×

ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) முடிவுகளை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. பொதுப்பிரிவினருக்கான தேர்ச்சி மதிப்பெண்ணை 60%-லிருந்து 50%-ஆகக் குறைப்பது குறித்து கொள்கை முடிவு எடுக்கப்பட உள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவரை தேர்வு முடிவுகளை வெளியிடக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான ஆசிரியர் தகுதி தேர்வு ஜூலை 3, 4 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதை, 1.60 லட்சத்துக்கும் அதிகமானோர் எழுதினர்.

இந்நிலையில் பொது பிரிவினருக்கான குறைந்தபட்ச மதிப்பெண்களை குறைக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

2010ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட பொதுப்பிரிவைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் உள்ளிட்ட 3 ஆசிரியர்கள் தாக்கல் செய்த மனுவில், ”பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைந்தபட்ச மதிப்பெண்களை 55 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாகவும், பட்டியலின மற்றும் பழங்குடியின ஆசிரியர்களுக்கான குறைந்தபட்ச மதிப்பெண்களை 45 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாகவும் குறைத்து கடந்த ஜனவரி மாதம் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

பீகார் மாநிலத்தில் பொதுப் பிரினருக்கு 50 சதவீதமாக குறைந்தபட்ச மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது போல தமிழகத்திலும் குறைத்து நிர்ணயிக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன் இன்று விசாரணைக்கு வந்தது .அப்போது, மூத்த ஆசிரியர்களுக்கு இந்த சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் ஏன் சலுகைகள் வழங்கப்படவில்லை என தமிழக அரசுக்கு நீதிபதி கேள்வி எழுப்பினார்.

இதற்கு அரசு சார்பில், பொதுப் பிரிவினருக்கான தகுதி மதிப்பெண்களை குறைப்பது தொடர்பாக கொள்கை முடிவு எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நீதிபதி, நேரடி நியமனம் மூலம்தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு, அவர்களின் புதிய பணி நியமனத்தின் போது வெயிட்டேஜ் மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன. அப்படியிருக்கும் போது, மூத்த ஆசிரியர்களுக்கு மட்டும் ஆசிரியர் தகுதித் தேர்வில் ஏன் எந்தவித சலுகையும் வழங்கப்படவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

இதனை தொடர்ந்து சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு வரும் 2026 ஜூலை 24ஆம் தேதி வரை இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது என்று தெரிவித்த நீதிபதி, அதற்குள் இந்த வழக்கில் அரசு பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.

Tags : Chennai ,Chennai High Court ,Tamil Nadu government ,
× RELATED 2026-ஆம் ஆண்டில் உலகில் வாழ்வதற்கு மிகவும் சிறந்த No.1 நகரம் இதுதான்.!!