×

சதுரகிரியில் பிரதோஷ வழிபாடு: ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

 

வத்திராயிருப்பு: ஆனி மாத பிரதோஷத்தையொட்டி சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் தரிசனம் செய்வதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே, மேற்கு தொடர்ச்சிமலையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இக்கோயிலில் தினமும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வந்தனர். இந்நிலையில், தினசரி வழிபாடு நடத்த தடை விதிக்க வேண்டும் என ஐகோர்ட் மதுரை கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட் கிளை அமர்வு, சதுரகிரி கோயிலுக்கு தினமும் செல்ல தடை விதித்து அமாவாசை, பவுர்ணமி மற்றும் பிரதோஷ வழிபாட்டிற்காக மாதம் 8 நாட்கள் மட்டுமே மலையேற அனுமதி வழங்கி உத்தரவிட்டது. இந்த உத்தரவு கடந்த 22ம் தேதி முதல் அமலுக்கு வந்தது.
இந்த நிலையில், ஆனி மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு இன்று (ஜூன் 27) முதல் வரும் 30ம் தேதி வரை நான்கு நாள்கள் பக்தர்கள் கோயிலுக்கு செல்ல வனத்துறை மற்றும் கோயில் நிர்வாகம் அனுமதி வழங்கியது.

இதன்படி இன்று ஆனி பிரதோஷத்தையொட்டி திருச்சி, மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, விருதுநகர், தென்காசி, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த பக்தர்கள் அதிகாலை முதலே தாணிப்பாறை வனத்துறை கேட் பகுதியில் குவிந்தனர். காலை 6 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டது. பக்தர்கள் மலைப்பாதை வழியாக கோயிலுக்குச் சென்றனர். முன்னதாக பக்தர்களின் உடைமைகளை சோதனை செய்த வனத்துறை ஊழியர்கள், ‘இரவில் கோயிலில் தங்க அனுமதி கிடையாது. நீர்நிலைகளில் குளிக்கக்கூடாது.

பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு செல்லக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை விதித்து அனுப்பி வைத்தனர். பிரதோஷத்தையொட்டி இன்று மாலை சுந்தரமகாலிங்கம் சுவாமி சந்தனம், பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகங்கள் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.

Tags : Chhaturgiri ,Vathirairuppu ,Chathuragiri Sundaramakalingam Temple ,Ani ,Chaduragiri Sundaramakalingam Temple ,Virudhunagar district ,Ekoil ,Tamil Nadu ,
× RELATED இஸ்லாத்தை தழுவிய பிற்படுத்தப்பட்ட...