×

எஸ்ஐஆர், தேர்தல் ஆணையம் குறித்து தலைமை நீதிபதிக்கு இந்தியா கூட்டணி கடிதம்: திமுக, ஆம் ஆத்மி உள்ளிட்ட 23 கட்சிகள் கையெழுத்து

புதுடெல்லி: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்), தேர்தல் ஆணையத்தின் பங்கு மற்றும் தேர்தல் தொடர்பான பிற விவகாரங்கள் குறித்து இந்தியா கூட்டணி சார்பில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதில் திமுக உள்ளிட்ட 23 கட்சிகள் கையெழுத்திட்டுள்ளன. இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் கடந்த ஜூன் 8ம் தேதி டெல்லியில் நடந்தது. அதில், காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 21 கட்சிகளும், ஒரு சுயேச்சை எம்பியும் பங்கேற்றனர்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளுக்குப் பிறகான காங்கிரசின் முடிவுகளால் அதிருப்தியடைந்த திமுக ஆலோசனைக் கூட்டத்தை புறக்கணித்தது. அதே போல, ஆம் ஆத்மி கட்சியும் கூட்டத்தில் பங்கேற்காமல் தவிர்த்தது. அக்கூட்டத்தில் தேர்தல் ஆணையத்தின் எஸ்ஐஆர் நடைமுறை மற்றும் தேர்தல் தொடர்பான பிற விவகாரங்கள் குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கூட்டாக கடிதம் எழுத முடிவு செய்யப்பட்டது. அதன்படி, இந்தியா கூட்டணி சார்பில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்துக்கு தற்போது கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இக்கடிதத்தில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ், சமாஜ்வாடியின் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் கையெழுத்திட்டுள்ளனர். திமுக, ஆம் ஆத்மியும் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளன. காங்கிரஸ் மீது அதிருப்தி இருந்தாலும், பொதுமக்கள் பிரச்னையில் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து செயல்படுவோம் என திமுக கூறியிருந்ததன் அடிப்படையில் இக்கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளது.

இது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பதிவில், ‘‘இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இக்கடிதத்தில் திமுக, ஆம் ஆத்மி உட்பட 23 அரசியல் கட்சிகளும், ஒரு சுயேச்சை எம்பியும் கையெழுத்திட்டுள்ளனர்’’ என கூறி உள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரெக் ஓ பிரையன் அளித்த பேட்டியில், ‘‘இக்கடிதம் இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளின் கூட்டு முயற்சியால் உருவானது’’ என கூறி உள்ளார்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அனுப்பப்பட்ட அந்த கடிதத்தில், ‘அரசியலமைப்பு நிறுவனங்கள் எதிர்பார்த்தபடி செயல்படாதபோது, பாதுகாப்பு மற்றும் நம்பிக்கையை வேண்டி நீதித்துறை நாடப்படுகிறது’ என குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்ததால் பல்வேறு மாநில மக்கள் எவ்வாறெல்லாம் பாதிக்கப்பட்டுள்ளனர், அதில் தேர்தல் ஆணையத்தின் பங்கு குறித்தும் கடிதத்தில் விளக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எஸ்ஐஆர் விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் மீது எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக குற்றம்சாட்டி வரும் நிலையில், தற்போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் உதவியை நாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.

* வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையால் பல்வேறு மாநில மக்கள் எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டுள்ளனர், இதில் தேர்தல் ஆணையத்தின் பங்கு குறித்து இந்தியா கூட்டணியின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

* அரசியலமைப்பு நிறுவனங்கள் நியாயமாக செயல்படாத தருணத்தில், கடைசி முயற்சியாக நீதித்துறையை நாடுவதற்கு ஏற்ப இக்கடிதம் தலைமை நீதிபதிக்கு அனுப்பப்பட்டிருப்பதாக இந்தியா கூட்டணி தலைவர்கள் கூறி உள்ளனர்.

* தேர்தல் ஆணையம் ஆளும் பாஜவுக்கு சாதகமாக நடந்து கொள்வதாக குற்றம்சாட்டி உள்ள எதிர்க்கட்சிகள், எஸ்ஐஆர் நடவடிக்கையை எதிர்ப்பதில் எதிர்க்கட்சிகள் முழுமையாக ஒன்றுபட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளன.

Tags : India Coalition ,SIR ,Election Commission ,Dimuka ,Aam Atmi ,NEW DELHI ,COURT ,INDIA ,COMMISSION ,
× RELATED இந்தியாவின் GAGAN செயற்கைக்கோளை...