×

போஸ்னியா போராட்டம் வீண்: ரவுண்ட் ஆப் 16ல் அமெரிக்கா

போஸ்னியாமற்றும்ஹெர்ஸகோவினா அணியுடன் நடந்த ரவுண்ட் ஆப் 32 ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் வென்ற அமெரிக்கா, காலிறுதிக்கு முந்தய சுற்றில் நுழைந்தது. நடப்பு தொடரை நடத்தும் மூன்று நாடுகளில் ஒன்றான அமெரிக்கா, நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியதால் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பே ஏரியா அரங்கில் நடந்த ரவுண்ட் ஆப் 32 போட்டியில் போஸ்னியா அணியை எதிர்கொண்ட அமெரிக்கா, உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் உற்சாகமாக விளையாடியது.

எனினும், போஸ்னியா மற்றும் ஹெர்ஸகோவினா தரப்பு ஈடுகொடுத்து மல்லுக்கட்டியதால் ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருந்தது. முதல் பாதி ஆட்டம் முடிய சில விநாடிகளே இருந்த நிலையில், அமெரிக்காவின் போலரின் பலோகன் (45வது நிமிடம்) கோல் போட்டு அந்த அணிக்கு முன்னிலை தந்தார். 2வது பாதி ஆட்டத்தில் முரட்டுத்தனமாக விளையாடியதற்காக (64வது நிமிடம்) பலோகன் ரெட் கார்டு காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார். இதனால் அமெரிக்கா 10 வீரர்களுடன் சமாளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

போஸ்னியா தரப்பின் நெருக்கடியை முறியடித்து முன்னேறிய அமெரிக்கா 82வது நிமிடத்தில் மாலிக் டில்மேன் அபாரமாக அடித்த கோலால் 2-0 என முன்னிலையை அதிகரித்துக்கொண்டது. ஆட்ட நேர முடிவில் 2-0 என வெற்றியை வசப்படுத்திய அமெரிக்கா காலிறுதிக்கு முந்தய சுற்றில் கால் வைத்து அசத்தியது. ஜூலை 7ம் தேதி சியாட்டில் அரங்கில் நடக்கும் ரவுண்ட் ஆப் 16 போட்டியில் அமெரிக்கா பெல்ஜியம் அணிகள் பலப்பரீட்சையில் இறங்குகின்றன.

* 60,000 பீட்சா இலவசம்
உலக கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே அமெரிக்க அணியின் செயல்பாட்டை பொறுத்து பல கோடி ரூபாய் மதிப்பிலான பீட்சா ரசிகர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என டொமினோஸ் நிறுவனம் அறிவித்திருந்தது. குறிப்பாக, அமெரிக்க வீரர்கள் யாராவது ரெட் கார்டு காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டால், அந்த பாதிப்பை மனதளவில் ஈடுகட்டும் வகையில் சுமார் 8.5 கோடி ரூபாய் மதிப்புடையை 60,000 மீடியம் பீட்சா இலவசம் என்ற அறிவிப்பை டொமினோஸ் செயல்படுத்த உள்ளது. அமெரிக்க அணியின் ரவுண்ட் ஆப் 16 போட்டிக்கு முன்பாக ரசிகர்களுக்கு இந்த பீட்சா டெலிவரி நடக்க உள்ளது.

* ரெட் கார்டு சர்ச்சை
போஸ்னியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் அமெரிக்க வீரர் பலோகனுக்கு சிவப்பு அட்டை காட்டப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதே போன்ற தவறிழைத்த அர்ஜென்டினா அணி கேப்டன் லியோனல் மெஸ்ஸிக்கு குறைந்தபட்சம் மஞ்சள் அட்டை கூட காட்டாத நடுவர்கள், பலோகன் விஷயத்தில் பாரபட்சமாக நடந்துகொண்டதாக சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

பிபா விதிமுறைகளின்படி நடுவர் முடிவை எதிர்த்து அப்பீல் செய்ய முடியாது, இதனால், பெல்ஜியத்துக்கு எதிரான ரவுண்ட் ஆப் 16 போட்டியில் பலோகன் களமிறங்க முடியாததுடன், ஒழுங்குமுறை கமிட்டியின் முடிவை பொறுத்தே அடுத்தடுத்த போட்டிகளில் விளையாட முடியுமா என்பது தெரியவரும்.

Tags : Bosnia ,USA ,United States ,Herzegovina ,
× RELATED தமிழ்நாடு பிரீமியர் லீக் 2026 ஆகஸ்ட் 4 முதல் போட்டிகள் தொடக்கம்