கோவை: அதிமுகவைச் சேர்ந்த 12 எம்எல்ஏக்களுடன் தவெக பேரம் பேசி வருவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. உடனடியாக மேலும் 2 பேர் ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உள்கட்சி மோதலின் காரணமாக, எஸ்.பி.வேலுமணி தலைமையில் ஒரு தனி அணி உருவானது. அந்த அணியில் இருந்த 25-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்களும், பல மாவட்ட செயலாளர்களும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செயல்பட்டனர். பின்னர், பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு இரு அணிகளும் மீண்டும் இணைந்தன. இணைப்பு ஏற்பட்ட பிறகு, எஸ்.பி.வேலுமணி தரப்பினருக்கு கட்சியில் புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டன. ஆனால், பல ஆண்டுகளாக மாவட்ட செயலாளர்களாக இருந்தவர்களுக்கு மீண்டும் அதே பதவியை வழங்கவில்லை. விலகி, பின்னர் கட்சியில் சேர்ந்தவர்கள், தங்கள் புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொண்டாலும், பழைய மாவட்ட செயலாளர் பதவியை எதிர்பார்த்தனர். ஆனால், அதனை எடப்பாடி பழனிசாமி வழங்கவில்லை.
இந்தநிலையில், எஸ்.பி.வேலுமணி அணியின் ஆலோசனை கூட்டம் கோவையில் உள்ள ஒரு ரகசிய இடத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் அதிமுக கட்சி கொடி, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி புகைப்படம் இடம்பெறவில்லை.
கூட்டம் முடிந்த பிறகு, இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த எஸ்.பி.வேலுமணி, ‘‘தமிழக சட்டமன்ற தேர்தலில் கட்சிக்காக இரவு, பகலாக உழைத்த நிர்வாகிகளை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்கவும், அவர்களுடன் மதிய உணவு பகிர்ந்துகொள்ளவும் மட்டுமே இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் வேறு எந்த அரசியல் நோக்கமும் இல்லை. கூட்ட அரங்கில் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் படங்கள் இடம்பெற்றிருந்தன’’ என்றார்.
ஆனால், கூட்டத்தில் பங்கேற்ற சில நிர்வாகிகள் வேறு விதமாக தகவல் தெரிவித்தனர். அதாவது, கூட்டம் துவங்கியதில் இருந்தே எஸ்.பி.வேலுமணி மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்ததாகவும், பேசிய பெரும்பாலான நிர்வாகிகள் அனைவரும் மாவட்ட செயலாளர் பதவி குறித்து தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தியதாகவும் கூறினர். இந்த கூட்டத்தில் பேசிய எஸ்.பி.வேலுமணி, கடந்த சில மாதங்களில் கட்சியில் நடந்த முக்கிய அரசியல் சம்பவங்களை நினைவு கூர்ந்ததாகவும் குறிப்பிட்டனர்.
கட்சியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டே மீண்டும் இணைந்ததாகவும், அதிமுக தனது அடிப்படை கொள்கையில் இருந்து விலகக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும், ‘‘கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளராக 21 ஆண்டுகளாக பணியாற்றியுள்ளேன். ஆனால், இன்று வேறு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் பதவியை மீண்டும் வழங்கினால்தான் கட்சியை முழு திறனுடன் என்னால் இயக்க முடியும்’’ என்று பேசியுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு, எஸ்.பி.வேலுமணி தனக்கு நெருக்கமான ஆதரவாளர்களுடன் மீண்டும் ஆலோசனை நடத்தி, அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேவேளையில், மாவட்ட செயலாளர் பொறுப்புகளை மீண்டும் வழங்கவேண்டும் என்ற கோரிக்கையும் வலுவாக வைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், அதிமுகவை உடைக்க தவெக தீவிரம் காட்டி வருகிறது. அதன்படி 12 எம்எல்ஏக்களை இழுக்க பேரம் பேசி வருகிறது. அதன்படி புவனகிரி அருண்மொழித்தேவன், சங்கராபுரம் ராகேஷ் ஆகியோர் தவெக வலையில் விழுந்துள்ளனர். முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், நத்தம் விஸ்வநாதன், கே.வி.வீரமணி, கே.பி.அன்பழகன் மற்றும் திருத்தணி ஹரி உள்ளிட்டவர்களுடன் தவெக பேரம் பேசி வருவதாக கூறப்படுகிறது. ஆனால் யாருக்கும் அமைச்சர் பதவி தர முடியாது. எம்எல்ஏக்களாக இருந்தவர்களுக்கு மீண்டும் எம்எல்ஏ சீட் கொடுக்கிறோம். கட்சிப் பொறுப்பு கிடையாது. நீங்கள் வேலை செய்யுங்கள். அதன்பிறகு பார்க்கலாம் என்று கூறியுள்ளனர். பணம் கேட்டவர்களுக்கு பணம் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எடப்பாடி பழனிச்சாமியும் பொறுப்புக்களை கொடுக்காததால், பேசாமல் தவெக பக்கம் போனால், ஆளும் கட்சி என்ற அந்தஸ்து கிடைக்கும் என்று நினைத்துத்தான் செல்கின்றனர்.
அதேநேரத்தில், தவெக தரப்பில் வேலுமணியிடம் பேசியுள்ளனர். ஆனால் அவரோ இப்போது எந்த முடிவும் எடுக்க முடியாது. எனக்கு அதிமுகவும், அதன் தொண்டர்களும் முக்கியம் என்று தெரிவித்துள்ளார். இதனால் அவர் மட்டும் தற்போது தவெக பக்கம் போகாமல் உள்ளார். மற்றவர்களுடன் தவெக பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
