×

தவெக உடனான வைகோவின் ரகசிய திட்டம் உடைந்தது 2 எம்எல்ஏக்களும் மதிமுக பொதுக்குழுவை புறக்கணித்தனர்: சவால் விட்ட துரை வைகோ கூட்டத்துக்கு வராததால் பரபரப்பு

சென்னை: தவெக உடனான வைகோவின் ரகசியம் திட்டம் உடைந்ததால், இரு எம்எல்ஏக்களும் மதிமுக பொதுக்குழுவை புறக்கணித்தனர். அவர்களை அழைத்து வருவதாக கூறி சவால் விட்ட துரை வைகோவும் பொதுக்குழுவை புறக்கணித்ததால் மதிமுகவில் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கலைஞர் மறைவுக்கு பின்பு, 2017 முதல் திமுக அணியில் மதிமுக இடம் பெற்றுள்ளது.

அன்று ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் காலகட்டத்தில் தொடங்கிய திமுக-மதிமுக நெருக்கம், 2019 நாடாளுமன்ற தேர்தல், 2021 சட்டமன்ற தேர்தல், 2024 நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 2026 சட்டமன்றத் தேர்தல் என சுமார் 9 ஆண்டுகளாக நீடித்து வந்துள்ளது. இந்நிலையில், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வென்றது. மெஜாரிட்டிக்கு 118 தொகுதிகள் வேண்டும் என்பதால், திமுக கூட்டணியில் வென்ற கட்சிகளின் ஆதரவுடன் மைனாரிட்டி அரசை அமைத்துள்ளது.

தவெக அரசுக்கு ஆதரவு கொடுத்தாலும் திமுக கூட்டணியில் தொடர்கிறோம் என்று கூறி வந்தனர். ஆதரவு கொடுத்த கம்யூனிஸ்ட் கட்சிகளை தவிர மற்ற கட்சிகளுக்கு அமைச்சர் பதவியை தவெக அரசு கொடுத்துள்ளது. இதனால் ஆதரவு கொடுத்த கட்சிகள் தவெக அரசிலும் பங்கேற்று இணக்கமான அணுகுமுறையை கடைப்பிடித்து வருகின்றன. இந்த சூழலில், அடுத்ததாக மதிமுகவும் அதே அரசியல் திசையை நோக்கி நகரும் அறிகுறிகள் தென்படுவதாக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது.

அதற்கு ஏற்ப திருச்சி சென்ற முதல்வர் விஜய்யை, துரை வைகோ நேரில் வரவேற்றது அக்கட்சியினர் மத்தியில் பேசும் பொருளானது. மேலும், முதல்வர் விஜய்யை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சமீபத்தில் நேரில் சந்தித்து பேசியதும் அந்த சந்தேகத்தை அதிகப்படுத்தியது. எனவே திமுக கூட்டணியில் இருந்து வைகோ வெளியேறுகிறாரா என்ற கேள்வி எழுந்தது. இதனால் தவெக கூட்டணியில் மதிமுக இடம்பெறப் போகிறது என்ற பேச்சு எழுந்தது.

இதற்கு எல்லாம் மதிமுக பொதுக்குழுவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என வைகோ வெளிப்படையாக தெரிவித்தார். இதனால் சென்னையில் நடைபெறும் பொதுக்குழுவில் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி, தவெக கூட்டணியில் இணைவது குறித்து முடிவு எடுக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு தமிழக அரசியல் களத்தில் எழுந்தது. இந்நிலையில், சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று முன்தினம் அக்கட்சியின் உயர்நிலைக் குழு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு அவைத் தலைவர் அர்ஜுனராஜ் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் வைகோ மற்றும் 17 உயர்நிலைக் குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக எம்எல்ஏக்கள் ராஜேந்திரன் (கடையநல்லூர்), செந்தில் செல்வன் (சீர்காழி) ஆகியோர் அழைக்கப்பட்டனர். இதில் கடையநல்லூர் ராஜேந்திரன் மட்டுமே கூட்டத்தில் கலந்து கொண்டார். செந்தில் செல்வன் எம்எல்ஏ இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

மேலும் திமுக கூட்டணியில் இருந்து விலகுவதை அவர் விரும்பவில்லை என்றும், இதனால் அவர் இந்த கூட்டத்தை புறக்கணித்ததாகவும் கூறப்படுகிறது. இதனிடையே அவர் திமுகவில் இணைய இருப்பதாக வெளிப்படையாக அறிவித்துவிட்டார். இதற்கிடையே, திமுக கூட்டணியில் இருந்து விலகுவதோடு 2 எம்எல்ஏக்களையும் ராஜினாமா செய்ய வைத்து தேர்தலை சந்திக்க வைகோ முயன்று வந்தார். இது தொடர்பாக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்ற பரபரப்பு எழுந்தது.

