சென்னை: சென்னைப் புறநகர் பகுதியான கேளம்பாக்கத்தை அடுத்துள்ள தையூர் கிராமத்தில் வி.ஐ.பி. நகர் என்ற வீட்டு மனைப்பிரிவு உள்ளது. இந்த மனைப்பிரிவில் உள்ள காலி இடத்தில் கடந்த 17ம் தேதி தையூர் கிராமத்தைச் சேர்ந்த சில வாலிபர்கள் விளையாடிக்கொண்டு இருந்தனர். அப்போது அப்பகுதியில் இருந்த வற்றிய கிணற்றில் ராக்கெட் லாஞ்சர் ஒன்று வெடிக்காத நிலையில் கிடப்பதை பார்த்தனர். இதையடுத்து கேளம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கேளம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராக்கெட் லாஞ்சரை மீட்டு காலியாக இருந்த இடத்தில் வைத்தனர். மேலும் அதைச் சுற்றிலும் பாதுகாப்பு தடுப்புகளை வைத்து தார்ப்பாய் போட்டு மூடி வைத்தனர்.
இதையடுத்து பரங்கிமலையில் உள்ள ராணுவ தலைமையகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் முறையான தகவல்களுடன் அந்த கடிதம் இல்லை என்று கூறப்பட்டதையடுத்து கலெக்டர் மூலம் முறையான கடிதம் அனுப்பப்பட்டது. இதனிடையே இந்த ராக்கெட் லாஞ்சரை செயலிழக்க செய்ய வைக்க ராணுவத்தினர் உடனடியாக வராத நிலையில், தமிழ்நாடு போலீஸ் வெடிகுண்டு செயலிழப்பு கமாண்டோ படையினர் ஒரு குழிதோண்டி அந்த லாஞ்சரை பாதுகாப்பாக வைத்திருந்தனர். அதனை தொடர்ந்து 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
இந்நிலையில் சென்னை பரங்கிமலையில் இருந்து ராணுவ தொழில் நுட்ப பிரிவினர் அடங்கிய 6 பேர் கொண்ட குழு நேற்று தையூர் கிராமத்திற்கு வந்தது. அங்கு கேளம்பாக்கம் போலீசார் உதவியுடன் அந்த ராக்கெட் லாஞ்சரை காலி விவசாய நிலத்தில் பெரிய பள்ளம் தோண்டி அந்த குழுவினர் பத்திரமாக இறக்கி வைத்தனர். பின்னர் அந்த பள்ளத்திற்குள் வைத்து ராக்கெட் லாஞ்சரை வெடிக்க வைத்து செயலிழக்கச் செய்தனர். பயங்கர சத்தத்துடன் அந்த ராக்கெட் லாஞ்சர் வெடித்ததால் கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஆனால், இந்த ராக்கெட் லாஞ்சர் ஆபத்து விளைவிக்கக்கூடியது அல்ல என்று ராணுவ தொழில் நுட்ப பிரிவினர் ஏற்கனவே கிராம மக்களிடம் தெரிவித்திருந்தனர். இந்த ராக்கெட் லாஞ்சரால் கடந்த 12 நாட்களாக தையூர் கிராம மக்கள் ஒருவித பதற்றத்துடன் இருந்தனர். 12 நாட்களுக்கு பிறகு அதனை ராணுவ தொழில் நுட்ப பிரிவினர் வெடிக்க வைத்து அழித்ததையடுத்து கிராம மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.
