×

“தொடர்ந்து ஏன் இப்படி வாக்காளர்களை அவமதிக்கிறீங்க”.! அதிமுக எம்எல்ஏ-க்களின் பதவி விலகல்களுக்கு வலுக்கும் கண்டனம்

சென்னை: தமிழக அரசியல் களத்தில் உரிய விளக்கமின்றி, சீரான இடைவெளியில் நிகழும் சட்டமன்ற உறுப்பினர்களின் பதவி விலகல் சம்பவங்கள் வாக்காளர்களை அவமதிப்பதாகும் என காங்கிரஸ் எம்.பி
கார்த்தி சிதம்பரம் கூறி இருக்கிறார்.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கரூர் தொகுதியில் நின்று போட்டியிட்ட அதிமுக-வை சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று காலை தனது MLA பதவியை ராஜினாமா செய்தார். இவரோடு சேர்த்து தேர்தல் முடிந்த இந்த 2 மாதங்களில் மொத்தம் 6 அதிமுக எம்எல்ஏ-க்கள் பதவி விலகி உள்ளனர்.

இதில் தங்களது பதவியை ராஜினாமா செய்த மரகதம் குமாரவேல், ஜெயக்குமார், சத்தியபாமா, இசக்கி சுப்பையா ஆகியோர் சிறிதும் தாமதிக்காமல் தவெக-வில் இணைந்தனர். முன்னாள் அமைச்சரான சி.விஜயபாஸ்கர் சில நாட்களுக்கு முன் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, முதல்வர் விஜய் முன்னிலையில் தான் கட்சியில் இணைவேன், இல்லை என்றால் என் கவுரவம் என்னாவது என்ற ஈகோ-வுடன் வெயிட்டிங் லிஸ்ட்டில் இருக்கிறார். இந்த சூழலில் தான் அதிமுக-வில் இருந்த மற்றொரு விஜயபாஸ்கரும், இன்று தனது எம்எல்ஏ பதவியை இன்று ராஜினாமா செய்து விட்டு, அதிமுக முகங்களாக இருந்த 2 விஜயபாஸ்கர்களும் விரைவில் தவெக-வில் இணைக்கிறோம் என்று சைகையை மறைமுகமாக வெளிப்படுத்தி உள்ளார்.

2 விஜயபாஸ்கர்களும் இன்னும் ஓரிரு நாட்களில் ஆதரவாளர்கள் புடைசூழ தவெக-வில் இணைய ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இப்படி குதிரை பேரம் நடத்தி ஆசை காட்டி அதிமுக எம்எல்ஏ-க்களை தங்கள் பக்கம் இழுத்து கொண்டு வரும் தவெக-வை எதிர்கட்சியான திமுக-வும் சரி, தவெக கூட்டணிக்கு தாவி பதவிகளை பெற்றுள்ள காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் சரி தேவைக்கு அதிகமாகவே கண்டித்தாகிவிட்டது. ஆனால் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை பெறுவதை இலக்காக கொண்டு வெறி கொண்டு பிற கட்சி எம்எல்ஏ-க்களை தங்கள் கட்சிக்கு தூண்டில் போட்டு இழுத்துவருவதை தலையாய பணியாக தினமும் செய்து கொண்டிருக்கிறது தவெக அரசு.

இந்நிலையில் அதிமுக எம்எல்ஏ-க்கள் இப்படி தொடர்ச்சியாக பதவி விலகி கொண்டே வருவது ஆரோக்கியமானது அல்ல என இன்று செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனும் அதிருப்தி தெரிவித்து உள்ளார்.

Tags : Chennai ,Congress ,MLA ,P Karthi Chidambaram ,Karur ,
× RELATED மாநிலங்களவை MP-ஆக மல்லிகார்ஜுன கார்கே...