப்பட்ட ஒரு விரிவான புத்தகத்தைப் பார்த்து, அமெரிக்காவைத் தெரிந்து கொண்டிருக்கிறீர்கள். மிகுந்த விவரமான புத்தகம். அதை நீங்களும் விவரமாக படித்திருக்கிறீர்கள். நிறைய குறிப்பு எடுத்திருப்பதால், நீங்கள் அதைக் குறித்து விவரமாகப் பேச முடியும். எழுத முடியும். இது கற்று அறிதல். நேராக நீங்கள் ஒரு முறை அமெரிக்கா சென்று சுற்றிப் பார்த்து பல விஷயங்களைத் தெரிந்து கொண்டிருக்கிறீர்கள்.

இது அறியக் கற்றல். நெருப்பு சுடும் என்பதை நீங்கள் புத்தகம் பார்த்து தெரிந்து கொண்டு ஜாக்கிரதையாக இருக்கிறீர்கள் இது கற்று அறிதல். நீங்கள் எந்தப் புத்தகத்தையும் படிக்கவில்லை. ஒருமுறை உங்கள் கை நெருப்பில் பட்டு சுட்டுவிட்டது இப்பொழுது நீங்கள் சொல்லுகின்றீர்கள் “நெருப்பில் கைபட்டால் சுடும்’’ இது அனுபவத்தில் நீங்கள் அறிந்தது. இது அறியக் கற்றல். இந்த அனுபவம்தான் ஆன்மிகத்திலும் தேவை.

நம்மாழ்வார் இந்த அனுபவத்தை “அறியக் கற்று வல்லார் வைட்டவர் ஆழ்கடல் ஞாலத்துள்ளே’’ என்று ஒரு பாசுரத்திலே சொல்லுகின்றார். என்ன பொருள்?
நீங்கள் என்னதான் தேவார திவ்ய பிரபந்த, திருவாசகத்தைப் படித்து விளக்கம் சொன்னாலும், உங்கள் உணர்ச்சியில் ஆழ்வார்கள் நாயன்மார்களுடைய உணர்ச்சி அனுபவரீதியாக வந்துவிட்டால், நீங்கள் அறியக் கற்றவர்கள் ஆகிவிடுவீர்கள். இல்லாவிட்டால் வித்வான்கள். கற்று அறிந்தவர்கள்.

?பிரம்மோற்சவம் என்றால் என்ன?

– சத்தியசீலன், திருச்சி.

“ஸவ’’ என்றால் வடமொழியில் உலகியல் கவலைகள் அல்லது பிறவித்துயர் என்று பொருள். “உத்’’ என்றால் மேல்நோக்கி உயர்த்துவது (துன்பங்களில் இருந்து நீக்குவது / மேன்மைப் படுத்துவது) என்று அர்த்தம். மனிதர்களை உலகியல் கவலைகள் மற்றும் துக்கங்களிலிருந்து விடுவித்து, அவர்களின் மனதை ஆன்மிகப் பாதையில் மேல்நோக்கிச் செலுத்தும் ஒரு உன்னதமான நிகழ்வே “உற்சவம்’’ ஆகும்.

ஒவ்வொரு ஆலயங்களிலும் பல்வேறு விதமான உற்சவங்கள் நடக்கும். அதில் ஆண்டுக்கு ஒரு முறை பெரிய உற்சவமாக நடக்கக்கூடிய உற்சவத்துக்குப் “பிரம்மோற்சவம்’’ என்று பெயர். “பிரம்ம’’ என்ற சொல்லுக்கு “பெரிய’’ அல்லது “முதன்மையான’’ என்ற பொருளும் உண்டு. ஒரு ஆலயத்தில் நடைபெறும் அனைத்து திருவிழாக்களிலும் தலைசிறந்த, மிகப்பெரிய உற்சவத்தைக் குறிக்க இப்பெயர் பயன்படுத்தப்படுகிறது. இறைவனுக்கு பிர்மம் (பிரம்மம்) என்று ஒரு பெயர் உண்டு. அந்தப் பிரம்மத்தை தெரிந்து கொள்வதற்கான உற்சவம் என்றும் சொல்லலாம்.

