சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், நடப்பு கல்வி ஆண்டிற்கான கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு (Additional Enrollment) தமிழக அரசு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. அரசு கல்லூரிகளில் 20% கூடுதல் இடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 15% கூடுதல் இடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உள்ள சுயநிதி பாடப்பிரிவுகளுக்கு (Self-financed courses) 10% கூடுதல் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் உயர்கல்வித்துறையின் கல்லூரிக் கல்வி இயக்ககத்தின் கீழ் உள்ள 181 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 159 பாடப்பிரிவுகளில் 1,26,959 சேர்க்கை இடங்கள் உள்ளன. அதன்படி, 2026-27ம் கல்வியாண்டு இளநிலைப் பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்ப பதிவு கடந்த மே மாதம் 7ம் தேதி தொடங்கியது. மொத்தமுள்ள 1,26,959 இடங்களுக்கு சுமார் 2,72,632 மாணவர்கள் விண்ணப்பித்தனர்.
சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு கடந்த 5ம் தேதியும், பொதுப் பிரிவு மாணவர்களுக்கு கடந்த 8ம் தேதியும் கலந்தாய்வு தொடங்கியது. கல்லூரிகளில் நேரடியாக நடைபெற்ற கலந்தாய்வில் மாணவர்கள் கலந்துகொண்டு இடங்களை தேர்வு செய்தனர். முதல் இரண்டு சுற்றுகள் மாணவர் சேர்க்கை முடிவடைந்துள்ள நிலையில், எந்தெந்த பாடப்பிரிவுக்கு மாணவர்கள் அதிகம் விருப்பம் தெரிவித்துள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கல்லூரிகளை பொறுத்தளவில் டாப்-10ல் முதலிடத்தில் சென்னை மாநில கல்லூரியில் 2380 இடங்களில் 1,709 இடங்களில் அதிகபட்சமாக மாணவர்கள் சேர்ந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து சேலம் அரசு கலைக் கல்லூரியில் 1702 இடங்களில் 1258 இடங்களும், மூன்றாவதாக கரூர் தான்தோன்றிமலை அரசு கலை கல்லூரியில் 1485 இடங்களில் 997 இடங்கள் நிரம்பியுள்ளது. ராணி மேரி கல்லூரியில் 2038 இடங்களில் 806 இடங்கள் நிரம்பி உள்ளன.
மொத்த மாணவர் சேர்க்கையில் நேற்றைய நிலவரப்படி, 58.7% இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளது. கல்வித் தரம் குறைதல், போதிய ஆசிரியர்கள் இல்லாதது போன்ற காரணங்களால் அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருவதாக கல்வியாளர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
இந்நிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் கூடுதலாக மாணவர் சேர்க்கைக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. நடப்பாண்டில் கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கு மாணவர்களிடையே விண்ணப்பங்கள் பெருமளவில் அதிகரித்துள்ளன. மதிப்பெண் பெற்றும் இடம் கிடைக்காமல் தவிக்கும் ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு உயர் கல்வி வாய்ப்பை உறுதி செய்ய இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கல்லூரிகளில் உள்ள ஆய்வகம், வகுப்பறை மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளைப் பொறுத்து இந்த கூடுதல் சேர்க்கை நடத்தப்படும்.
