கேரளா: வயநாட்டிற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டதால் குவாரி, சுற்றுலா மையங்களை மூட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மழை தொடர்வதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. வயநாட்டில் கனமழை, நிலச்சரிவு காரணமாக மாணவர்களின் பாதுகாப்பை கருதி கல்வி நிறுவனங்களுக்கு நாளை ஆட்சியர் விடுமுறை அறிவித்தார்.
இந்தியாவில் கேரளா மாநிலம் வயநாடு மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களில் தீவிரமான கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேப்பாடி கல்லாடி பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக மீட்புப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்
மலப்புரம், கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு எச்சரிக்கை’ (Orange Alert) விடுக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் மத்திய கேரளாவின் பல மாவட்டங்கள் ‘மஞ்சள் எச்சரிக்கை’ (Yellow Alert) வளையத்தில் உள்ளன. நிலச்சரிவு ஏற்படக்கூடிய மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும், அதிகாரிகள் அறிவுறுத்தினால் பாதுகாப்பான இடங்களுக்கு மாறுமாறும் கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் (KSDMA) கேட்டுக்கொண்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், வயநாடு மற்றும் அதனை ஒட்டியப் பகுதிகளில் மிகக் கடுமையான மழை பதிவாகி வருகிறது. அப்பகுதியில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 265 மி.மீ வரை மிகக் கனமழை பதிவாகியுள்ளது. தாழ்வான மற்றும் நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையியல் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக சுரங்க பாதையில் பணிபுரிந்த சிலர் சிக்கியுள்ளனர். கேரள மாநிலம் வயநாடு அருகே நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது. வயநாட்டிற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டதால் குவாரி, சுற்றுலா மையங்களை மூட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
அவசர தேவையின்றி பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார், ஆறுகள், அருவிகள் மற்றும் மலைப்பிரதேச சுற்றுலாத் தலங்களுக்குச் செல்லவேண்டாம்.மரம் மற்றும் மின்கம்பங்களுக்கு அருகில் நிற்பதைத் தவிர்க்கவும். மாவட்ட மற்றும் வட்ட அளவிலான கட்டுப்பாட்டு அறைகள் 24 மணி நேரமும் செயல்படுகின்றன; 1070 மற்றும் 1077 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்கள் மூலம் அவசர உதவிகளைப் பெறலாம்.