புராணங்களின்படி, உலக நன்மைக்காகவும், மனிதர்களின் பாவங்களை நீக்குவதற்காகவும், பிரம்மதேவன் முன்னின்று முதன்முதலில் திருவேங்கடவனுக்கு நடத்திய பெருவிழா என்பதால் இது “பிரம்மோற்சவம்’’ என்று அழைக்கப்படுகிறது. இன்றளவும் பெருமாள் கோயில்களில் பிரம்மோற் சவம் நடக்கும் போது, பிரம்மன் அரூபமாக (கண்ணுக்குத் தெரியாமல்) வந்து விழாவை நடத்துகிறார் என்பது ஐதீகம்.

ஆகம விதிகளில் இது ஒவ்வொரு கோயில்களிலும் ஆண்டுக்கு ஒரு முறை வெவ்வேறு மாதங்களில் நடக்கும். அந்தந்த தலமூர்த்திகளுக்கு நட்சத்திரங்கள் உண்டு. அந்த நட்சத்திரங்களை ஒட்டி, பிரம்மோற்சவ வைபவங்கள் நடைபெறும். உதாரணமாக, திருமலையில் புரட்டாசி திருவோணத்தை ஒட்டி பிரம்மோற்சவம் நடைபெறும் காரணம் புரட்டாசி திருவோணம் திருமலை அப்பனின் நட்சத்திரம்.ஸ்ரீ முஷ்ணத்தில் சித்திரையில் நடக்கும். சில இடங்களில் பங்குனியில் நடக்கும். திருச்சானுரில் கார்த்திகையில் நடக்கும்.

?எதை அறிவது ஆன்மிகம்?
– வா.வாசுதேவபெருமாள், காஞ்சிபுரம்.

எதை அறிந்தால் எல்லாம் அறிந்ததாக ஆகுமோ, அதை அறிவது ஆன்மிகம். இன்னொரு கோணத்தில் சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், நமக்கு என்ன தேவை என்பதை அறிவதல்ல ஆன்மிகம். நமக்கு எதெல்லாம் தேவையில்லை என்பதை அறிவதுதான் ஆன்மிகம். “காதற்ற ஊசியும் வாராது காண்கடை வழிக்கு’’ என்று பட்டினத்தார் பாடினார். எது நமக்கு உதவாது என்பதை அவர் தெரிந்து கொண்டார். அதுதான் ஆன்மிகம்.

?பேரின்பம் சிற்றின்பம் என்று சொல்கிறார்களே இரண்டுக்கும் என்ன வேறுபாடு?
– ஜானகி, சேலம்.

ஐம்புலன்களின் ஆசைகளில் நின்று அனுபவிப்பது சிற்றின்பம். ஐம்புலன்களையும் வென்று அனுபவிப்பது பேரின்பம்.

?தவறு தப்பு – இரண்டுக்கும் என்ன வேறுபாடு?
– வி.குகன், விழுப்புரம்.

தமிழ்மொழியில் தவறு, தப்பு ஆகிய இரண்டு சொற்களுமே பிழைகளைக் குறிக்கப் பயன்பட்டாலும், அவற்றுக்கு இடையே நுட்பமான இலக்கண மற்றும் பயன்பாட்டு வேறுபாடுகள் உள்ளன. `தவறு’ என்ற சொல் பெரும்பாலும் அறியாமல் அல்லது எதிர்பாராமல் நடக்கும் பிழைகளைக் குறிக்கப் பயன்படுகிறது. ஒரு பாதையில் நேராகச் செல்லும்போது நிலைதடுமாறி `தவறி’ விழுவது போல, விழிப்புணர்வு இல்லாததால் ஏற்படுவது தவறு. உதாரணம்;

1. அவன் தெரியாமல் ஒரு தவறு செய்து விட்டான்.

2. கணக்கில் ஒரு சிறிய தவறு ஏற்பட்டுள்ளது.

இதில் உள்நோக்கம் இருப்பதில்லை. கவனக்குறைவு அல்லது அறியாமையே முதன்மைக் காரணம். தப்பு என்பது நெறிமுறையிலிருந்து, சட்டத்திலிருந்து அல்லது ஒழுக்கத்திலிருந்து விலகிச் செல்வதைக் குறிக்கும். இதில் பெரும்பாலும் உள்நோக்கம் அல்லது நெறிமுறையை மீறும் குணம் கலந்திருக்கலாம். பரீட்சையில் ஒரு கேள்விக்கு விடை தெரியாமல் மாற்றி எழுதினால் அது `தவறு’ ஆனால், பக்கத்து மாணவனைப் பார்த்துப் பார்த்து எழுதினால் அது `தப்பு’. தவறு மன்னிக்கப்படும். தப்பு தண்டிக்கப்படும்.