இதற்கிடையே, மதிமுகவையும் தவெக கூட்டணியில் இழுப்பது தொடர்பாக வைகோவிடம் தவெக தரப்பில் இருந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. டெல்லி பிரநிதி பதவியை தருவதாக வைகோவுக்கு ஆசை காட்டியுள்ளனர். தற்போது அந்த பதவியை ஜனநாயகன் திரைப்பட தயாரிப்பாளர் வெங்கட நாராயணாவுக்கு வழங்கி விட்டனர்.

இதனால் இரண்டு மதிமுக எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய வைப்பதோடு, அதன் மூலம் நடக்கக்கூடிய இடைத்தேர்தலில் கடையநல்லூர் தொகுதியில் மூத்த உறுப்பினராக வைகோவை நிறுத்தி வெற்றி பெற வைக்கிறோம் என்று தவெக தரப்பில் இருந்து உறுதி அளித்துள்ளனர். வைகோ வெற்றி பெற்ற உடன் அமைச்சர் பதவி வழங்கி, செல்வம் கொழிக்கக்கூடிய முக்கிய இலாகாக்களில் ஏதாவது ஒன்றை ஒதுக்குவதாகவும் ஆதவ் தரப்பில் இருந்து பேசப்பட்டதாக கூறப்படுகிறது.

தான் வகித்து வரும் பொதுப்பணித்துறையை கூட விட்டு தருவதாகவும் உறுதி அளித்துள்ளதாக வைகோவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. அதற்காக மதிமுக செய்ய வேண்டிய ஒன்றே ஒன்று தான், அது திமுகவுக்கு எதிராக தொடர்ந்து அவதூறாக பேசினால் மட்டும் போதும் என்று தவெக தரப்பில் இருந்து டீல் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. தவெக உடனான வைகோவின் ரகசிய திட்டம் தற்போது அரசியல் களத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தவெகவின் வார்த்தையில் மயங்கிய துரை வைகோ இரண்டு எம்எல்ஏக்களையும் பொதுக்குழுவுக்கு அழைத்து வருகிறேன் என்று சவால் விட்டு சென்றார். இந்த பரபரப்பான சூழ்நிலையில் நேற்று சென்னை அண்ணாநகரில் உள்ள தனியார் மண்டபத்தில் மதிமுகவின் பொதுக்குழு கூட்டம் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் கூடியது. இந்த கூட்டத்தில், கடையநல்லூர் எம்எல்ஏ ராஜேந்திரனும் பொதுக்குழு கூட்டத்தை புறக்கணித்து விட்டார்.

எம்எல்ஏக்கள் இருவரும் பொதுக்குழுவுக்கு வராததால், சவால் விட்டு சென்ற துரை வைகோவும் எந்த முகத்தை வைத்துக் கொண்டு கூட்டத்தில் கலந்து கொள்வது என்று பொதுக்குழுவை அவரும் புறக்கணித்து விட்டார். இதற்கிடையே, பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முதல் தீர்மானத்தில், ‘‘கடந்த 9 ஆண்டுகளாக திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் தொடர்ந்து வந்தது.

தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு முன்பே மே 1ம் தேதி வைகோ ஊடகங்களில் கூறியவாறு தமிழ்நாடு அரசியலில் அதிசயிக்கத்தக்க வகையில் தமிழ்நாட்டு மக்கள் சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகத்திற்கு பேராதரவை வழங்கி இருந்தனர். தேர்தல் முடிவுகள் வந்த பின்னர் அரசியல் களத்தில் நடைபெற்ற திரை மறைவு பேரங்கள், மக்கள் வழங்கியத் தீர்ப்புக்கு எதிராக இருந்ததை அனைவரும் அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.

இந்தச் சூழ்நிலையில், மதிமுக இனியும், திமுக தலைமையிலான கூட்டணியில் தொடரக் கூடாது என்று மதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் தங்கள் கருத்தை வெளிப்படுத்தி இருக்கின்றனர். எனவே திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இருந்து விலகிக் கொள்வது என்று பொதுக்குழு முடிவு செய்கிறது. தேர்தல் வரும்போது கூட்டணி குறித்து தக்க முடிவுகளை மதிமுக மேற்கொள்வது என்றும் இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது உள்ளிட்ட 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Tags : Vaiko ,Thaveka ,MDMK ,Chennai ,
× RELATED மாணவர்களுக்கான அடையாள அட்டையில் சாதி...