சென்னை: மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல் துறை அலுவலர்கள் மாநாடு இன்று (29.6.2026) காலை தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் அமைந்துள்ள மாநாட்டுக் கூட்ட அரங்கில் தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையில் நடைபெற்றது.
அந்த மாநாட்டில் முதல்வர் ஆற்றிய உரையில்;
வெளிப்படையான, நேர்மையான, இலஞ்ச லாவண்யமற்ற ஒரு சமூக நீதிக்கான அரசைத் தேர்ந்தெடுத்தே ஆக வேண்டும் என்றே நம் மக்கள் செய்துதான், அரசைத் முடிவு தேர்ந்தெடுத்துள்ளார்கள். நம்முடைய ரேஷன், கல்வி, குடிநீர், சுகாதாரம், மின்சாரம், சாலை வசதி, பேருந்து வசதி போன்ற அடிப்படை வசதிக்கெல்லாம் நாம் முக்கிய கவனம் செலுத்தியாக வேண்டும்.
சட்டம் ஒழுங்கு பிரச்சனையைப் பொறுத்தவரை. நீங்கள் சட்டத்தின் அடிப்படையில் சுதந்திரமாக முடிவு செய்யலாம். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், எவ்வளவு உயர்வானவர்களாக இருந்தாலும், பாரபட்சமின்றி சட்டப்படி உடனடியாக துரிதமாக நடவடிக்கை எடுத்து உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும். அதில் நிரபராதிகள் யாரும் தப்பித்தவறி கூட பாதிக்கப்பட்டுவிடக் கூடாது. மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தை நடத்துவதற்கு முன்னால். District Level Officers கூட்டத்தை ஆன்லைனில் நடத்த வேண்டும். விவசாயிகள். மீனவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோரின் கூட்டத்தை முறையாக, சரியாக, கனிவோடு நடத்த வேண்டும். மனு கொடுக்க வருகிற மக்களிடம் கனிவாகக் குறைகளைக் கேட்டறிந்து அவர்களுடைய பிரச்சனை என்னவென்பதை புரிந்துகொண்டு உடனடியாக அதற்குரிய நடவடிக்கையை எடுத்துத் தீர்வு தர வேண்டும்.
மக்கள் பெரும்பாலும் ஏதாவது ஒரு சான்றிதழ், பட்டா போன்ற அடிப்படைத் தேவைகளைக் கேட்டுதான் வருவார்கள். அப்படி வருகின்ற மக்களை, தங்கள் வீட்டில் இருக்கின்ற மனிதர்களாக நடத்தினால் போதும், அவர்கள் சந்தோஷம் அடைவார்கள். மக்களுக்கு வங்கி சேவைகள் ஒழுங்காகக் கிடைக்கிறதா என்பதை வங்கியாளர்கள் கூட்டத்தை (Bankers Meeting) நடத்தி விசாரிக்க வேண்டும்.
காலை மேலும், திங்கட்கிழமை தவிர மற்ற நாட்களில் வேளையில் கள ஆய்வுக்குச் (Field Visit) செல்ல வேண்டும். வேலை செய்வது, மனு வாங்குவது மட்டும் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களின் வேலையல்ல. தொடர் கண்காணிப்பு (Follow-up) மிகவும் முக்கியம். அதற்காக ஒரு அலுவலரை நியமித்து தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களிடம் குறையைக் கேட்பதைவிட. அதைத் தீர்ப்பது மிகவும் முக்கியம். மாவட்ட ஆட்சியர்கள் அனைவரும் ஒவ்வொரு மாதமும் சட்டம்-ஒழுங்கு கூட்டத்தை நடத்தி, சம்பந்தப்பட்ட துறைகளை ஒருங்கிணைத்துச் செயல்பட வேண்டும். ஒவ்வொரு முக்கியமான வழக்கிலும் சட்ட வல்லுநர்களோடு கலந்தாலோசித்து. தவறு செய்தவர்கள் தப்பித்துவிடாத வகையில் உடனடியாகத் தீர்வு கிடைப்பதற்கு சட்ட நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த வேண்டும்.