?மங்கலமா, மங்களமா, எப்படி எழுதுவது?
– சூரியன், தர்மபுரி.

தமிழ் இலக்கண விதிகளின்படி, மெல்லின `ங’ கரத்தை அடுத்து வல்லின `க’ கரமே வரவேண்டும். எனவே, `மங்கலம்’ என்று எழுதுவதே மரபு. சங்க இலக்கியங்கள் மற்றும் திருக்குறள் முதலான உன்னத நூல்களில் இந்த வடிவமே பயன்படுத்தப் பட்டுள்ளது.

மங்கலம்: நற்செயல், நன்மை, தூய்மை, சுபகாரியம், ஆசி, வாழ்த்து. சமஸ்கிருதத்தில் இச்சொல் `மங்கள’ என ஒலிக்கப்படுகிறது. வடமொழிச் சொற்களைத் தமிழில் எழுதும்போது, `க’ ஒலிப்புக்கு அழுத்தம் கொடுப்பதற்காகப் பலர் `மங்களம்’ (மங்களம்) என்று `ள’ கரத்தைப் பயன்படுத்துகிறார்கள். வடமொழி வழிபாட்டு மரபில் சுபத்துவத்தைக் குறிக்க இது பயன்படுகிறது. சுப நிகழ்ச்சிகளின் நிறைவில் பாடப்படும் “மங்கள ஆரத்தி’’ அல்லது “மங்களம் பாடுதல்’’ இப்படி வைத்துக் கொள்ளலாம்.

1. மங்கலம் – புனிதம் ஆசி வாழ்த்து.
2. மங்களம் – நிறைவு.

?வாழ்க்கையை எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும்?
– ஜே.கண்ணன், திருமங்கலம்.

இதற்கு விளக்கமாக ஒரு அழகான கவிதை ஒன்று உண்டு. வாழ்க்கையின் யதார்த்தத்தை அப்படியே பிரதிபலிக்கிறது இந்தக் கவிதை. இதுதான் உண்மை. “ஆட்டம் முடிந்ததும் ராஜாவும் சிப்பாயும் ஒரே பெட்டியில்’’ இவ்வளவுதான் வாழ்க்கை. இந்த வாழ்க்கையைப் புரிந்து கொண்டால் நமக்கு யாரிடமும் வெறுப்போ ஆதங்கமோ கோபமோ வராது.

?“நான் இதில் தோல்வி அடைந்து விட்டேன்’’ “அதில் தோல்வி அடைந்துவிட்டேன்’’ என்றெல்லாம் சிலர் புலம்புகின்றார்களே, உண்மையில் தோல்வி என்றால் என்ன?
– பாஸ்கரன், பொள்ளாச்சி.

நன்கு யோசித்துப் பார்த்தால், தோல்வி என்கிற வார்த்தையே ஒரு அர்த்தமுள்ள வார்த்தை கிடையாது. ஒரு குறிப்பிட்ட விஷயத்திலிருந்து வெளியேறுவதை “தோல்வி’’ என்று சொல்ல முடியாது. ஆனால், அதைத்தான் தோல்வி என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். இதை இப்படியும் சொல்லலாம். வெற்றியை இந்த முறை தவறவிட்டு விட்டோம் என்று சொல்லலாம். என்ன பொருள் என்று சொன்னால் “அடுத்த முறை முயன்றால் கிடைத்துவிடும்’’ என்று அர்த்தம். தவம், தியானம், ஜபம், வழிபாடு என எல்லாவற்றிலும் நாம் உறுதி யையும் விடாமுயற்சியையும்தான் பின்பற்ற வேண்டும்.

ஆன்மிகத்தில் சில புராணக் கதைகளில் நாம் பார்த்திருக்கலாம். ஆயிரம் ஆண்டு தவம் செய்து அந்த வரத்தைப் பெற்றான். பத்தாயிரம் ஆண்டுகள் தவம் செய்து இந்த வரத்தைப் பெற்றான் என்றெல்லாம் வரும். இதில் கவனிக்க வேண்டிய விஷயம், ஒரு குறிப்பிட்ட காலத்திலேயே எல்லாருக்குமே அவரவர்கள் விரும்பிய வரம் கிடைத்திருக்காது. சிலருக்கு ஆயிரம் வருஷங்களில் கிடைத்திருக்கும். சிலருக்கு பத்தாயிரம் வருஷங்களில் கிடைத்திருக்கும். ஆனால் கிடைக்கும்வரை அவர்கள் தவத்தை விடவில்லை என்பதுதான் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி.

