டெல்லி: எத்தனால் கலந்த பெட்ரோல் திட்டத்தை ஒரு ‘பரிசோதனை முயற்சி’ (Pilot Project) என்று கூறியதாக வெளியான தகவலை ஒன்றிய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. பெட்ரோலில் 20 சதவீத எத்தனால் கலக்கும் திட்டம் (E20) ஒரு “சோதனை முயற்சி” என்று உச்ச நீதிமன்றத்தில் கூறப்பட்டதாக வெளியான செய்திகளை ஒன்றிய அரசு முற்றிலும் மறுத்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் அலுவலகம் மற்றும் சட்ட அமைச்சகம் அதிகாரப்பூர்வ விளக்கத்தை அளித்துள்ளன.
பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (BPCL) தொடர்பான வழக்கின் விசாரணையின் போது, மத்திய அரசு இத்திட்டத்தை ஒரு “சோதனை முயற்சி” என்றும், இதன் தாக்கம் அடுத்த ஆண்டு தான் தெரியும் என்றும் கூறியதாக வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பான மற்றும் முற்றிலும் தவறானது என விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.
மேலும் எத்தனால் கலப்புத் திட்டம் என்பது ஒரு தற்காலிகச் சோதனை முயற்சி அல்ல. அது இந்தியாவின் எரிசக்திப் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்கான ஒரு முக்கிய தேசிய கொள்கை வேண்டும் கூறப்பட்டுள்ளது. திட்டமிட்ட காலக்கெடுவுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்னதாகவே அதாவது 2025-ஆம் ஆண்டிலேயே, இந்தியா பெட்ரோலில் 20% எத்தனால் கலக்கும் இலக்கை வெற்றிகரமாக எட்டியுள்ளது. மேலும், 2030 ஆம் ஆண்டிற்குள் இந்த அளவை 30 சதவீதமாக உயர்த்த ஒன்றிய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. மேற்கண்ட விளக்கம் மூலம் உச்ச நீதிமன்றத்தில் நடந்த ஒரு வழக்கு விசாரணையைத் தொடர்ந்து ஊடகங்களில் வெளியான தவறான செய்திகளுக்கு, சட்ட அமைச்சகம் மற்றும் அட்டர்னி ஜெனரல் அலுவலகம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
