×

12 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த திட்டம்.!! அதுவரை ஆள் பிடிக்கும் வேலை தொடரும்.. எங்கே போய் நிற்குமோ இந்த “ஜனநாயக கேலி கூத்து”.!!

சென்னை: அதிமுக-வின் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் என அடுத்தடுத்து ஆளும் கட்சியான தவெக-வில் இணைந்து வரும் சூழலில், அதிமுக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் ஆளும் கட்சியையும், முதல்வர் விஜய்யையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக வீடியோ ஒன்றில் பேசிய ஆர்.பி. உதயகுமார், தமிழ்நாட்டில் பல தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த முதல்வர் விஜய் திட்டமிட்டு செயல்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார். ஒரு சிலர் பதவி ஆசைக்காக சென்றாலும், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா வழியில் வந்த 1.5 கோடிக்கும் அதிகமான உண்மையான அதிமுக தொண்டர்கள் ஒருபோதும் டிஜிட்டல் விளம்பர தவெக கட்சிக்கு செல்ல மாட்டார்கள். ஜனநாயகத் திருவிழாவில் ஆள் பிடிக்கும் வேலையை த.வெ.க அரசு செய்து வருகிறது.

தேர்தலில் தவெக-வை எதிர்த்து போட்டியிட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளும் விஜய்யின் மகுடிக்கு மயங்கியுள்ளனர். இதில் இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்று மயங்கி போன ஆறாவது சட்டமன்ற உறுப்பினர் கரூர் விஜயபாஸ்கர். எங்கே போய் நிற்குமோ இந்த ஜனநாயக கேலி கூத்து.

இப்படி கொஞ்சமும் கூச்சமின்றி, அச்சமின்றி அரங்கேற்றி வரும் அரசியல் அலங்கோலத்தை தட்டி கேட்பதற்கு முதல்வர் விஜய்யின் மகுடிக்கு மயங்கி கிடக்கிற தமிழ் சமுதாயத்துக்கு இப்போது வேண்டுமானால் துணிச்சல் இல்லாமல் இருக்கலாம். ஆனால் இப்படியே தான் காலம் போகும் என்று முதல்வர் விஜய் நினைத்தால் அது தவறு. விரைவிலேயே தயாராகுங்கள் முதல்வரே. தமிழ் சமுதாயம் உங்களுக்கு துணிச்சலான முடிவை தருவதற்கு காத்து கொண்டிருக்கிறது என ஆர்.பி. உதயகுமார் எச்சரித்துள்ளார்.

தவெக அரசுக்கு பெரும்பான்மை பலம் கிடைக்கிற வகையிலே 12 தொகுதிகளுக்கு மொத்தமாக இடைத்தேர்தல் நடத்த விஜய் திட்டமிட்டு இருக்கிறார். அதுவரை இந்த அரசியல் அலங்கோலங்கள், ஜனநாயக கேலிக் கூத்துக்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். என்ன செய்வது .! தற்போது காற்று தவெக பக்கம் வீசுகிறது. இருந்தாலும் இந்த ஜனநாயக கேலிகூத்தை நடத்துகிற ஆணவம் அழிவைத் தரும் என்றும் கடுமையாக சாடி உள்ளார்.

Tags : Chennai ,Adimuga Assembly ,Deputy Leader ,R. B. Udayakumar ,
× RELATED கன்னியாகுமரியில் அணுக் கனிம சுரங்கம்...