மாவட்ட ஆட்சியர்கள், வருவாய்த்துறையினர் மற்றும் காவல்துறையோடு கலந்தாலோசித்து, எந்தவொரு சம்பவமும் நடப்பதற்கு முன்னதாகவே மூலகாரணத்தைக் கண்டறிந்து, குற்றச் சம்பவங்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டம்-ஒழுங்கு பாதிப்பை ஏற்படுத்துபவர்களின் நடத்தையில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும். இதற்காக, வருவாய்த்துறை, காவல்துறை அனைத்துத் தகவல்களையும் சேகரித்து, அதைச் சரிபார்த்து, முன்பாகவே என்ன நடக்கும் என்று கணித்து அதற்கேற்றவாறு செயல்பட வேண்டும்.
முக்கியமாகப் பெண்கள் பாதுகாப்பை நூறு சதவீதம் உறுதிப்படுத்த வேண்டும் No change and No compromise. பெண்களின் பாதுகாப்பிற்கு உரிய Special Arrangements செய்தே ஆக வேண்டும். Hence, District Collectors and Superintendents of Police should pay sharp and special attention to them.
Students and Children Safety-லும் முக்கியக் கவனம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு பள்ளிக்கும் அருகிலுள்ள கடைகளைத் தொடர்ச்சியாகக் கண்காணிக்க வேண்டும். தேவைப்படும் நேர்வில் அவ்வப்போது அங்கு சோதனை நடத்த வேண்டும். போதைப்பொருட்கள் தொடர்பான குற்றங்களில் ஈடுபடுவோரை உடனடியாகக் கைது செய்து, நீதிமன்றத்தின் முன் நிறுத்தித் தண்டனை வாங்கித் தருவதை உறுதிப்படுத்த வேண்டும்.
Education is a celebration. அது எப்போது கொண்டாட்டமாக மாறும்? ஒழுக்கத்தைப் போதிக்கிற, சாதிய வேறுபாடுகளைத் தாண்டி சாதிக்கிற மாணவர்களை உருவாக்குகின்றபோதுதான் கல்வி கொண்டாட்டமாக இருக்கும். அதைக் கண்காணிப்பதும் உங்கள் கைகளில்தான் உள்ளது.
ரேஷன் கடைகளில் எடை குறைபாடுகள் இல்லாமல், தரமான உணவுப் பொருட்கள் வழங்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும். அடிப்படை வசதிகள், சுகாதார வசதிகள், மின்னிணைப்பு, மின்சார விநியோகம், முதியோர் ஓய்வூதியம், சான்றிதழ்கள் வழங்குவது போன்றவற்றில் விரைவான செயல்பாடுகள் வேண்டும். மேலும், இயற்கைப் பேரிடர் ஏற்படும் காலங்களில் உடனடி நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளைத் துரிதமாக எடுத்துச் செயல்பட வேண்டும்.
‘மக்களிடம் செல்; மக்களுடன் வாழ்; மக்களிடமிருந்து கற்றுக்கொள்’ என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் சொன்னார்கள். அதுதான் நமது தாரகமந்திரம். அதற்கேற்ப அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை உயர்த்தும் வகையில் உங்கள் செயல்பாடு இருக்க வேண்டும். மக்கள் மனுக்களைக் கொண்டு வரும்போது இது சாத்தியம் என்றோ. சாத்தியம் இல்லையென்றால் சரியான காரணங்களுடன் மக்களிடம் தெளிவுப்படச் சொன்னாலே அவர்கள் தெளிவாகப் புரிந்து கொள்வார்கள். அரசின் சேவைகள் அவர்கள் வீட்டுக்கே போய்ச்சேர வேண்டும். அதற்கு உங்களுடைய ஆலோசனைகளை எதிர்பார்க்கிறேன்.
அரசு அலுவலகங்களில் ஆய்வு செய்வதற்கு மாவட்ட அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் வரும்போது அவர்களுக்கு ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும். அரசுத் திட்டங்கள் எப்படி செயல்படுத்தப்படுகின்ற என்பதை அதிகாரிகள் நேரடியாகச் சென்று ஆய்வு செய்ய வேண்டும்.
