×

பொன்னேரி அருகே தொடர் மின்வெட்டை கண்டித்து நள்ளிரவில் மக்கள் சாலை மறியல்

 

பொன்னேரி: பொன்னேரி அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இரவு சுமார் 9 மணி அளவில் மின் தடை ஏற்பட்ட நிலையில் நள்ளிரவில் 12 மணி வரையிலும் மின்சாரம் வழங்கப்படாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நள்ளிரவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், இரவு நேரங்களில் தொடர்ந்து மின்தடை ஏற்பட்டு வருவதாகவும், மின்வாரிய அதிகாரிகளை தொடர்புகொண்டால் அலட்சியப் போக்குடன் பதில் அளிப்பதாகவும் குற்றம் சாட்டினர்.

மேலும், பள்ளி செல்லும் குழந்தைகள், அலுவலகம் செல்வோர், முதியோர், நோயாளிகள் என அனைத்து தரப்பினரும் மின்தடையால் பாதிப்பை சந்தித்து வருவதாகவும் இரவு நேரத்தில் தூங்க முடியாமல் அவதிக்கு ஆளாவதாகவும் புகார் தெரிவித்தனர். போராட்டம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், மின்சார பீடரில் ஏற்பட்ட பழுதை மின் ஊழியர்கள் சரி செய்து வருவதாகவும், விரைவில் மின்சாரம் விநியோகம் செய்யப்படும் எனவும் கூறி பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து மின் வினியோகம் வழங்கப்பட்டது.

இதனால் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். சாலை மறியல் போராட்டம் காரணமாக பொன்னேரி – செங்குன்றம் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : Ponneri ,Krishnapuram ,
× RELATED பொது இடங்களில் மாடு வெட்டுவதற்கு...