?வாழ்க்கை எப்பொழுது மகிழ்ச்சியாக இருக்கும்?
– பரமேஸ்வரி, ராணிப்பேட்டை.

1. “அது நடக்காது இது நடக்காது என்று புலம்புகின்ற எதிர்மறை எண்ணம் உள்ள நபர்களிடமிருந்தும்,

2. அவனுக்குத் தகுதி இல்லாமல் கிடைத்துவிட்டது. இவனுக்கு பெரிய உத்தியோகம் கிடைத்துவிட்டது. என்றெல்லாம் சொல்லுகின்ற பொறாமைக்காரர்களிடம் இருந்தும்,

3. எப்பொழுதும் ஏதாவது ஒரு கிடைக்காத விஷயத்தைச் சொல்லி புலம்பிக்கொண்டும், அழுது கொண்டும், துக்கத்தோடு இருக்கக்கூடிய மகிழ்ச்சியற்ற நபர்களிடமிருந்தும் சற்று விலகி இருந்தால் மகிழ்ச்சியோடு வாழலாம்.

?மும்மூர்த்திகளில் சிவபெருமானுக்கு ஏராளமான கோயில்கள் உண்டு. மகாவிஷ்ணுவுக்கும் கோயில்கள் உண்டு. ஏன் பிரம்மாவுக்கு மட்டும் கோயில்கள் இல்லை? இருந்தால் எங்கு உண்டு?
– வே.கலைச்செல்வன், ஈரோடு.

தத்துவ ரீதியாக, பிரம்மன் என்பவர் “ரஜோகுணம்’’ (செயல்பாடு, உலகியல் ஆசை) கொண்டவர். உலகப் படைப்புக்கு ஆசையும் செயல்பாடும் தேவை. ஆனால், ஆன்மிகம் என்பது ஆசைகளை அடக்கி, அமைதியை நோக்கிச் செல்வதாகும். விஷ்ணு “சத்துவகுணத்தையும்’’ (அமைதி/காத்தல்), சிவன் “தமோகுணத்தையும்’’ (ஒடுக்கம்/ அழித்தல்/ஞானம்) குறிக்கிறார்கள். மனிதர்கள் மோட்சத்தையும், ஆன்ம அமைதியையும் தேடியே கோயிலுக்குச் செல்வதால், உலகியல் படைப்புக்குக் காரணமான பிரம்மனை வழிபடுவதில்லை என்ற தத்துவமும் இதில் அடங்கியுள்ளது. உலகில் பிரம்மனுக்குக் கோயில்களே இல்லை என்பது முழுமையான உண்மையல்ல. மிகச் சில இடங்களில் அவருக்கெனத் தனிக் கோயில்களும், தனிச் சந்நதிகளும் உள்ளன.

தஞ்சாவூர் அருகே உள்ள கண்டியூர் என்னும் திருத்தலத்தில் பிரம்மனுக்குத் தனிச் சந்நதி வழிபாட்டுடன் கூடிய கோயில் உள்ளது. திருச்சி அருகே உள்ள திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோயிலில், பிரம்மன் தியான நிலையில், மிக பிரம்மாண்டமான சிலையாக வீற்றிருக்கிறார். கும்பகோணத்தில் பிரம்மன் கோயில் என்று ஒரு கோயில் இருக்கிறது. அதே போல், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள புஷ்கர் என்னும் இடத்தில், தனிக் கோயில் உள்ளது. கார்த்திகை பௌர்ணமி அன்று இங்கு நடைபெறும் திருவிழா மிக விசேஷமானது.

?தியானத்தின் பலனை எப்படி உணர்வது?
– சுந்தரமூர்த்தி, சென்னை.

தியானம் செய்யும் போது வெறும் விறுவிறுப்பு மட்டுமே கிடைத்தால் அது நிறைவான தியானமாக இருக்க முடியாது. தியானம் தியான சக்தியைத் தருவதோடு நிற்காமல், உங்களுக்குள் அமைதியையும் நிறைவான உணர்வையும் திருப்தியையும் தரவேண்டும். அதுவே தியானத்தின் பூரணமான பலன்.

தேஜஸ்வி

Tags : Ramanujar ,Pavithra ,Sri Vidya Renganathan ,Dindivanam Dandam ,
× RELATED சிற்பமும் சிறப்பும்