Transparency should be the basic principle. அதனால், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் அரசு விதிகளுக்கு உட்பட்டு சுதந்திரமாகச் செயல்படலாம். தனிநபர்களின் தலையீடு இருக்காது. சாதி அடிப்படையிலான பாகுபாடு மற்றும் வன்முறைகளுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பள்ளிகளில் சாதி ஊக்குவிப்பு சம்பவங்களை கல்வித்துறை கண்காணிக்க வேண்டும்.
கோயில் திருவிழாக்கள், அரசியல் பேரணிகள் மற்றும் பொது நிகழ்வுகளின்போது நெரிசல் சம்பவங்கள் தடுக்கப்பட வேண்டும். பொதுப்பணித் துறை (PWD), அறநிலையத் துறை, தீயணைப்பு & மீட்பு மற்றும் வருவாய்த் துறைகள் அனைத்து முக்கிய நிகழ்வுகளின்போதும் காவல்துறையுடன் முன்கூட்டியே ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும்.
தமிழ்நாட்டில் ஊரகப் பகுதிகளில் நடைபெறும் பெரும்பாலான காயப்படுத்தல் வழக்குகள் மற்றும் கொலைகளுக்கு, நில தகராறுகளே முதன்மைக் காரணமாக உள்ளன. மாவட்ட அளவிலான நில வழக்கு தீர்வுக் குழு ஒவ்வொரு மாவட்டத்திலும் சீரமைக்கப்பட்டு இருவார இடைவெளியில் கூட்ட வேண்டும். மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாதந்தோறும் மதிப்பாய்வு நடத்தி அதன் செயல்திறனை மதிப்பீடு செய்ய வேண்டும்.
பெண்களுக்குப் பாதுகாப்பற்ற பகுதிகள், குற்றம் அதிகமான இடங்கள், விபத்துகள் அதிகமாக நிகழும் பாதைகள் மற்றும் மூத்த குடிமக்கள் அதிகமாக வருகைதரும் இடங்கள் என கண்டறியப்பட்ட அனைத்து முக்கிய இடங்களிலும் CCTV நிறுவும் இயக்கத்தை முனைப்பாக நடத்த வேண்டும். இரண்டாம்நிலை நகரங்கள் மற்றும் தமிழ்நாட்டின் நகர்புற சுற்றுப்புற பகுதிகளில் உள்ள Coverage இடைவெளிகளைக் குறைப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். மாவட்ட அளவில் நடத்தப்படும் மாதாந்திர கூட்டங்களில் CCTV நிறுவல் தொடர்பான பணி முன்னேற்றம் மதிப்பாய்வு செய்யப்பட்டு ஆவணப்படுத்தப்பட வேண்டும்.
பெண்கள் பாதுகாப்பு ஒவ்வொரு மாதாந்திர மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் நிலையான மற்றும் சமரசமற்ற நிகழ்ச்சி நிரலாக இருக்க வேண்டும். முக்கிய இடங்கள் கண்காணிப்பு. CCTV Coverage ஆகியவற்றின் முன்னேற்றம் ஒவ்வொரு கூட்டத்திலும் மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும். அதேபோல் CoP/IGP/DIG/SP ஆகியோர் ஆய்வின்போது பெண்களுக்கு எதிரான குற்றங்களின் புள்ளிவிவரங்கள் மட்டுமல்லாமல், விசாரணையின் தரம், பாதிக்கப்பட்டவர்கள், அவர்களின் சார்ந்தோருக்கான இழப்பீடு மற்றும் நிலுவையிலுள்ள விசாரணை வழக்குகளின் நிலை ஆகியவற்றையும் மாதந்தோறும் மதிப்பாய்வு செய்ய வேண்டும்.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் போக்ஸோ (POCSO) வழக்குகளில் FIR பதிவில் தாமதம் ஏற்படுவதைச் சகிக்கவே கூடாது. பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் புகார்களை மறைக்கவோ தாமதமாக அனுப்பவோ கூடாது. தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் விழிப்புணர்வு இயக்கம் நடத்தப்பட வேண்டும்.
மாநிலத்தின் சில பகுதிகளில் குழந்தைத் திருமணங்கள் தொடர்ந்து அதிகளவில் பதிவாகின்றன. பாதிக்கப்படக்கூடிய சமூகங்களில் இலக்கு கொண்ட அணுகுமுறை கடைப்பிடிக்கப்பட வேண்டும். சிறார் குற்றங்களில், கும்பல் சார்ந்த நடவடிக்கைகள் மற்றும் போதைப்பொருள் துஷ்பிரயோகம், குற்றங்களில் ஈடுபடும் போக்கு அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த வேண்டும். பள்ளி இடைநிறுத்தம் குறிப்பிடத்தக்க ஆபத்து காரணியாக இருப்பதால், பள்ளி மற்றும் கல்வித்துறைகள் இடைநிறுத்தங்களை நெருக்கமாக கண்காணிக்க வேண்டும். சிறார் நீதி (JJ) சட்ட விதிகளை திறம்படப் பயன்படுத்த வேண்டும்.
கள்ளச்சாராயம் தடுப்பு குறித்து காவல், வருவாய் மற்றும் வனத்துறை அதிகாரிகள் சட்டவிரோத மலைப்பகுதியில் சட்டவிரோத வடிகட்டல் (Illicit distillation) இடங்கள் பற்றிய தகவல் சேகரிக்க வேண்டும். சமூக அளவிலான தடுப்புக்கு உள்ளாட்சி அமைப்புகளைத் தீவிரமாக ஈடுபடுத்த வேண்டும்.
போதைப்பொருள் அச்சுறுத்தலை அமலாக்கம் மட்டுமே தீர்க்க முடியாது – போதைப்பொருள் தேவை குறைப்புக்கும் ( Drug Demand to be eliminated) சம கவனம் செலுத்தப்பட வேண்டும். சுகாதாரத் துறை அனைத்து மாவட்டங்களிலும் போதைமுறிவு முகாம்களை நடத்த வேண்டும்.
பழக்கத்திற்கு உள்ளாக்கும் போதை மருந்துகளாக சில மாத்திரைகள் பயன்படுத்தப்படுகின்றன. மருந்து ஆய்வாளர்கள், உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் கலால் துறை அதிகாரிகள் அனைவரும் போதை ஒழிப்பு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட வேண்டும். NCORD கூட்டத்தை மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் துறை கண்காணிப்பாளர்கள் தொடர்ந்து நடத்த வேண்டும். திருவள்ளூர், கன்னியாகுமரி, தென்காசி, தேனி, கோயம்புத்தூர். கிருஷ்ணகிரி, தர்மபுரி போன்ற எல்லையோர மாவட்டங்கள் வழியாக போதைப்பொருட்கள் கடத்தப்படுவதையும், உரிய அனுமதியின்றி கனிம வளங்கள் கடத்தப்படுவதையும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் கண்காணித்து நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
தீவிரமாகக் சென்னை, கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் போன்ற தொழில்துறை மண்டலங்களில் குறிப்பாக புலம்பெயர்ந்த தொழிலாளர் மக்களிடையே கஞ்சா, குட்கா மற்றும் பிற போதைப்பொருள்களின் பரவல் தீவிரமாகக் கண்காணிக்கப்பட வேண்டும். புலம்பெயர்ந்தோர் அதிகமாக வாழும் பகுதிகளில் இலக்கு கொண்ட விழிப்புணர்வு மற்றும் அமலாக்கம் நடத்தப்பட வேண்டும்.
காவிரி, வைகை மற்றும் பிற ஆற்று மணல் படுகைகளில் சட்டவிரோத மணல் திருட்டை கண்டறிந்து சுரங்க, வருவாய் மற்றும் காவல்துறை அதிகாரிகள் ஒன்றிணைந்து. சட்டவிரோத மணல் குவாரிகளை தடுத்து நிறுத்த வேண்டும். தமிழ்நாடு முழுவதும் பாதிக்கப்படக்கூடிய, சமூகங்களை ஏமாற்றும் PONZI மற்றும் பலமட்ட சந்தைப்படுத்தல் திட்டங்கள் தொடர்கின்றன. சட்டங்களைக் கண்டிப்பாக அமல்படுத்துவதன் மூலமும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலமும் இவற்றைக் கட்டுப்படுத்த, தொடர்புடைய அனைத்து துறைகளும் திறம்பட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். ரசாயன மற்றும் பட்டாசு தொழிற்சாலைகளில் தொழில்துறை பாதுகாப்பு நடைமுறைகள் கண்டிப்பாக அமல்படுத்தப்பட வேண்டும். தொழில்துறை பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் உரிய கால இடைவெளியில் தணிக்கை செய்ய பொறுப்பேற்கப்பட வேண்டும். உரிமம் இல்லாமல் எந்த அலகும் இயங்கவே கூடாது.
புயலால் பாதிக்கப்படும் கடலோர மாவட்டங்கள், வெள்ளத்தால் பாதிக்கப்படும் டெல்டா மாவட்டங்கள், நீலகிரி மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையின் மலைப்பகுதிகள் ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்தி, பேரிடர் தயார்நிலை பற்றி கட்டமைக்கப்பட்ட தணிக்கை நடத்தப்பட வேண்டும். சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளில் பருவமழை காலத்திற்கு முன் மீட்பு உள்கட்டமைப்பில் உள்ள தேவைகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும்.
நாட்டிலேயே அதிக சாலை விபத்து மரணங்கள் தமிழ்நாட்டில் நடப்பது வருத்தமாக உள்ளது. விபத்து அதிகமாக நடக்கும் இடங்கள் கண்டறியப்பட்டு, காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டு, அதிக ஆபத்துள்ள பகுதிகளில் உரிய சாலை மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ள வேண்டும். தலைக்கவசம் அணிவது, சீட்பெல்ட் அணிவது உள்ளிட்ட சாலை விதிகளை கடைப்பிடிப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
ஒடிசா, மேற்குவங்கம், பீகார் மற்றும் வடகிழக்கு மாநிலங்களிலிருந்து வந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் பணிபுரிகின்றனர். புலம்பெயர்ந்தோர், தாக்குதல் அல்லது சுரண்டலுக்கு உட்படுத்தப்படக் கூடாது. அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவதற்காகத் தொழிலாளர் நலத்துறை மூலம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் கட்டாயப் பதிவு அமல்படுத்தப்பட வேண்டும்.
பொதுமக்களை காவல் நிலையங்களுக்கு வரும் கண்ணியத்துடன் நடத்த வேண்டும். மூத்த குடிமக்கள் மற்றும் கிராமப்புற மக்களை குறிவைத்து டிஜிட்டல் கைது மோசடி, OTP மோசடி மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் முதலீட்டு மோசடி அதிகரித்துள்ளன. இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அனைத்து சைபர் குற்ற காவல் நிலையங்களும், குற்றங்களைத் தடுக்க மற்றும் கண்டறிய தீவிரமாக பணியாற்றிட வேண்டும்.
காவல்துறை ஆணையர் / மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் கொலை, POCSO மற்றும் பிற முக்கியமான வழக்குகள் தொடர்பாக அனைத்து வழக்கறிஞர்களுடனும் மாதந்தோறும் ஒருங்கிணைப்புக் கூட்டம் நடத்த வேண்டும். முந்தைய மாதத்திற்கான முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்து ஆவணப்படுத்தப்பட வேண்டும்; இது மூத்த காவல் அதிகாரிகளால் உறுதி செய்யப்பட வேண்டும்.
அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உண்மையாகவும், நேர்மையாகவும் இருக்க வேண்டும். Clarity and Transparency இருக்க வேண்டும். மக்களுக்கு நல்லதே செய்யுங்கள், நல்லதே நடக்கும் என கூறினார்.
